விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 20 நவம்பர், 2021

ஏதிலார் என்பார் இயல்பில்லார் - பாடல்.45 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (45)

------------------------

ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்

காதலா ரென்பார் தகவுடையார்மேதக்க

தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்

முந்துதான் செய்த வினை.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------------------

ஏதிலார் என்பார் இயல்பு இல்லார் யார்யார்க்கும்

காதலார் என்பார் தகவு உடையார்மேதக்க

தந்தை எனப்படுவான் தன் உவாத்தி  தாயென்பாள்

முந்து தான் செய்த வினை.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

நல்லியல்பு (நற்குணமும் நல்லொழுக்கமும்இல்லாத எந்த மனிதரும்  நமக்கு ஒருபோதும் உறவினர் ஆகார்அயலாரே !

நம்மீது  உண்மையான அன்பு வைத்திருக்கும் யாரும் நல்லியல்பு (நற்குணமும் நல்லொழுக்கமும்)    உடையவராகவே இருப்பார் !

மேன்மையான தந்தை எனப்படுபவர் நமக்கு நல்வழி காட்டி நடத்திச் செல்லும்  உயரிய  ஆசானாகவும் உறுதியாக இருப்பார் !

நம்மீது அளவற்ற அன்பும் நீங்காத பற்றும் வைத்திருப்பவள், நமது தாயாக அமைவது நாம் முன்பு செய்த நல்வினையாகும்

(குறிப்பு: இப்பாடலில் மூன்றாம் அடியில் வரும் உவாத்தி என்பது தமிழ்ச்சொல் அன்று ! இடைசெருகல் நிகழ்ந்துள்ளது ! “தன்னுவாத்திஎன்பதற்கு மாற்றாகதன்னாசான்என்று இருந்தாலும் தளைதட்டவில்லை. )

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------

ஏதிலார் என்பார் = அயலார் என்று  கருதப்படுபவர்கள்; இயல்பு இல்லார் = நல்லியல்பு இல்லாதவர்கள்; யார் யார்க்கும் = யாவர்க்கும்; காதலார் என்பார் = அன்பர் எனப்படுவார்; தகவு உடையார் = நல்லியல்பு உடையவர்கள்; மேதக்க = மேன்மையான; தந்தை எனப்படுவான் = தந்தை என்று சொல்லப்படுபவன்; தன் உவாத்தி = தன் ஆசிரியனாவான்தாய் என்பாள் = மேன்மையான தாய் என்று சொல்லப்படுபவள்; முந்து = முற்பிறப்பில்; தான் செய்த வினை = தான் செய்த நல்வினையாகும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------

ஒருவனுக்குநல்லியல்பு  (நற்குணம்) இல்லாதாவர் எல்லோரும் அயலார்; யார்க்கும் நல்லியல்பு உடையவரே அன்புடையார்மேலான தந்தை எனப்படுபவன் ஆசிரியனுக்குச் சமம்மேன்மையுடைய தாயென்பாள், முன்பு செய்த நல்வினைப் பயனாகும்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------ 

போரின்றி வாடும் பொருநர் சீர் - பாடல்.44 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (44)

-------------------------

போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த

வேரின்றி வாடும் மரமெல்லாம் -  நீர்பாய்

மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி

மன்னர்சீர் வாடிவிடும்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

போர் இன்றி வாடும் பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த

வேர் இன்றி வாடும் மரம் எல்லாம்நீர் பாய்

மடை இன்றி நீள் நெய்தல் வாடும்; படையின்றி

மன்னர் சீர் வாடிவிடும்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

போர் இல்லாமல் படை வீரர்கள்  நீண்ட நாள் வாளாவிருந்தால், அப்படைவீரர்களின் வீரமும் தீரமும்  முற்றிலுமாகக்  குறைந்து  போகும் !

நிலத்தினுள் இறங்கி மரத்திற்கு வலிவையும் உயிரையும் ஊட்டும்  வேர்கள் அறுந்து போனால், மரம் விரைவாகப் பட்டுப்போகும் !

நெய்தல் மலருக்கு நீரூட்டிச் செழிக்கச்  செய்யும் மடை தூர்ந்து போய், நீர் அற்றுவிட்டால்,  நெய்தல் மலர்கள் கொடியோடு உலர்ந்து போகும் !

அதுபோல், நாட்டைக்   காக்கும் மன்னனின்  படைகள்  வெகுவாக வலுவிழந்து போனால்,  அம்மன்னனின்  நாடும் விரைவாக அழிந்து போகும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

பொருநர் சீர் = போர் வீரரின் சிறப்பு;  போரின்றி = போர் இல்லாவிடின்; வாடும் = குன்றிவிடும்; மரம் எல்லாம் = எல்லா மரங்களும்; கீழ் வீழ்ந்த = நிலத்துள் இறங்கிய; வேர் இன்றி = வேர் அறுந்துவிடின்; வாடும் = பட்டுப் போய்விடும்; நீள் நெய்தல் = நீண்ட நெய்தல் மலர்கள்; நீர் பாய் மடை = நீர் பாயும் மடையில்; இன்றி = நீர் அற்றுவிட்டால்; வாடும் = உலர்ந்து போய்விடும்;  மன்னர் சீர் = அரசனின் செல்வம் ; படையின்றி = நாட்டைக் காக்கும் படை இல்லாவிடின்; வாடிவிடும் = அழிந்து போய்விடும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------

போர் இல்லாவிடின்  படைவீரர்களின் சிறப்புக் கெடும்;  வேர் அற்றுவிடின் மரங்கள் பட்டுப் போய்விடும்;  நீர் அற்றுவிடின்  நெய்தல் உலர்ந்துவிடும்; படை இல்லாவிடின் வேந்தனது சீர்மை அழிந்து போய்விடும்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------

பிறக்குங்கால் பேரெனவும் பேரா - பாடல்.43 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பிநாகனார் என்னும் சங்க காலப் புலவர்  இயற்றிய  நூல் நான்மணிக்கடிகை. உலகியல்நெறி சார் கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கும் நாகனார், பாடல் தோறும் நான்கு  கருத்துகளை வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (43)

-------------------------

பிறக்குங்கால் பேரெனவும் பேரா; இறக்குங்கால்

நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும்; - நல்லாள்

உடம்படின் தானே பெருகுங்கெடும்பொழுதில்

கண்டனவுங் காணாக் கெடும்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

பிறக்கும்கால் பேர் எனவும் பேரா; இறக்கும் கால்

நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும்; - நல்லாள்

உடம்படின் தானே பெருகும்கெடும்பொழுதில்

கண்டனவும் காணாக் கெடும்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

உயிரினங்கள்  இந்த உலகத்தில் பிறக்கும் போது, “ஏ உயிரே ! நீ இந்த உடலை விட்டு நீங்கி விடுஎன்று யார் கட்டளையிட்டாலும்  அதற்காக அது நீங்கிவிடாது !

இறக்கும் போது, “ஏ உயிரே ! நீ இந்த உடலை விட்டு நீங்காமல் அதிலேயே தங்கியிருஎன்று யார் கட்டளையிட்டாலும் அதற்காக அது தங்கிவிடாது !

ஒரு மனிதனுக்கு, நல்ல மனிதர்களின் ஆதரவும், துணையும், மதியுரையும் வலுவாக இருந்தால், அவனிடம் செல்வமும் நிரம்ப வந்து  சேரும் !

அதுபோல், நல்ல மனிதர்களின் ஆதரவும் துணையும், மதியுரையும்  அவனைவிட்டு நீங்கிவிட்டால்சேர்ந்திருந்த செல்வமும்  விரைவில் குறைந்து  மறைந்து  போய்விடும் !

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

உயிர் எனைத்தும் = உயிரெல்லாம்பிறக்குங்கால் = இந்த உலகத்தில் பிறக்கும் போது; பேர் எனவும் பேரா = உடலைவிட்டு நீங்கிவிடு என்றாலும் நீங்காது ; இறக்குங்கால் = அவை இறக்கும் போதுநில் எனவும் நில்லா  = இவ்வுடலிலேயே நில் என்றாலும் நில்லாது; நல்லாள் = நல் + ஆள் = நல்லாள் = நல்லவர்கள்; உடம்படின் = துணை வலுவாக இருந்தால்; தானே பெருகும் = செல்வமானது தானே பெருகும்; கெடும் பொழுதில் = நல்லவர்களின் துணை நீங்கிப் போகும் காலத்தில் ; கண்டனவும் = முன்பு  சேர்த்து வைத்திருந்த பொருள்கள் கூட ; காணா = காணப்படாது ; கெடும் = அழிந்துபோகும்.

-------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

உயிர்கள் பிறக்கும் போதுஉடலை விட்டு நீங்குகஎன்றால் உயிர்  நீங்கிவிடாது; இறக்கும் போதுஉடலிலேயே தங்கிவிடுஎன்றாலும் உயிர் தங்கிவிடாது. நல்லவர்கள் துணையிருந்தால் செல்வம் தானே சேரும்; நல்லவர்கள் துணை நீங்குகையில்  செல்வமும் நீங்கிவிடும் !

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

-------------------------------------------------------------------------------------------------

திருவும் திணைவகையான் நில்லா - பாடல்.42 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பிநாகனார் என்னும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட நூல் நான்மணிக்கடிகை. உலகியல்நெறி சார் கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கும் நாகனார், பாடல் தோறும் நான்கு  கருத்துகளை வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (42)

-------------------------

திருவுந் திணைவகையான் நில்லாப்பெருவலிக்

கூற்றமுங் கூறுவ செய்துண்ணாதாற்ற

மறைக்க மறையாதாங் காமம்முறையும்

இறைவகையான் நின்று விடும்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------------------

திருவும் திணைவகையால் நில்லா; - பெருவலிக்

கூற்றமும் கூறுவது செய்து உண்ணாதுஆற்ற

மறைக்க மறையாதாம் காமம்முறையும்

இறைவகையால் நின்று விடும்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

ஒருவன் பிறந்த குடியின் உயர்வு தாழ்வுக்கு ஏற்ப,  செல்வமானது  அவனிடம் வந்து சேர்வதும்  குறைந்து போவதும் ஒருபோதும் நிகழ்வதில்லை !

இறப்பு என்பது ஒருவனை அணுகும் போது, அவன் விருப்பத்தைக் கேட்டு, அவன்  விரும்பியபடியும்  ஒருபோதும் நிகழ்வதில்லை !

ஒருவனிடம் இயல்பாக எழும் காம உணரவை   அவன் எத்துணை முயன்றாலும் ஒருபோதும் அவனால் மறைக்கவும் முடிவதில்லை !

அதுபோல், ஆட்சி என்பது அரசனது போக்குக்கு ஏற்ப அமையக் கூடியது; அதை மாற்ற எவர் முயன்றாலும் ஒருபோதும் முடிவதுமில்லை !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

திருவும் = செல்வமும்; திணை வகையால் = குடிப்பிறப்பு வகையால்; நில்லா = பொருந்தி நில்லாவாம்;  பெருவலி = மிக்க வலிமையுடைய; கூற்றமும் = இறப்பும்; கூறுவ = தன்னால் கவரப்படுகின்றவர் சொல்வனவற்றை; செய்து உண்ணாது = கேட்டு நடவாது; ஆற்ற =  மிகவும்; மறைக்க = மறைக்க முயன்றாலும் ; காமம் = காமவுணர்வு ; மறையாது = மறைந்துபோகாது; முறையும் = ஆட்சி முறைமையும்; இறைவகையான் = அரசனது போக்குக்கு ஏற்றபடி ; நின்றுவிடும் = அமைந்துவிடும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

குடிப்பிறப்புக்கு  ஏற்பச் செல்வம் நிலைப்பதும் உலைப்பதும் நிகழ்வதில்லை; இறப்பு என்பது மனிதன் விருப்பப்படி நிகழ்வதில்லை;  மறைத்தாலும் காமவுணர்வு மறைந்துபோவதில்லை; அரசனது போக்குக்கு ஏற்றபடி ஆட்சிமுறை அமைகிறது; அதை எவராலும் மாற்ற முடிவதில்லை !