விரும்பும் பதிவைத் தேடுக !

மையால் தளிர்க்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மையால் தளிர்க்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

மையால் தளிர்க்கும் மலர்க் கண்கள் - பாடல்.38 - வை.வேதரெத்தினம் உரை !

ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை உள்ளடக்கியது நான்மணிக் கடிகை ! கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் !. இதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்.(38)

------------------------------

மையால்  தளிர்க்கும்  மலர்க்கண்கள்;  மாலிருள்

நெய்யால்  தளிர்க்கும்  நிமிர்சுடர்;  -  பெய்யல்

முழங்கத்  தளிர்க்கும்  குருகிலை ; நட்டார்

வழங்கத்  தளிர்க்குமாம்  மேல்.

------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------

குவளை மலர் போன்ற கண்களுக்கு  பெண்கள்  மை எழுதினால் கண்களின் அழகு  இன்னும்  எடுப்பாகத் தெரியும் !

இருள் சூழ்ந்த அறையில்  நிமிர்ந்து எரியும் விளக்கின் சுடர், எண்ணெய் இடப்பட்டால் இன்னும் விளக்கமாக எரியும் !

கரிய மேகம் மழையாகப் பொழிவதற்கு முன்பு, எழுப்பும்  இடி முழக்கம் கேட்டு குருக்கத்தி மரத்தின் இலைகள்  தளிர்க்கும் !

அதுபோல், செல்வந்தர்கள், ஏழ்மை நிலையில் இருக்கும் வறியவர்க்குக்  கொடுத்துதவினால், அவர்களின் செல்வ வளம்  மேலும் மேலும் பெருகும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

மலர்க் கண்கள் = குவளை மலர் போன்ற கண்கள் ; மையால் = மை  தீட்டிக் கொண்டால் ; தளிர்க்கும் = எடுத்துக் காட்டும் ; மால் இருள் = மிக்க இருட்டில் ;  நிமிர் சுடர் = நிமிர்ந்து எரியும் நெருப்பு ; நெய்யால் =  விளக்கிற்கு இடும் எண்ணெய்யால் ; தளிர்க்கும் = விளங்கி எரியும் ; பெய்யல் = மேகம் ; முழங்க = பெய்தற்குக் குமுற ; குருகு = குருக்கத்தி மரம் ; இலை தளிர்க்கும் = இலைகள் துளிர்விடும் ; மேல் = செல்வந்தர்கள் ; நட்டார் வழங்க =  ஏழ்மை நிலையிலிருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்  கொடுத்தலால் ; தளிர்க்கும் = மேலும் செல்வ வளம் பெருகும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------

கண்கள், மையிடுதலால் மேலும் எடுப்பாக விளங்கும்;  விளக்கு எண்ணெய்  ஊற்றுவதால் எரியும்;  குருக்கத்தி மரம் மழை முழக்கத்தால் இலை தளிர்க்கும்; அடுத்தவர்க்கு வழங்குதலால் செல்வந்தரின் வளம் பெருகும் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------