விரும்பும் பதிவைத் தேடுக !

ஈத்துண்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈத்துண்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 டிசம்பர், 2021

ஈத்துண்பான் என்பான் - பாடல்.62 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (62)

-------------------------------

ஈத்துண்பா னென்பான் இசைநடுவான்; மற்றவன்

கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்

பாடறியா தானை இரவு.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான், மற்று அவன்

கைத்து உண்பான் என்பான் காங்கி எனப்படுவான், தெற்ற

நகை ஆகும் நண்ணார் முன் சேறல், பகை ஆகும்

பாடு அறியாதானை இரவு.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

தன்னலம் துறந்து பிறர் நலம் கருதி அனைவர்க்கும் கொடுத்து உண்ணும் குணமுடையவன், இவ்வுலகில் நிலையான புகழை ஈட்டுவான் !

அவ்வாறு கொடுத்து  உண்ணும்  குணம் படைத்தவன் கையிலிருப்பதைப் பறித்து உண்பவன் பேரவா  உடைய பிசினேறி  எனப்படுவான் !

தன்னை விரும்பாத மனிதனிடம் தானாக விரும்பிச் சென்று ஒன்றைப் பெறுதல் தெளிவான இகழ்ச்சிக்கு இடமாகிவிடும் !

அதுபோல், தனது தகுதியை மறந்து ஒழுகும்  ஒரு மனிதனிடம், ஏதாவது பொருள் வேண்டி இரந்து செல்லல், பகைமையை வளர்க்க இடம் தந்துவிடும் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

ஈத்து உண்பான் என்பான் = பிறர்க்குக் கொடுத்து  உண்பவன் எனப்படுபவன் ; இசை நடுவான் = உலகத்தில் தன் புகழை நிறுத்துவான் ; அவன் கைத்து உண்பான் = அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் ; காங்கி எனப்படுவான் = அவா உடையன் எனப்படுவான் ; நண்ணார் முன் = விரும்பாதவர் முன் ; சேறல் = ஒன்றை விரும்பி அடைவது ; தெற்ற நகையாகும் = தெளிவாகவே இகழ்ச்சி உண்டாகும் ; பாடு அறியாதானை = தனது தகுதி அறியாதவனை ; இரவு = இரந்து செல்லல் ; பகையாகும் = பகைமைக்கே இடமாகும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

பிறர்க்குக் கொடுத்து உண்பவன் புகழ் உடையவன் ஆவான் ; அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையே பறித்து உண்பவன் அவா மிக்கவன் ஆவான் ; தன்னை விரும்பாதார் முன் தான் விரும்பிச் செல்லல் தெளிவான இகழ்ச்சிக்கு இடமாகும். தகுதி அறியாதவனை ஒன்று வேண்டிச் செல்லல், பகைக்கு இடமாகும் !

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

"நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

---------------------------------------------------------------------------------------------