விரும்பும் பதிவைத் தேடுக !

போதினான் நந்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போதினான் நந்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 நவம்பர், 2021

போதினான் நந்தும் புனை தண்டார் - பாடல்.50 - வை.வேதரெத்தினம் உரை!

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை நாகனார்  வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (50)

---------------------------

போதினான் நந்தும் புணைதண்டார் மற்றதன்

தாதினான் நந்தும் சுரும்பெல்லாந்தீதில்

வினையினான் நந்துவர் மக்களுந் தத்தம்

நனையினான் நந்தும் நறா.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------

போதினால் நந்தும் புனை தண் தார் மற்று அதன்

தாதினால் நந்தும் சுரும்பு எல்லாம்தீது இல்

வினையினால் நந்துவர் மக்களும் தம் தம்

நனையினால் நந்தும் நறா .

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

மாலையில் தொடுக்கப் பெறும் பூக்களின் தன்மைக்கும் மணத்திற்கும்   ஏற்பவே, அம் மாலையின் மதிப்பும்,  உயர்நிலையை  அடைகிறது !

தீதற்ற பூக்களில் சுரக்கும்  இனிமை நிறைந்த  தேனை உண்பதால் தான்,  வண்டு இனமும்  நலமுடன் செழிப்படைந்து  வாழ்கிறது !

கெடுநோக்கம் துளியேனும் கலவாத நற்செய்கைகளால் தான் நன்மக்கள் மிகுந்த புகழையும்   உயர்வையும் தம்வாழ்வில்  அடைகின்றனர் !

அதுபோல், துளித் துளியாய்ச்  சுரந்து நிற்கும் மலர்களின்  வகைக்கும்  தன்மைக்கும்  ஏற்பவே தேனின்  நற்குணமும்   உயர்ந்தநிலை அடைகிறது !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

புனை தண் தார் = தொடுக்கப்படும் குளிர்ந்த மாலை ; போதினால் = பூக்களால் ; நந்தும் = மிக்கு விளங்கும் ; சுரும்பு எல்லாம் = வண்டுகள் எல்லாம் ; அதன் தாதினால் = அப் பூக்களின் தேனால் ; நந்தும் = மிக்குப் பொலியும் ; மக்களும் = உலகத்து மக்களும் ; தீது இல் வினையினால் = குற்றமில்லாத நற்செய்கைகளால் ; நந்துவர் = உயர்வு அடைவர் ; நறா = தேன் வகைகள் ; தம் தம் (தத்தம்) = தாம் தாம் இருக்கும் ; நனையினால் = பூவரும்பின் வகையினால் ; நந்தும் = பெருகி நல்லனவாகும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

மலர் மாலை பூவினால் பொலிவடையும்;  வண்டுகள் அப் பூவிலுள்ள தேனால் நன்மை பெறும் ; மக்கள் தம் நற்செய்கைகளால் உயர்வடைவர் ; அதுபோல், தாமிருக்கும் மலர் வகைகளுக்கேற்பத் தேனும் பெருகி வளம் பெருக்கும் !

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),13]

{29-11-2021}

-----------------------------------------------------------------------------------------------