விரும்பும் பதிவைத் தேடுக !

மதி மன்னும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதி மன்னும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 நவம்பர், 2021

மதி மன்னும் மாயவன் - பாடல்.01- வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. 106 பாடல்களைக் கொண்ட இந்நூலில் முதலாவது பாடல் கடவுள் வாழ்த்து ! இதோ அந்தப் பாடல் !

 

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (01)

---------------------------

மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்

கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்

முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப்

புதுமலர் ஒக்கும் நிறம்.

 

----------------------------------------------------------------------------------------------

 

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-------------------------------------------------

மதி, மன்னும் மாயவன் வாள்முகம் ஒக்கும்

கதிர் சேர்ந்த ஞாயிறு, சக்கரம் ஒக்கும்

முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர், மற்று அவன் கண் ஒக்கும், பூவைப்

புது மலர் ஒக்கும் நிறம்.

 

-----------------------------------------------------------------------------------------------

 

கருத்துரை:

--------------------

 

விண்ணில் வலம் வருகின்ற முழுமதியானது, திருமாலின் ஒளி பொருந்திய திருமுகத்தை ஒத்திருக்கும் !

 

உலகத்தை உய்விக்க உலாவருகின்ற  கதிர்மிகுந்த சூரியனானது, திருமாலின் சக்கரப் படையை ஒத்திருக்கும் !

 

நீர் நிறைந்த கழனிகளில் மலர்ந்திருக்கும் செந்தாமரைப் பூ, திருமாலின் கண்களை ஒத்திருக்கும் !

 

அதுபோல், காயா மரத்தில் பூத்திருக்கும் பூவின் நீல வண்ணமானது, திருமாலின் மேனியின் நிறத்தை ஒத்திருக்கும் !

 

------------------------------------------------------------------------------------------------

 

சொற்பொருள்:

---------------------------------

மதி = திங்கள்;  மன்னும் மாயவன் = அழிதல் இல்லாத திருமாலினது; வாள் முகம் ஒக்கும் = ஒளியையுடைய  திருமுகத்தை ஒத்திருக்கும்; கதிர் சேர்ந்த ஞாயிறு = ஒளி மிகுந்த  சூரியன்; சக்கரம் ஒக்கும் = அவனது சக்கரப் படையை ஒத்திருக்கும்; முது நீர்ப் பழனத்து = வற்றாத நீரையுடைய கழனிகளில் முளைத்த; தாமரைத் தாளின் = செந்தாமரைத் தண்டினின்றும்;  எதிர்மலர் = தோன்றும் செந்தாமரைப்பூ;  அவன் கண் ஒக்கும் = அவனது கண்களை ஒத்திருக்கும்; பூவைப் புதுமலர் = காயாமரத்தின் புதுப்பூ; நிறம் ஒக்கும் = அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும்.

 

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------

திருமாலின் முகம் போன்றது முழுநிலவு;  அவன் சக்கரப் படையைப் போன்றது சூரியன்;  கண்களைப் போன்றது செந்தாமரைப் பூ;  நீல நிற உடலைப்  போன்றது காயாமலர்; இந்த உலகமே அவனை எதிரொலிக்கும் இயற்கைப் படைப்பு ! அவன் அழிவற்றவன் !

 

 

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,துலை (ஐப்பசி),30]

{16-11-2021}

-------------------------------------------------------------------------------------------------