விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (89)
------------------------------
பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்
தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம்.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
பெருக்குக நாட்டாரை நன்றின் பால் உய்த்து;
தருக்குக ஒட்டாரைக் காலம் அறிந்து; ஆங்கு
அருக்குக யார்மாட்டும் உண்டி; சுருக்குக
செல்லா இடத்துச் சினம்,
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
நண்பருக்கு நன்மை செய்யும் நேரம் எப்போது வாய்க்கும் என்று எதிர்பார்த்திருப்பதே
நட்பின் இலக்கணம். ஆதலால் உனக்கு வாய்ப்புக் கிடைக்கையில் உன் நண்பருக்குத்
தக்க உதவிகள் செய்து அவரை வாழ்வில்
உயர்த்துவாயாக !
நேரம் காலம் தெரியாமல் பகைவனுடன் மோதுவது உன் வீட்சிக்கு வழி வகுத்துவிடும். பகைவனை
வெல்ல வேண்டுமானால் ”உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு” போலக்
காத்திரு. வாய்ப்பான நேரமறிந்து வீரத்தால் அவனை வெல்வாயாக !
நெருங்கிய உறவினர் வீடாயினும் சரி, நண்பர்
வீடாயினும் சரி, அடிக்கடி
அவர்கள் வீட்டிற்குச் சென்று உணவு அருந்துதல் மிகவும் இழிவான செயல். உன் மீது
அவர்களுக்கு வெறுப்பை வளர்க்கும். இந்த இழி செயலை விட்டுவிடுவாயாக !
சினம் கொள்ளுதல் எந்தவொரு மனிதனையும் சமயத்தில் சிக்கலில் ஆழ்த்திவிடும். அதுவும்
உன்னைவிட வலிமையானவனிடம் சினம் கொள்வது உனக்கே இடராக முடியும்; சீரழிவைத்
தரும் சினத்தை விட்டுவிடுவாயாக !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------
நட்டாரை = ஒருவன் தனக்கு நண்பர் ஆனவரை ; நன்றின்பால்
உய்த்து = நன்மையிற் செலுத்தி ; பெருக்குக = நல்வாழ்வில்
உயர்த்துக ; ஒட்டாரை = பகைவர்களை ; காலம் அறிந்து = உரிய
காலம் தெரிந்து ; தருக்குக = மறங்கொண்டு வெல்க ; யார்மாட்டும் = யாவரகத்தும் ; உண்டி = அடுத்துண்ணுதலை ; அருக்குக = சுருக்கிக் கொள்க ; செல்லாவிடத்து = செல்லும் தகுதி இல்லாவிடத்து ; சினம்
சுருக்குக = சினத்தைத் தணித்துக் கொள்க
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
நண்பரை நல்வாழ்வில் உயர்த்துக ; பகைவரைக்
காலமறிந்து வெல்க ; யாவர் அகத்தும் அடுத்து உண்ணுதலைக் குறைத்துக் கொள்க ; செல்லத்
தகாத இடத்தில் சினத்தைத் தணித்துக் கொள்க.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
-----------------------------------------------------------------------------------------------