விரும்பும் பதிவைத் தேடுக !

படியை மடியகத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படியை மடியகத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 நவம்பர், 2021

படியை மடியகத்து இட்டான் - பாடல்.02 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. 106 பாடல்களைக் கொண்ட இந்நூலில் இரண்டாவது பாடலும் கடவுள் வாழ்த்தே ! இதோ அந்தப் பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (02)

--------------------------

படியை மடியகத் திட்டான் அடியினால்

முக்காற் கடந்தான் முழுநிலம்அக்காலத்து

ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்

அருமை யழித்த மகன்.

 

-----------------------------------------------------------------------------------------------

 

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------

படியை மடியகத்து இட்டான், அடியினால்

முக்கால் கடந்தான் முழுநிலம்அக்காலத்து

ஆ பனி தாங்கிய குன்று எடுத்தான், சோவின்

அருமை அழித்த மகன்.

-----------------------------------------------------------------------------------------------

 

கருத்துரை:

---------------------

எல்லா உலகங்களையும்  யசோதைக்குத் தன் வயிற்றினுள் வைத்துக் காட்டியவன் மணிவண்ணன் என்னும் கண்ணன் !

 

 

ஒரு அடியால் இந்த உலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும், மூன்றாவது அடியால் கீழுலகத்தையும் அளந்தவன் !

 

 

இந்திரன் பொழிந்த கல்மழையினின்று ஆனிரைகளைக் காக்க, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவன் !

 

 

அதுபோல்,அநிருத்தனை  மீட்கச் சென்றபோது எதிர்த்த பாணாசுரனை அவனது நெருப்பு மதிற் கோட்டையோடு அழித்தவன் !

 

-----------------------------------------------------------------------------------------------

 

சொற்பொருள்:

-----------------------------

படியைஉலகத்தை; மடியகத்து இட்டான் = தன் வயிற்றினுள் வைத்தான்;  அடியினால் = தன் திருவடிகளால்; முழு நிலம் = உலகங்கள் முழுமையும்; முக்கால் நடந்தான் = மூன்று முறைகளில் தாவியளந்தான் (ஒரு அடியால் நிலவுலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் கடந்து , மூன்றாவது அடியை மாபலியின் தலைமேல் வைத்துக் கீழுலகத்தையும் அளந்தனன்) ; அக்காலத்து = இந்திரன் கல்மழையைப் பெய்வித்த போது; ஆ பனி = ஆனிரைகளின் நடுக்கத்தை; தாங்கிய = தடுக்கும் பொருட்டு; குன்று எடுத்தான் = ‘கோவர்த்தனம்என்னும் மலையைக் குடையாகத் தூக்கினான்; சோவின்  அருமை = பாணாசுரனது அழித்தற்கு அரிய  நெருப்பு மதிலை; அழித்த மகன் = அழித்த பெருமானான திருமால்.

 

 

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

உலகத்தையே தன் வயிற்றினுள் அடக்கியவன்;  மூன்று உலகங்களையும்  மூன்றே அடிகளால் அளந்தவன்;  ஆனிரைகளைக் காக்க கோவர்த்தன மலையைப் பெயர்த்துக் குடையாகப் பிடித்தவன்;  பாணாசுரனை அழித்தவன், அழிவே இல்லாத இந்த மணிவண்ணன் !

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,துலை (ஐப்பசி),30]

{16-11-2021}

------------------------------------------------------------------------------------------------