விரும்பும் பதிவைத் தேடுக !

கோல் நோக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோல் நோக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 நவம்பர், 2021

கோல் நோக்கி வாழும் குடியெல்லாம் - பாடல்.29 - வை.வேதரெத்தினம் உரை !

கி.பி.2- ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூலான நான்மணிக் கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூல் வகையைச் சார்ந்த இவ்விலக்கியத்தில்   பல அரிய கருத்துகள் சொல்லப்படுகின்றன ! இதிலிருந்து ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் : (29)

------------------------------

 

கோல்நோக்கி   வாழும்  குடியெல்லாம்;   தாய்முலைப் 

பால்நோக்கி   வாழும்   குழவிகள்;   -  வானத்

துளிநோக்கி   வாழும்    உலகம்;   உலகின்

விளிநோக்கி   இன்புறூஉம்   கூற்று.

-------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

 

நாட்டில் வாழும் குடி மக்கள் எல்லாம் ஆள்வோரின்  செங்கோல் தவறாத நல்லாட்சியை  எதிர்பார்த்து வாழ்கிறார்கள் !

 

பிறந்த குழந்தைகள் எல்லாம் தம் பசிக்குத்  தாய்ப் பாலை  நம்பியே உயிர் வாழ்கின்றன !

 

இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் வானத்திலிருந்து பொழிகின்ற மழையைச் சார்ந்தே உயிர் வாழ்கின்றன !

 

ஆனால், கூற்றுவனோ தன் கடமையை நிறைவேற்ற உயிர்களின் இறப்பை எதிர்பர்த்தே காத்திருக்கிறான் !

 

------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------------

குடியெல்லாம் = குடிமக்கள் எல்லோரும் ; கோல் நோக்கி = ஆள்வோரின் நேர்மை தவறாத ஆட்சியை எதிர்பார்த்து ; வாழும் = உயிர் வாழ்வர் ; குழவிகள் = குழந்தைகள் எல்லோரும் ; தாய் முலைப்பால் நோக்கி = தம் பசிக்குத் தாய்ப்பாலை நம்பியே ;  வாழும் = உயிர் வாழ்கின்றன ; உலகம் = உலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ; வானத் துளி நோக்கி = வானின்று பொழியும் மழையைச் சார்ந்து ; வாழும் = உயிர் வாழ்கின்றன ;  கூற்று = கூற்றுவன் (எமன்) ; உலகின் விளி நோக்கி = உயிர்களின் இறப்பை  நோக்கி ; (விளிதல் = இறத்தல்) ; இன்புறூஉம் = மகிழ்வான்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------

குடிகள் எல்லாம் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர் ; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும் ; உயிர்கள் மழைத்துளியால் வாழும் ; கூற்றுவன் உயிர்களின் சாக்காட்டை எதிர்நோக்கி வாழ்வான் !

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}