விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 17 நவம்பர், 2021

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் - பாடல்.11 - வை.வேதரெத்தினம் உரை !

கடைச்சங்க காலமான கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இலக்கியம் நான்மணிக் கடிகை என்னும் நூல். கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டிருக்கும் இந்நூலில்  அனைத்துப் பாடல்களுமே வெண்பாக்களால் ஆனவை ! விளம்பி என்னும் ஊரைச் சேர்ந்த நாகனார் என்னும் புலவர் படைத்துள்ள இந்நூலில் இருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல்:  (11).

-----------------------

நிலத்துக்  கணியென்ப  நெல்லுங்  கரும்பும்;

குளத்துக்  கணியென்ப  தாமரை; பெண்மை

நலத்துக்  கணியென்ப  நாணந்  தனக்கணியாம்

தான்செல்  உலகத் தறம்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்;

-----------------------------------------------------------------------------------------------

நிலத்துக்கு  அணியென்ப  நெல்லும்  கரும்பும்;

குளத்துக்கு  அணியென்ப  தாமரை;  பெண்மை

நலத்துக்கு அணியென்ப  நாணம், தனக்கு அணியாம்

தான்செல்  உலகத்து அறம்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

பச்சைப் பசேலென்று காணப்படும்  நெற்பயிரும், கரும்பின் பயிரும் வயலுக்கு அழகென்று உலகத்தார் சொல்வார்கள் !

தாமரைக் கொடியும் இலையும் மலரும்  நிறைந்து இருக்கும் கண் கொள்ளாக் காட்சியே குளத்திற்கு  அழகு என்றும் உலகத்தார்  சொல்வார்கள் !

பெண்மையே அழகுதான்; எனினும் பெண்களிடம் காணப்படும் நாணம் தான் உயர்வான அழகு என்றும் உலகத்தார்  சொல்வார்கள் !

அதுபோல், மனிதன் செய்கின்ற அறச் செயல்கள் தான்  அவன்  எங்கு சென்றாலும் அவனுக்கு மதிப்பு மிக்க அழகைத் தருகிறது  என்றும் உலகத்தார் சொல்வார்கள் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------------

நெல்லும் கரும்பும் = நெற்பயிரும் கரும்புப் பயிரும் ; நிலத்துக்கு அணி என்ப = வயலுக்கு அழகு என்று சொல்லுவர் ; தாமரை = செந்தாமரைக் காடுகள் ; குளத்துக்கு அணி என்ப = குளங்ளுக்கு அழகு என்று சொல்லுவர் ; நாணம் = நாணப்படும் இயல்பு ; பெண்மை நலத்துக்கு = பெண் (தன்மைக்குரிய) கற்பாகிய ஒழுக்கத்துக்கு ; அணி என்ப = அழகு என்று சொல்லுவர் ; தான் செல் உலகத்து அறம் = தான் செல்கின்ற பிற ஊர்களுக்கு எல்லாம் துணையாகச் செய்யப்படும் அறச்  செயல்கள் ; தனக்கு அணியாம் = ஒருவனுக்கு அழகாகும்.;

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

நெல்லும் கரும்பும் கழனிக்கு அழகு;  தாமரைக்கொடி குளத்துக்கு அழகு ; நாணம் பெண்மைக்கு அழகு ; அறச்செயல்கள் ஆண்மைக்கு அழகாகும் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-------------------------------------------------------------------------------------------------

கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம் - பாடல்.10 - வை.வேதரெத்தினம் உரை !

ஒவ்வொரு பாடலிலும் நான்கு  நான்கு கருத்துகளைச் சொல்லி இருப்பதால் நான்மணிக் கடிகை என்று பெயர் பெற்றுள்ள  இலக்கிய நூலை விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் படைத்துள்ளார் ! பதினெண் கீழ்க் கணக்கு நூல் வகையுள் இதுவும் ஒன்று ! இதிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (10).

-------------------------------

கற்றார்முன்  தோன்றா  கழிவிரக்கங் காதலித்தொன்(று)

உற்றார்முன்  தோன்றா உறாமுதல்  தெற்றென

அல்ல  புரிந்தார்க்கு  அறந்தோன்றா;  எல்லாம்

வெகுண்டார்முன்  தோன்றாக்  கெடும்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

ஒரு பொருளை அல்லது உயிருக்குயிரான உற்றாரை இழந்துவிட்டால், அதற்காகத் துன்பம் கொள்ளுதல் கற்றுத் தெளிந்தாரிடம் தோன்றுவதில்லை !

ஊக்கமுடன் ஒரு நன்முயற்சியில் ஈடுபட்டு உழைப்பவரிடம், உரிய பலன் விரைந்து  கிட்டவில்லையே  என்னும்  மனத்துன்பம், தோன்றுவதில்லை !

தெளிந்த  முடிவுடன் தீய செயல்களைச் செய்பவர்களிடம், அறம் செய்தலால் ஏற்படும் நற்பயன்களைப் பற்றிய நல்லறிவும் நல்லுணர்வும்  தோன்றுவதில்லை !

அதுபோல்,  சினத்திற்கு ஆட்பட்டு அறிவை இழப்பவர்களிடம் அவர்களுக்குக் கிட்டக் கூடிய அனைத்து நன்மைகளும் கிடைக்காமலேயே கெட்டு ஒழிந்து போகும் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------------

கழிவிரக்கம் = இழந்த பொருள்களுக்கு இரங்குதல் ;  கற்றார் முன் தோன்றா = கற்றுணர்ந்த பெரியோர்பால் தோன்றாது ; காதலித்து  =  ஊக்கம் கொண்டு ;  ஒன்று உற்றார் முன் = ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவர் பால்  ;  உறா முதல் = விரைவில் பலன்  கிட்டவில்லையே என்னும் மனத் துன்பம் ; தெற்றென  =  தெளிவாய் ; அல்ல புரிந்தார்க்கு  = தீயவை செய்தார்க்கு  ;  அறம் தோன்றா  =  நல்லவை தோன்றமாட்டா ;  எல்லாம்  =  எல்லா நன்மைகளு ;  வெகுண்டார் முன்  =  சினம் கொள்வாரிடத்து ; தோன்றாக்  கெடும் = தோன்றாது கெட்டொழியும்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------------

கழிந்துவிட்ட பொருள்களைப் பற்றிய துன்பம்  கற்றுத் தெளிந்தாரிடத்தும், முயற்சித் துன்பம் ஊக்கம் உடையாரிடத்தும், அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்தும், எல்லா நன்மைகளும் சினம் கொள்வாரிடத்தும் தோன்றாது !

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-----------------------------------------------------------------------------------------------

கள்வம் என்பார்க்கும் துயிலில்லை - பாடல்.09 - வை.வேதரெத்தினம் உரை !

முழுவதும் வெண்பாக்களால் மட்டுமே  யாக்கப் பெற்ற நான்மணிக்கடிகை,  விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பெற்ற நூல். கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளைச் சொல்கிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல்; எண் (09)

-----------------------------------

கள்வமென்  பார்க்குந்  துயிலில்லை  காதலிமாட்டு

உள்ளம்வைப்  பார்க்குந்  துயிலில்லை;  ஒண்பொருள்

செய்வமென்  பார்க்குந்  துயிலில்லை;  அப்பொருள்

காப்பார்க்கும்  இல்லை  துயில்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

கள்வம்  என்பார்க்கும்  துயிலில்லை;  காதலிமாட்டு

உள்ளம்  வைப்பார்க்கும்  துயிலில்லை; ஒண்பொருள்

செய்வம்  என்பார்க்கும்  துயிலில்லை; அப்பொருள்

காப்பார்க்கும்  இல்லை துயில்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

திருடுவதற்காக ஊர் அரவம்  அடங்கும் வரைக் காத்திருப்பார்க்கும் உறக்கம் வாராது  !

காதலில் கட்டுண்டுக்  காதலியின் இடத்தில்  மனதைப் பறிகொடுத்தவர்களுக்கும் உறக்கம் வாராது !

நிறைந்த செல்வம் சேர்க்கவேண்டும் என்று கருதி இராப் பகலாய் உழைப்பவர்களுக்கும்  உறக்கம் வாராது !

அதுபோல்,  சேர்த்த பொருளை,  களவாலும் பிறவாற்றாலும் கெடாதபடிக் காப்பவர்களுக்கும் கவலையால் உறக்கம் வாராது !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------------

கள்வம் என்பார்க்கும்  =  திருடுவம் என்று மக்கள் சோர்ந்திருக்கும் நேரம் பார்ப்பார்க்கும் ; காதலி மாட்டு = காதலியினிடத்தில் ; உள்ளம் வைப்பார்க்கும் = விருப்பம் வைத்திருப்பார்க்கும் ; ஒண்பொருள் = சிறந்த செல்வப் பொருளை ; செய்வம் என்பார்க்கும் = பெருக்குவம் என்று கருதி உழைப்பார்க்கும் ; அப்பொருள் = தேடிய அப்பொருளை ; காப்பார்க்கும் = களவாலும் பிறவாற்றாலும் கெடாதபடிப் பாதுகாப்பவர்கட்கும் ; துயில் இல்லை = உறக்கம் பிடிப்பதில்லை.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

திருடர்க்கும், காதலியிடம் மனதைப் பறிகொடுத்த ஆடவர்க்கும், பொருள் தேடுவார்க்கும், அப்பொருளைப் பாதுகாப்பார்க்கும் இரவில் தூக்கம் வராது தவிப்பார்கள்.

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-------------------------------------------------------------------------------------------------

திருவொக்கும் தீதில் ஒழுக்கம் - பாடல்.08 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண் கீழ்க் கணக்கு என நமது முன்னோர்களால் வகைப்படுத்தப் பெற்றுள்ள நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை. கடைச் சங்க கால நூலான இதிலிருந்து ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் (08)

-----------------------

திருவொக்கும் தீதில் ஒழுக்கம்; பெரிய

அறனொக்கும் ஆற்றின் ஒழுகல்; பிறனைக்

கொலையொக்குங் கொண்டுகண் மாறல்;  புலையொக்கும்

போற்றாதார் முன்னர்ச் செலவு.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------------

தீமைபயக்கும்  எண்ணம் துளியும் கலவாத நல்லொழுக்கமானது  கிடைத்தற்கரிய பெரிய செல்வத்துக்கு ஒப்பானது !

இல்லற வாழ்க்கையில் நேர்மையுடன் முறையாக ஒழுகுதல் மிகச் சிறந்த அறத்துக்கு ஒப்பானதாகும் !

ஒரு மனிதனுடன் நட்புப் பூண்டு ஒழுகிவிட்டு, பிறகு அதை மறந்து அவனைப் பற்றிப் புறங் கூறுதல் அவனைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும் !

அது போல், தம்மை மதியாதாரிடத்திற் சென்று அவரிடம் ஒன்றைக் கேட்டுக் கெஞ்சுதல்  என்பது மிக மிக இழிய செயலுக்கு ஒப்பாகும் !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------------

திரு ஒக்கும் = கிடைத்தற்கரிய செல்வத்திற்கு ஒப்பானது; ஆற்றின் ஒழுகல் = வாழ்க்கையில் நேர்மையுடன் முறையாக ஒழுகுதல்; பிறனை = ஒரு மனிதனை; கொலை ஒக்கும் = கொலை செய்வதற்கு ஒப்பாகும்; கொண்டு = நட்புக் கொண்டு ; கண் மாறல் = பின்பு நட்பை மறந்து புறங்கூறல்; புலை  ஒக்கும் = மிக மிக இழிந்த செயலுக்கு ஒப்பாகும்; போற்றாதார் = நம்மை மதியாதார் ; முன்னர்ச் செலவு = முன்பாகச் சென்று உதவி கேட்டுக் கெஞ்சுதல்.

---------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

---------------------------------------

நல்லொழுக்கம்  செல்வம் போன்றது; முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்றது; பிறரைப்  புறங்கூறல் அவரைக் கொலை செய்வதற்கு ஒப்பானது; தம்மை மதியாரை தாம் மதித்தல் இழிதகைமை ஆகும் !