விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று ! இந்நூல்
சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
--------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (66)
-----------------------------
திரியழல் காணின் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப – ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டு முலகு.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
திரி அழல் காணின் தொழுப; விறகின்
எரி அழல் காணின் இகழ்ப – ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
வீட்டில் பயன்படுத்தும் கைவிளக்கின் (பூசையறை விளக்கு) திரியிலிருந்து
எழும் சுடர் மிகச் சிறியதுதான்; ஆனாலும் அந்தச்
சுடரைப் பார்க்கும் போது அதை உயர்வாக மதித்து மக்கள் கைகூப்பி வணங்குகின்றனர் !
அடுப்பில் இடப்பட்ட விறகிலிருந்து எழும் தீச்சுடர் அளவில்
பெரியதுதான்: ஆனாலும் அதைக் காணும் மக்கள் கைகூப்பித் தொழுவதில்லை; மாறாக இகழ்வாகவே
எண்ணி நோக்குகிறார்கள் !
ஒருகுடும்பத்தில் பிறந்திருக்கும் மூத்த பிள்ளை பள்ளிக்கே
செல்லாதவன்; படிப்பறிவு இல்லாதவன்; அகவையில் மிக முதிர்வானவன்; அதற்காக அவனை ஊர்மக்கள்
போற்றிப் பாராட்டுவதில்லை !
ஆனால், அந்தக் குடும்பத்தில் பிறந்திருக்கும் இளைய பிள்ளை
படித்தவன்; கல்வியறிவு நிறைந்தவன்; அகவையில் சிறியவனானாலும், இந்த உலகம் அவனைத் தான்
போற்றிப் பாராட்டுகிறது ! அறிவுக்குத் தான் பாராட்டு – அகவைக்கு அன்று !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
---------------------------
திரி அழல் காணின் = விளக்குத்
திரியில் எரியும் சுடரைக் கண்டால் ; தொழுப = அது சிறிதாய் இருப்பினும் உலகத்தார் கைகூப்பி வணங்குவர் ; விறகின் = விறகிலே ; எரி அழல் காணின் = எரியும்
சுடரைக் கண்டால் ; இகழ்ப = அது பெரிதாய் இருப்பினும் உலகத்தார் மதியாது இகழ்வர் ; ஒரு குடியில் = ஒரு குடும்பத்தில் ; கல்லாது = படிக்காமல் ; மூத்தானை = ஆண்டு
முதிர்ந்து விட்டவனை ; கைவிட்டு = மதியாமல் விடுத்து ; கற்றான் = படித்தவனது ; இளமை = இளமைப்
பருவத்தையே ; உலகு பாராட்டும் = உலகத்தார்
பாரட்டுவர்.
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
திரியில் எரியும் சுடரைக் கண்டால் அது சிறிதாய் இருப்பினும்
உலகத்தார் தொழுவர் ; விறகில் எரியும் சுடரை, அது பெரிதாய்
இருப்பினும் தொழாது
இகழ்வர் ; ஒரு குடும்பத்திலேயே படியாதவன் மூத்தவனாயினும் மதியார் ; படித்தவன்
இளைஞாயினும் பாராட்டுவர்.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),18]
{04-12-2021}
----------------------------------------------------------------------------------------------