விரும்பும் பதிவைத் தேடுக !

மண்ணியறிப மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மண்ணியறிப மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 நவம்பர், 2021

மண்ணி அறிப மணி நலம் - பாடல்.05 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக் கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர்.  கி.பி. 2 –ஆம் நூற்றாண்டில் தோன்றியது இவ்விலக்கியம் ! இதிலிருந்து ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

 பாடல் (05)

-------------------

 

மண்ணி   அறிப   மணிநலம்;   பண்ணமைத்து

ஏறியபின்   அறிப    மாநலம்;   மாசறச்

சுட்டறிப,  பொன்னின்   நலம்காண்பார்;  கெட்டறிப

கேளிரான்  ஆய பயன் !

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

 

மாணிக்கம் முதலான மணிகளின் இயல்பை ஆய்ந்து அறியும் வல்லுநர்கள், அவற்றை நீரால் கழுவி அறிவார்கள் !

 

குதிரையின் இயல்பை ஆய்ந்து அறியும் வல்லுநர்கள், அதன் மேல் சேணம் பூட்டி ஏறி நடத்திச் சென்று அறிவார்கள் !

 

பொன்னின் இயல்பை ( மாற்றினை ) அறியும் வல்லுநர்கள் அதனை நெருப்பில்  புடமிட்டு உருக்கி அறிவார்கள் !

 

ஆனால், உறவினர்களின் இயல்பை அறிய விரும்பும் மனிதன், அவன் வறுமைக்கு உள்ளாகித் துன்பப்படும் காலத்தில் தான்  அறியமுடியும் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

மணி நலம் = மாணிக்கம் முதலான மணிகளின் நல்லியல்பை;  மண்ணி அறிப = நீரால் கழுவி அறிவார்கள்; மா நலம் = குதிரையின் நல்லியல்பை;  பண்ணமைத்து = அதன் மேற் சேணம் பூட்டி;  ஏறிய பின் அறிப = ஏறிய பின் அறிவார்கள்; பொன்னின் நலம் காண்பார் = பொன்னின் மாற்றை அறிபவர்கள் ; மாசு அற = பொன்னின் மாசு நீங்கும் வகையில்; சுட்டு அறிப = அதனை உருக்கி அறிவார்கள்; கேளிரான் ஆய பயன் =   உறவினர்களால் உண்டாகும் பயனை; கெட்டு அறிப = செல்வமெல்லாம் கெட்டு வறிய நிலை அடையும் காலத்தில் அறிவார்கள்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------------

ஒளிமணிகளை நீரால் கழுவி அதன் தரம் அறிவார்கள் ! புரவியின் இயல்பை சேணம் பூட்டி  அதில் ஏறி அறிவார்கள் ! பொன்னின் தரத்தைப்  புடம் போட்டு அறிவார்கள் ! உறவினர்களின் இயல்பை வறுமைக் காலத்தில் தான் அறிய முடியும் !


-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052, நளி(கார்த்திகை)01]

{17-11-2021}

-------------------------------------------------------------------------------------------------