விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 13 டிசம்பர், 2021

எல்லா விடத்துங் கொலைதீது - பாடல்.95 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (95)

-------------------------------

எல்லா விடத்துங் கொலைதீது மக்களைக்

கல்லா வளர விடல்தீதுநல்லார்

நலந்தீது நாணற்று நிற்பிற் குலந்தீது

கொள்கை யழிந்தக் கடை.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

எல்லா இடத்தும் கொலைதீது; மக்களைக்

கல்லா வளர விடல்தீதுநல்லார்

நலம் தீது நாண் அற்று நிற்பின்; குலம் தீது

கொள்கை அழிந்தக்கடை.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

வேள்வியின் பெயரால் நடந்தாலும் சரி, உணவின் பெயரால் நடந்தாலும் சரி, உயிர்க் கொலை செய்தல் என்பது இரக்கமற்ற தீய செயலாகும் !

ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி, தாம்  பெற்ற பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் வளர்ப்பது  பெற்றோர் செய்யும்  தீய செயலாகும் !

பெண்களுக்கே உரிய சிறப்புப் பண்பான நாணம் இன்றி ஒழுகுவார்கள் எனில், அவர்களிடம் இருக்கும் அழகு, தீமை விளைவிக்கும் அழகேயாகும் !

பெருமையும் சிறப்பும் சேர்க்கும் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டால், எந்தக் குலமானாலும் சரி, அதனால் தீய பலன்களே நாட்டுக்கு விளையும் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

எல்லா இடத்தும் = எவ்வகையினும் ; கொலை தீது = ஓருயிரைக் கொலை செய்தல் தீதாகும் ; மக்களை = புதல்வரையும் புதல்வியரையும் ; கல்லா வளர விடல் = கல்வி கல்லாமல் வளரும்படி விடுதல் ; தீது = தீதாம் ; நாண் அற்று நிற்பின் = நாணம் இன்றி ஒழுகினால் ; நல்லார் நலம் தீது = பெண்களின் அழகு தீதாகும் ; கொள்கை = தக்க கொள்கைகள் ; அழிந்தக் கடை = அழிந்தவிடத்து ; குலம் தீது = குலம் தீதாகும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

எவ்வகையாலுங் கொலை தீதாகும் ; மக்களைக் கல்லாமல் வளரவிடுதல் தீதாம் ; நாணில்லையாயின் மகளிரின் அழகு தீதாம் ; கொள்கை அழிந்துவிட்டால் குலம் தீதாம். .

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------

இளமைப் பருவத்துக் கல்லாமை - பாடல்.94 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (94)

------------------------------

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்

வளமிலா போழ்தத்து வள்ளன்மை குற்றம்

கிளைஞரில் போழ்திற் சினங்குற்றம் குற்றந்

தமரல்லார் கையகத் தூண்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;

வளமிலா போழ்தத்து வள்ளன்மை குற்றம்;

கிளைஞர் இல் போழ்தில் சினம் குற்றம்; குற்றம்

தமர் அல்லார் கையகத்து ஊண்.-------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

இளம் பருவத்திலேயே கல்வி கற்க வேண்டும்; அப்படிக் கல்லாமல் தவிர்ப்பது தீய விளைவுகளைத் தரும் பிழையாக முடியும் !

பொருள் வரவு இல்லாத காலத்தில் ஈகை தவிர்க்க வேண்டும்; அப்படித் தவிர்க்காமல் ஈதல், இழப்புகளைத் தரும் பிழையாக முடியும் !

உறவினர்களின் துணை இல்லாத காலத்தில் பிறரைச் சினக்கலாகாது; அப்படிச் சினப்பது, கேடு விளைவிக்கும் பிழையாக முடியும் !

உள்ளத்தில் அன்பில்லாதவர் இல்லத்தில் உணவருந்தக் கூடாது; அருந்துதல் மானத்திற்கு ஊறு விளையும் பிழையாக முடியும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

இளமைப் பருவத்து = இளம் பருவத்தில் ; கல்லாமை குற்றம் = கல்லாதொழிதல் பிழையாம் ; வளம் இலா = பொருள் வருவாய் இல்லாத போழ்தத்து = காலத்தில் ; வள்ளன்மை = ஈகை இயல்பு ; குற்றம் = பிழையாம் ; கிளைஞர் இல் போழ்தில் = உறவினர்கள் துணையில்லாத காலத்தில் ; சினம் குற்றம் = பிறரோடு சினத்தல் குற்றமாம் ; தமர் அல்லார் = தமக்கு உள்ளன்பு இல்லாதாரது ; கையகத்து = இடத்தில் ; ஊண் = உண்ணுதல் ; குற்றம் = பிழையாம்.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

இளம் பருவத்தில் கல்லாமை குற்றம்; பொருளில்லாத காலத்தில் ஈதல் குற்றம் ; உறவினர் துணையில்லாத காலத்தில் பிறரைச் சினத்தல் குற்றம் ; உள்ளன்பு இல்லாதவர் மாட்டு உண்ணுதல் குற்றம்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

------------------------------------------------------------------------------------------------

வன்கண் பெருகின் வலிபெருகும் - பாடல்.93 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (93)

------------------------------

வன்கண் பெருகின் வலிபெருகும் பான்பொழியார்

இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற

மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கட்

கயம்பெருகிற் பாவம் பெரிது.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

வன் கண் பெருகின் வலி பெருகும்; பால் மொழியார்

இன் கண் பெருகின் இனம் பெருகும்; சீர் சான்ற

மென் கண் பெருகின் அறம் பெருகும்; வன் கண்

கயம் பெருகின் பாவம் பெரிது.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

அச்சம் குடிகொண்டால் ஒரு மனிதன் தன் வலிமையை இழப்பான்; அவனிடம் அஞ்சாமைக் குணம் உயிர்ப்புற்றால் அஃது அவனது வலிமையைப் பன்மடங்கு பெருக்கிவிடும் !

இல்லறவாழ்வில் மனைவியின் பங்கு மிகப் பெரியது. மனைவியிடம் கனிவான உள்ளமும் இனிமையான மொழியும் எப்போதும் நிறைந்து விளங்கினால், சுற்றத்தார் எண்ணிக்கை பெருகும் !

உலக மக்களிடையே சிறப்புமிக்க செவ்விய  வாழ்வை உறுதிப்படுத்தும் அருளுணர்வு நித்தமும் பெருகுமானால், உலகில் அறச் செயல்களும் நித்த நித்தம் பெருகித் தழைக்கும் !

நாட்டில் கொடுங்கோல் ஆட்சியும், ஆணவமும் கீழ்மைத்தனமும் வரம்புகடந்து  நிலவுமானால், தீயவினைகள் கட்டுக்கடங்காது பெருகி மக்களை அடிமைப்படுத்தித்  துன்புறுத்தும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

வன்கண் பெருகின் = அஞ்சாமை மிகுந்தால் ; வலி பெருகும் = வலிமையும் ஒருவனுக்கு மிகும் ; பால் மொழியார் = பால் போலும் இனிய சொல்லையுடைய மனைவியர்பால் ; இன்கண் = இனிய கண்ணோட்டம் ; பெருகின் = பெருகுமானால் ; இனம் பெருகும் = சுற்றத்தார் பெருகுவர் ; சீர் சான்ற = சிறப்பு மிக்க ; மென் கண் = அருள் தன்மை ; பெருகின் = மிகுமானால் ; அறம் பெருகும் = அறவினைகள் மிகும் ; வன்கண் = கொடுமையை உடைய ; கயம் பெருகின் = கீழ்மைத் தனம் மிகுமானால் ; பாவம் பெரிது = தீவினைச் செயல்கள் மிகும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும் ; மனையாள்மாட்டு கண்ணோட்டம் (கனிவுள்ளம்) மிகுந்தால் இனம் பெருகும் ; அருளிரக்கம் மிகுந்தால் அறம் மிகும் ; கீழ்மைக் குணம் மிகுந்தால் தீவினை மிகும்.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------

பட்டாங்கே பட்டொழுகும் - பாடல்.92 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (92)

------------------------------

பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்

பெட்டாங் கொழுகும் பிணையிலிமுட்டினுஞ்

சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினுங்

கொன்றான்மேல் நிற்குங் கொலை.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------

பட்டாங்கே பட்டு ஒழுகும் பண்பு உடையாள்; காப்பினும்

பெட்டு ஆங்கு ஒழுகும் பிணை இலி; – முட்டினும்

சென்றாங்கே சென்று ஒழுகும் காமம்; கரப்பினும்

கொன்றான் மேல் நிற்கும் கொலை.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

நல்லியல்புடைய பெண் பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாவிடினும், (கற்பு நெறி என்னும்) மனவறுதி தளர்ந்து பிற ஆடவனைக் காதலிக்கத் துணிய  மாட்டாள் !

நற்பண்பில்லாத பெண் பெற்றோர்கள் எத்தனைக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், (கற்பு நெறி என்னும்) மனவறுதி குலைந்து பிற ஆடவனைக் காதலிக்க அஞ்சமாட்டாள் !

காமவயப்பட்ட ஒருவன், எத்தனை இடையூறுகள் நேர்ந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், முன்பு நிகழ்த்திய அதே காமச் செயல்களில்  மீண்டும் மீண்டும் ஈடுபடுவான் !

எத்துணை நுட்பமாகத் திட்டமிட்டுத் தடயங்கள் எதையும் விட்டுச் செல்லாமல்   செய்திருந்தாலும் கூட, கொலையைச்  செய்தவன் மேல் அப்பழி ஒருநாள் வீழ்ந்தே தீரும் ! 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

பண்பு உடையாள் = நல்லியல்பு உடைய பெண் ; பட்டாங்கே = கற்புண்மைப்படியே ; பட்டு = ஒத்து ; ஒழுகும் = ஒழுகுவாள் ; பிணை இலி = மனம் பொருந்துதல் இல்லாதவள் ; காப்பினும் = கணவன் காவல் செய்யினும் ; பெட்டாங்கு = தான் விரும்பியபடியே ; ஒழுகும் = பிறரோடு மருவி ஒழுகுவாள் ; காமம் = காமவியல்பு ; முட்டினும் = இடையூறு உண்டாயினும் ; சென்றாங்கே = முன்பு சென்றபடியே ; சென்று ஒழுகும் = பின்பும் சென்று நிகழும் ; கொலை = கொலைப்பழி ; கரப்பினும் = எவ்வளவு மறைத்தாலும் ; கொன்றான்மேல் = கொலை செய்தவன் மேலேயே ; நிற்கும் = நிலைபெறும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டு ஒழுகுவாள் ; நற்பண்பில்லாதவள் எத்தனை காவல் செய்யினும் தான் விரும்பிய வாறே பிறரைக் காதலித்தொழுகுவாள் ; காமவியல்பு எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் முன் நிகாழ்ந்தபடியே நிகழும் ; கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயே வெளிப்படும்.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக் கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------