விரும்பும் பதிவைத் தேடுக !

அலைப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலைப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 நவம்பர், 2021

அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் - பாடல்.28 - வை.வேதரெத்தினம் உரை !

சங்க காலத்திய நூலான நான்மணிக்கடிகை  106 வெண்பாக்களைக் கொண்டது.  ஒவ்வொரு பாடலிலும்  நந்நான்கு கருத்துகள்  வலியுறுத்தப்படுகின்றன ! மொத்தம் 106 பாடல்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (28)

---------------------------

அலைப்பான்    பிறவுயிரை    ஆக்கலும்    குற்றம்

விலைப்பாலில்    கொண்டூன்   மிசைதலும்   குற்றம்

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்

கொலைப்பாலும்   குற்றமே   யாம்.

------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

கொன்று உண்பதற்காக  ஆடு, மாடு, கோழி, பன்றி  போன்ற பிற உயிரினங்களை  இரைபோட்டு வளர்த்தல்  குற்றமாகும் !

விலைகொடுத்து வாங்கி வந்து , பிற உயிரினங்களின் இறைச்சியை  சமைத்துப் பக்குவபடுத்தி உண்பதும் குற்றமாகும் !

சொல்லக் கூடாத,   பண்பாடில்லாத,  அருவருப்பான   சொற்களைப் பிறரை நோக்கிச் சொல்லுதலும் குற்றமாகும் !

அதுபோல், மொழிக்கொலை, நட்புக் கொலை,  பண்புக் கொலை,  நம்பிக்கைக் கொலை போன்ற அனைத்துக்  கொலைகளும் குற்றமேயாகும் !

------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

அலைப்பான் = கொன்று உண்பதற்காக ;  பிற உயிரை = ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற பிற உயிர்களை ; ஆக்கலும் குற்றம் = வீட்டில் வளர்ப்பதும் குற்றம் ; விலைப்பாலின் = விலை கொடுத்து ; ஊன் கொண்டு = இறைச்சியைப் பெற்று வந்து ; மிசைதலும் குற்றம் = சமைத்து உண்பதும் குற்றமாகும் ;  சொலற்பால அல்லாத = சொல்லும் வகையின அல்லாத சொற்களை ;  சொல்லுதலும் குற்றம் = உரைத்தலும் குற்றம் ; கொலைப்பாலும் = மொழிக்கொலை, நட்புக் கொலை, பண்புக் கொலை, நம்பிக்கைக் கொலை போன்றவையும் ; குற்றமே ஆம் = குற்றமே ஆகும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

பிறவுயிர்களைக் கொன்று  உண்பதற்காக அவற்றை வளர்த்தலும் குற்றம் ; அங்ஙனம் கொல்லாமல் அவற்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்ணுதலும் குற்றம் ; சொல்லத் தகாதவற்றைச்  சொல்லலும் குற்றம் ; கொல்லலும் குற்றமேயாம் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}

------------------------------------------------------------------------------------------------