விரும்பும் பதிவைத் தேடுக !

தேவர் அனையர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவர் அனையர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

தேவர் அனையர் புலவரும் - பாடல்.76 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (76)

--------------------------------

தேவ ரனையர் புலவருந் தேவர்

தமரனையர் ஓரூர் உறைவார்தமருள்ளும்

பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்

கற்றாரைக் காத லவர்

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

தேவர் அனையர் புலவரும்; தேவர்

தமர் அனையர் ஓரூர் உறைவார்தமருள்ளும்

பெற்றன்னர் பேணி வழிபடுவார்; கற்றன்னர்

கற்றாரைக் காதல் அவர்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

தாய்மொழியில் பற்றும் ஆளுமையும் அறிவுத் திறனும்  மிக்க  ஆன்றோர்கள், “புலவர்எனப்படுவர்; இவர்கள் வானுலக மாந்தர்களுக்கு இணையான உயர்ந்த மனிதர்கள் !

இத்தகைய உயர்ந்த மனிதர்கள் உறைகின்ற ஊரில் வாழ்கின்ற  நற்பேறு பெற்ற மக்கள் அனைவரும், வானவர்களின் உறவினர்களுக்கு இணையான சீரிய  மனிதர்கள் !

இத்தகைய சீரிய மனிதர்களுள்ளும், “புலவர்பெருமக்களை விரும்பி அவர்களின் வழிநடந்து, பின்பற்றி  வழிபடுபவர்கள், அவர்களின் அருள்பெற்ற ஆளுமைகள் ஆவார்கள் !

இத்தகைய மேன்மை பெற்றபுலவர்கள் பால் அன்பு செலுத்தி, அவர்களின் அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கொள்பவர்கள், அப்புலவர்களுக்கே இணையானவர்கள் !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

புலவரும் = கல்வியறிவு உடைய புலவர்களும் ; தேவர் அனையர் = தேவருக்கு ஒப்பாவார்கள் ; ஓர் ஊர் உறைவார் = அப்புலவர்கள் உள்ள ஊரில் வாழ்பவர்கள் ; தேவர் தமர் அனையர் = அத் தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவார்கள் ; தமருள்ளும் = அவ்வாறு உறைந்து உறவானவருள்ளும் ; பேணி வழிபடுவார் = அப்புலவரை விரும்பி வழிபட்டவர்கள் ; பெற்றன்னர் = அவர்தம் அருள் பெற்றாரை ஒப்பர் ; கற்றாரைக் காதலவர் = புலவரைக் காதலித்து ஒழுகுவார் ; கற்றன்னர் = அப்புலவரை ஒப்பக் கற்றவரே ஆவர்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

புலவர்கள் தேவரை ஒப்பர் ; அவர் ஊரில் உறைவார் அவர் உறவினரை ஒப்பர் ; அவருள்ளும் பேணி வழிபடுவார் அவர் அருள் பெற்றாரை ஒப்பர் ; காதலித்து ஒழுகுவார் அக் கற்றாரையே ஒப்பர்.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{12-12-2021}

---------------------------------------------------------------------------------------------