விரும்பும் பதிவைத் தேடுக !

கற்றன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்றன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 டிசம்பர், 2021

கற்றன்னர் கற்றாரைக் காதலர் - பாடல்.58 - வை.வேதரெத்தினம் உரை !

 

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  நாகனார் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (58)

------------------------------

கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்

செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர்தெற்றென

உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்

புற்றன்னர் புல்லறிவி னார்.

 

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------------

கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண் ஓடார்

செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தார்தெற்ரென

உற்றது உரையாதார் உள் கர்ந்து பாம்பு உறையும்

புற்று அன்னர் புல் அறிவினார்.

 

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

கற்றறிந்த சான்றோரைப்  பிரியாமல் அவர்களுடன் இருப்பவர்கள், தாமும்  கற்றுயர்ந்து, அச்சான்றோர்க்கு ஒப்பாக விளங்குவர் !

 

கண்ணோட்டம் என்னும் இரக்கவுணர்வு இல்லா மாந்தர்கள், பிறருக்கு இடர் செய்யும்  வன்மன  மானிடர்க்கு ஒப்பாவர் !

 

உண்மையைத் தெளிவாக உரைக்காமல் அதற்குத் திரை போட்டு மூடி மறைக்க முயல்பவர்கள், பகைவருக்கு ஒப்பாவர் !


அதுபோல், பிறருக்குக் கேடு நினைக்கும் புன்மதியாளர்கள் பாம்புகள் மறைந்து வாழும் மண் புற்றுக்கு  ஒப்பாவர் !

 

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

கற்றாரை = கல்வியறிவு  உடையவர்களை ; காதலர் = அன்பால் விரும்புகின்றவர்கள் ; கற்றன்னர் = அக்கல்வியறிவு உடையவர்களை ஒப்பர் ; கண் ஓடார் = பிறர்பால் கண்ணோட்டம் (அருள்,இரக்கம்,நாகரிகம்) இல்லாதவர்கள் : செற்றன்னர் = துன்பம் செய்வாரை  ஒப்பர் ; தெற்றென = தெளிவாக ; உற்றது = உண்மையை ; உரையாதார் = சொல்லாதவர்கள் ; செற்றாரைச் சேர்ந்தவர் = பகைவரை ஒப்பர் ; புல்லறிவினார் = கீழ்மை அறிவுடையோர் ; பாம்பு உள் கரந்து உறையும் = பாம்பு உள்ளே மறைந்து வாழும் ; புற்று அன்னர் = புற்றினை ஒப்பர்.

 

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

கல்வியறிவு உடையவர்களை விரும்பி உடன் இருப்பவர்கள் அக்கல்வி அறிவுடையவர்களுக்கு ஒப்பாவார் ; கண்ணோட்டம் (இரக்கம்)  இல்லாதவர்கள், இடர் செய்வாரை  ஒப்பர் ; உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் பகைவருக்கு நிகராவார்கள் ; சிற்றறிவுடைவர்கள் பாம்புக்கு ஒப்பாவார்.


--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),15]

{01-12-2021}

---------------------------------------------------------------------------------------