விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 6 டிசம்பர், 2021

கைத்தில்லார் நல்லவர் - பாடல்.70 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (70)

-------------------------------

கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்

வைத்தாரின் நல்லர் வறியவர்பைத்தெழுந்து

வைதாரின் நல்லர் பொறுப்பவர்செய்தாரின்

நல்லர் சிதையா தவர்.

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

கைத்து இல்லார் நல்லவர் கைத்து உண்டாய் காப்பாரின்;

வைத்தாரின் நல்லர் வறியவர்; – பைத்து எழுந்து

வைதாரின் நல்லர் பொறுப்பவர்; – செய்தாரின்

நல்லர் சிதையாதவர்.

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

ஒருவரிடம் நிறைய செல்வம் இருக்கிறது; ஆனால் அதில் துளியளவு கூட எடுத்து தனக்குப் பயன்படுத்த மனம் இல்லை. அவரை விட, செல்வமே இல்லாதவர்கள் எவ்வளவோ மேல் !

கோடி கோடியாய்ச் செல்வத்தைச் சேர்த்து வைத்து, அதைப் பாதுக்காக்கத் தெரியாமல் ஏமாற்றுக்காரர்களிடம் கொடுத்து வைத்து ஏமாறுபவர்களை விட, செல்வமே இல்லா வறியவர்கள் எவ்வளவோ மேல் !

தேவையில்லாமல் வெகுண்டெழுந்து வரைமுறையில்லாமல் பிறரை வைபவர்களை விட, அத்தகைய வைதலுரையைப் பொறுத்துக்கொண்டு அமைதி காப்போர் எவ்வளவோ மேல் !

அதுபோல், பிறருக்கு நன்மை செய்வதையே குறிக்கோளாக ஏற்று  வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒழுகிவரும் மனிதர்களை விட செய்ந்நன்றியை மறவாமல் இருப்பவர்களே மிகவும் மேல் !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

கைத்து உண்டாய் = செல்வம் உள்ளவராய் ; காப்பாரின் = அச்செல்வத்தை நுகராமல் சேர்த்துப் பாதுகாப்பவரைவிட ; கைத்து இல்லார் = அச்செல்வம் இல்லாத மாந்தர் ; நல்லவர் = மிகவும் நல்லவரேயாவார் ; வைத்தாரின் = அப்பொருளை வைத்து இழப்பாரைவிட ; வறியவர் நல்லர் = வறுமையுடையோர் நல்லவராவார் ; பைத்து எழுந்துசினந்து எழுந்து ; வைதாரின் = பிறரை வைதவர்களை விட ; பொறுப்பவர் = அவ் வைதலுரையைப் பொறுப்பவர்கள் ; நல்லர் =  மிகவும் நல்லவராவார் ; செய்தாரின் = நன்மை செய்தவர்களை விட ; சிதையாதவர் = அந் நன்மையை மறவாதவர்கள் ; நல்லர் = மிகவும் நல்லவராவார்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

செல்வமிருந்தும் பயன் அடையாதவர்களை விட, அச் செல்வம் இல்லாதவர்கள் நல்லவர்கள் ; செல்வத்தைச் சேர்த்து வைத்து இழப்பாரினும் வறியவர் மிக நல்லவர் ; சினந்தெழுந்து வைதாரினும் அதனைப் பொறுப்பவர்கள் மிகவும் நல்லவர் ; ஒரு நன்மை செய்தாரினும் அச் செய்நன்றியை மறவாதவர் மிக நல்லவர்.

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),20]

{06-12-2021}

---------------------------------------------------------------------------------------------

பின்னவாம் பின்னதிர்க்கும் - பாடல்.69 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (69)

---------------------------------

பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினைஎன் பெறினும்

முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கென்னும்

அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம்தவாவாம்

அவாவிலார் செய்யும் வினை.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

பின்ன ஆம் பின் அதிர்க்கும் செய்வினைஎன் பெறினும்

முன்ன ஆம் முன்னம் அறிந்தார்கட்குஎன்னும்

அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம்தவா ஆம்

அவா இலார் செய்யும் வினை.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

முன்னதாகவே  ஆராய்ந்து கணிக்காத  மனிதர்களுக்கு, ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்முன், அதனால் ஏற்படக்கூடிய  துன்பங்கள் பற்றி   அவை  தொடங்கிய  பின்பே தெரியவரும் !

முன்னதாகவே ஆராய்ந்து, கணித்து அச்செயலைத் தொடங்குபவர்களுக்கு, அதனால் ஏற்படக் கூடிய துன்பங்கள் பற்றி அவை உண்மையில் தொடங்குவதற்கு முன்னதாகவே தெரிந்திருக்கும் !

ஒரு பொருளின் மேல் அவாவுற்று அதை விரும்பி அடைந்தவர்கட்கு, அவர்கள் அறிவு எத்தனைத் தடுத்தாலும் சரி, அப்பொருள் மீது  மேலும் மேலும் பற்று (அவா) உண்டாகவே செய்யும் !

ஆனால், எந்தப் பொருள்கள் மீதும் பற்று வைக்காத அறிவார்ந்த பெரியோர்கள் செய்கின்ற  அறச் செயல்கள் ஒருபோதும் கெட்டுப்போகாமல் எப்பொழுதும் நிலைபெற்று நிற்கவே செய்யும் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

பின் = தொடங்கிய பின்பு ; அதிர்க்கும் = நடுங்கச் செய்யும் ; செய்வினை = செய்தொழில்கள் ; பின்ன ஆம் = முன் ஆராயாதார்க்கு பின் தோன்றுவனவாம் ; என் பெறினும் = எப் பயனைப் பெறுவதானாலும் ; முன்னம் = தொடங்குவதற்கு முன்னமேயே ; அறிந்தார்கட்கு = பின் வருவனவற்றை ஆராய்வார்க்கு ; முன்ன ஆம் = அவை முன் தோன்றுவனவாம் ; அடைந்தார்க்கு = ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்கட்கு ; உள்ளம் = அவர்கள் உள்ளம் ; என்னும் = எப்படியாயினும் ; அவா ஆம் = மேலும் மேலும் அவா உடையதாகும் ; அவா இலார் = எப்பொருளினும் பற்றில்லாத பெரியோர்கள் ; செய்யும் வினை = செய்யும் அறச் செயல்கள் ; தவா ஆம் = கெடாவாம்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் ஆராயாதவர்களுக்கு, அதன் துன்பங்கள் தொடங்கிய பின் தெரியும் ; ஆராய்கின்றவர்களுக்கு அவை தொடங்கும் முன்னமேயே தெரியும் ;ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்களுக்கு அதன்கண் எப்படியாயினும் பற்று உண்டாகும்; எப்பொருளினும் பற்றில்லாதவர்கள் செய்யும் செயல்கள் ஒருபோதும் கெடமாட்டா. 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

"நான்மணிக்கடிகை” வலைப்பூ,.

[தி.:2052,நளி (கார்த்திகை),20]

{06-12-2021}

---------------------------------------------------------------------------------------------

ஊனுண்டு உழுவை நிறம்பெறூஉம் - பாடல்.68 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (68)

-------------------------------

ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்

புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின்

அரிசியான் இன்புறூஉங் கீழெல்லாந் த்த்தம்

வரிசையான் இன்புறூம் மேல்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்

புல்லினால் இன்புறூஉம் காலேயம்நெல்லின்

அரிசியால் இன்புறூம் கீழ் எல்லாம்; த்த்தம்

வரிசையால் இன்புறூஉம் மேல்.

--------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

ஊன் உணவைச் சுவைத்து  உண்பதில்  கானகம் வாழ் புலிகள்  இன்பம் காணும் !

ஈரநிலத்துப் பசும் புல்லைச் சுவைத்து  உண்பதில் கால்நடைகள் இன்பம் காணும் !

வயிறு நிறையச் சுவையான  சோற்றை உண்பதில் கீழ் மக்கள் இன்பம்  காண்பர் !

மேன்மக்களோ, தம் தகுதிக்கேற்ற  மதிப்புறு செயல்களைச் செய்வதில் இன்பம் காண்பர் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

ஊன் உண்டு = ஊன் உணவை உட்கொண்டு ; உழுவை = புலி ; நிறம் பெறூஉம் = மேனியமையும் ; நீர் நிலத்து = ஈரம் பொருந்திய நிலத்திலுள்ள ; புல்லினான் = புல்லினை மேய்ந்து ; காலேயம் = ஆனிரைகள் ; இன்புறூஉம் = இன்பமடையும் ; நெல்லின் அரிசியான் = நெல்லரிசிச் சோற்றினால் ; கீழ் எல்லாம் = கீழ் மக்கள் எல்லாரும் ; இன்புறூஉம் = இன்பம் காணுவர் ; மேல் = மேன்ம்மக்கள் ; தத்தம் = தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற ; வரிசையான் = மதிப்புச் செயல்களால் ; இன்புறூஉம் = இன்பமடைவர்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

புலி ஊன் உண்டு இன்பமுறும் ; ஆன் புல்லுண்டு இன்பமுறும் ; கீழோர் சோறுண்டு இன்புறுவர் ; மேலோர் மதிப்புணர்ந்து இன்புறுவர்.

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),20]

{06-12-2021}

--------------------------------------------------------------------------------------------

கைத்துடையான் காமுற்றது - பாடல்.67 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (67)

-----------------------------

கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்

முளைக்குழாம் நீருண்டேல் உண்டாந் திருக்குழாம்

ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்

துன்புறுவாள் ஆகிற் கெடும்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------

கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்

முளைக் குழாம் நீர் உண்டேல் உண்டாம்; திருக்குழாம்

ஒண் செய்யாள் பார்த்துறின் உண்டாகும்; மற்று அவள்

துன்புறுவாள் ஆகில் கெடும்..

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

செல்வச் செழுமை படைத்த மாந்தனுக்கு, அவனது வாழ்வில் அவன் விரும்பிய அனைத்தும் அட்டியின்றிக்  கிடைத்துவிடும்!

குவிந்து கிடக்கும் விதைகளுக்கு நீர் மட்டும் கிடைத்திடுமானால், அவற்றிலிருந்து முளைகள் வெடித்து வெளிக்கிளம்பும் !

செல்வத் திருமகளாம் தாமரைச் செல்வியின் அருள் கிடைத்துவிட்டால், ஏழையிடம் கூட பொருட் செல்வம் குவியத் தொடங்கும் !

ஆனால், அவள் எந்தவொரு மனிதனின் நடத்தை மீதாவது அருவருப்பு கொள்வாளெனில், அவனிடம் உள்ள செல்வமும் அழிந்து போகும் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

கைத்து உடையான் = கைப்பொருள் உள்ளவன் ; காமுற்றது  = விரும்பிய பொருள் ; உண்டாகும் = கிடைக்கும் ; நீர் உண்டேல் = நீர் பாய்ச்சல் உண்டானால் ; வித்தின் முளைக்குழாம் = விதைகளின் முளைக் கூட்டம் ; உண்டாம் = தோன்றும் ; ஒண் செய்யாள் = ஒளி பொருந்திய திருமகள் ; பார்த்துறின் = அருள் செய்தால் ; திருக்குழாம் உண்டாகும் = திரளான பொருட் செல்வம் பெருகும் ; அவள் = அத்திருமகள் ; துன்புறுவாளாகின் = அருவருப்பு கொண்டாள் எனில் ; கெடும் = உள்ள செல்வமும் அழியும். ;

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

செல்வம் உடையவனுக்கு அவன் விரும்பிய பொருள் எல்லாம் கிடைக்கும் ; நீர் கிடைத்தால் விதைகளிலிருந்து முளைகள் கிளம்பும் ; .திருமகள் அருள் கிடைத்தால் செல்வம் கூடும் ; அவர் அருள் நீங்கினால் உள்ள செல்வமும் கெடும்.