விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 14 டிசம்பர், 2021

நான்மணிக்கடிகை - ஓர் அறிமுகம் - உரையாளர் - வை.வேதரெத்தினம் !

நான்மணிக் கடிகைஓர் அறிமுகம் !

-----------------------------------------------------------------------------------------------

நான்மணிக்கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் எனப்படும் நல்லிசைப் புலவர். நாகனார் என்னும் பெயருடைய இவர் விளம்பி என்னும் ஊரில் பிறந்தமையாலோ, இருந்தமையாலோ விளம்பி நாகனார் என்று வழங்கப்பட்டார் எனக் கொள்ளல் வேண்டும். இவர் கடைச் சங்கப் புலவர் எனக் கொள்ளப்படுதலின், இவரது காலம் கி.பி 200 –க்கு முற்பட்டதெனக் கருதலாம் !

 

இவர் இயற்றிய இந்நூலின் காப்புச் செய்யுளான் (1, 2) இவரது சமயம் வைணவம் என்பது தெளிவாகிறது !

 

நான்மணிக் கடிகைஎன்னும் இந்நூற் பெயர், நந்நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட ஒருவகை அணிகலன் என விரியும். கடவுள் வாழ்த்து உட்பட 106 வெண்பாக்களால் இந் நூல் யாக்கப்பெற்றுள்ளது ! இவற்றுள் 103 வெண்பாக்கள் நேரிசை அல்லது இன்னிசை வெண்பாவான் அமைந்திருக்கையில் மூன்று (1, 30, 61) மட்டும்  பஃறொடை வெண்பாவான் அமைந்துள்ளன !

 

ஒவ்வொரு செய்யுளிலும் புலவர் நான்கு நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார். வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, நல்லொழுக்கம், இன்சொல், நேர்மை, அன்புடைமை, கொல்லாமை  போன்ற கருத்துகளை எடுத்துரைக்கும் நாகனார், ஓரோர் இடங்களில் முற்பிறவி புண்ணியம் (நல்வினை), பாவம் (தீவினை) ஆகிய கருத்துகளையும் உரைப்பதாக வருவது சற்று நெருடலாக உள்ளது !

 

கி.பி 500 –க்குப் பின்பு தான் தமிழ் நாட்டில் வடமொழி நுழையத் தொடங்கியது. முற்பிறவி, மறுபிறவி, புண்ணியம் (நல்வினை), பாவம் (தீவினை), வீடுபேறு (30, 59, 106)) போன்ற கருத்துகளும் புகத் தொடங்கின. ஆனால் கி.பி. 200 –க்கு முன்பே  தோன்றிய இந்நூலில் இக்கருத்துகள் இடம்பெற்றிருப்பது வியப்பைத் தருகிறது ! இஃதன்றி அசனம் (82), ஆசாரம் (96) போன்ற வடமொழிச் சொற்கள் செய்யுளில் இடம்பெற்றிருப்பதும், வியப்பூட்டுகிறது !

 

ஓலைச் சுவடிகளிலிருந்து படியெடுக்கையில் இத்தகைய இடைச்செருகல்கள் நடந்திருக்கலாம் என்பதே என் கருத்து ! எப்படியாயினும் போற்றத்தக்க கருத்துகளை உள்ளுறையாகக் கொண்டிருக்கும் இந்நூலைத் தமிழன்பர்கள் படித்து  இன்புறுவார்களாக !

 

செய்யுள்கள் பண்டைய தமிழ் நடையில் அமைந்தவை என்பதால், இக்காலத்தவர் செய்யுள்களின் பொருளை விளங்கிக் கொள்ளல் சற்றுக் கடினமானதே. அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டும் என்னும் உயரிய நோக்கில், எளிய தமிழில் தெளிவுரை தந்திருக்கிறேன். படித்துப் பயன்பெறுவீர்களாக !

 

----------------------------------------------------------------------------------------------

 

வை.வேதரெத்தினம்,

(ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

ஓசூர்.635 110)

-----------------------------------------------------

இருப்பு: 28/25, டைட்டான் நகரியம்,

மத்திகிரி,

ஓசூர். 636 110

------------------------------------------------------

 

மின்னஞ்சல்:

Veda70.vv@gmail.com

vedarethinam76@gmail.com

------------------------------------------------------

[தி.;2052, நளி (கார்த்திகை) 28]

{14-12-2021}

-----------------------------------------------------