விரும்பும் பதிவைத் தேடுக !

சாவாத இல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாவாத இல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

சாவாத இல்லை பிறந்த உயிர் - பாடல்.79 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (79)

-------------------------------

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்

தாவாத இல்லை வலிகளும்மூவாது

இளமை யிசைந்தாரும் இல்லைவளமையிற்

கேடின்றிச் சென்றாரும் இல்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்;

தாவாத இல்லை வலிகளும்மூவாது

இளமை இசைந்தாரும் இல்லைவளமையில்

கேடு இன்றிச் சென்றாரும் இல்..

-------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

பிறந்திருக்கும் அத்துணை உயிர்களும் என்றாவது ஒருநாள் மடிந்துதான் தீரும்; இறவாத உயிர்கள் என்று உலகில் எதுவும் இல்லை !

உடல் வலிமை, மன வலிமை, அறிவு  வலிமை என்று எந்த வலிமையானாலும், அவை அழியக் கூடியதே; அழியாத வலிமை என்று உலகில் எதுவுமில்லை !

இளமை என்பது காலப் போக்கில் முதிர்வை அடைவது இயற்கை;  மூப்பு அடையாத இளமை என்று இந்த உலகில் எதுவுமில்லை !

அதுபோல், செல்வ வளமும் நேரம் வந்தால் குறையக் கூடியதே; குறையாத செல்வம் என்று இவ்வுலகில் எதுவும் இல்லை !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

பிறந்த உயிரெல்லாம் = பிறந்த உயிர்கள் எல்லாவற்றுள்ளும் ; சாவாத இல்லை = இறவாதன இல்லை ; வலிகளும் = வலிமைகளும் ; தாவாத இல்லை ; கெடாதன இல்லை ; மூவாது = எஞ்ஞான்றும் மூப்படையாமல் ; இளமை = இளமையை ; இசைந்தாரும் இல்லை = நிலையாய்ப் பெற்றவர்களும் இல்லை ; வளமையில் = செல்வத்தில் ; கேடு இன்றி = குறைதல் இல்லாமல் ; சென்றாரும் = எஞ்ஞான்றும்  செல்வராய் ஓங்கினவரும் ; இல் = இல்லை.

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

உலகத்தில் இறவாத உயிர்களும் இல்லை ; கெடாத வலிமைகளும் இல்லை ; மூவாத இளமைகளும் இல்லை ; குறையாத செல்வங்களும் இல்லை.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

--------------------------------------------------------------------------------------------