விரும்பும் பதிவைத் தேடுக !

நல்லார்க்கும் தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்லார்க்கும் தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

நல்லார்க்குந் தம்மூர் என்று - பாடல்.84 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

 

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (84)

--------------------------------

 

நல்லார்க்குந் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்

செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லையல்லாக்

கடைகட்குந் தம்மூரென் றூரில்லை தங்கைத்

துடையார்க்கும் எவ்வூரு மூர்.

 

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

 

நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊரில்லை; நன்னெறிச்

செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊரில்லை - அல்லால்

கடைகட்கும் தம் ஊர் என்று ஊரில்லை ; தம் கைத்து

உடையார்க்கும் எவ்வூரும் ஊர்.

 

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

 

கல்வியறிவிற் சிறந்தவர்களை எல்லா ஊராரும் வரவேற்று வழிபடுவர்; உணவளித்து உண்பிப்பர்; . ஆகையால் கற்றார்க்கு தம் ஊரென்று எவ்வூரும் இல்லை. எல்லா ஊர்களும் அவரது ஊர்களேயாம் !

 

தவநெறியில் வழுவாது ஒழுகும் சான்றோர்களை எவ்வூராரும் வரவேற்று வழிபடுவர்; உணவளித்து ஓம்புவர்; ஆகையால் தவத்தோர்க்குத் தம் ஊரென்று எவ்வூரும் இல்லை. எல்லா ஊர்களும் அவரது ஊர்களேயாம் !

 

கீழ்மக்களுக்குத் தம் ஊரிலும் மதிப்பிருக்காது ; பிற ஊர்களிலும் மதிப்பிருக்காது; அவர்களுக்கு உணவளித்து உண்பிக்க எவ்வூரிலும் எவரும் முன்வாரார்; ஆகையால் கீழோர்க்கு தம் ஊரென்று எவ்வூரும் இல்லை ! எல்லா ஊரும் அயலூரே !

 

செல்வந்தர்களுக்குச் செல்லும் இடமெல்லாம் ஆலவட்டம் சுழற்றுவதற்கு ஆள்கள்  நிரம்பவே இருப்பர்; ஆகையால் கையில் பொருள் உடையோர்க்கு தம் ஊரென்று எவ்வூரும் இல்லை. எல்லா ஊர்களும் அவரது ஊர்களேயாம் !

 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------------

 

நல்லார்க்கும் = கல்வியறிவில் நல்லார்க்கும் ; தம் ஊர் என்று = தமக்குரிய ஊரென்று ; ஊரில்லை = ஓரூருமில்லை, எல்லாம் அவரூரேயாம் ; நல் நெறி = தவ நெறியில் ; செல்வார்க்கும் = ஒழுகும் அருந் தவத்தோர்க்கும் ; தம் ஊர் என்று = தமக்குரிய ஊரென்று ; ஊரில்லை = ஓர் ஊர் இல்லை ; அல்லா = மேலோர் அல்லாத ; கடைகட்கும் = கீழ்மக்களுக்கும் ; தம் ஊர் என்று = தமக்குரிய ஊர் என்று ; ஊர் இல்லை = ஓரூருமில்லை ; தம் கைத்து = தமது கையில் ; உடையார்க்கும் = பொருள் உடையவர்க்கும் ; எவ்வூரும்  ஊர் = எவ்வூரும் தம் ஊரேயாம் .

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

 

கற்றார்க்கும் எவ்வூரும் தம்மூர் ; தவத்தோர்க்கும் எவ்வூரும் தம்மூர் ; கீழ்மக்கட்கும் எவ்வூரும் தம்மூர் ; தம் கையில் பொருள் உடையார்க்கும் எவ்வூரும் தம்மூர்.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

----------------------------------------------------------------------------------------------