விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 19 நவம்பர், 2021

திருவின் திறலுடைய தில்லை - பாடல்.32 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் படைத்த இலக்கியம் நான்மணிக்கடிகை !  ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளை எடுத்துச் சொல்கிறார். அவை ஒவ்வொன்றும் முத்து முத்தான கருத்துகள். உயர்நிலைப் பள்ளி அளவிலேயே இந்தக் கருத்துகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் ! இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (32)

---------------------------

திருவின்  திறலுடைய  தில்லை  -  ஒருவற்குக்

கற்றலின்  வாய்த்த  பிறவில்லை  -  எற்றுள்ளும்

இன்மையின்  இன்னாத  தில்லையில்   லென்னாத

வன்மையின்  வன்பாட்ட தில்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

திருவின்   திறலுடையது   இல்லை   -  ஒருவற்குக்

கற்றலின்   வாய்த்த   பிறஇல்லை  -  எற்றுள்ளும்

இன்மையின்   இன்னாதது   இல்லைஇல்   என்னாத

வன்மையின்   வன்பாட்டது  இல்.

------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்குச் செல்வத்தைப் போல்  வலிமை உடையது  வேறொன்றும் இல்லை !

துளக்கமறக் கற்ற கல்வி அறிவைப் போல உற்ற நேரத்தில் அவனுக்குப் பயன் தருவதும் வேறில்லை !

வறுமையைப் போல்  மனிதனுக்குத்  துன்பம்   தருவதும்  இவ்வுலகில்  வேறு எதுவும்  இல்லை !

அதைப்போல, எந்தச் சூழ்நிலையிலும்  இரவலர்களுக்கு  இல்லைஎன்று சொல்லாத  மனவுறுதியைப்  போல்  திட்பமானதும்  வேறு  இல்லை !

------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

--------------------------------------

ஒருவற்கு = ஒருவனுக்கு ; திருவின் = செல்வத்தைப் போல ; திறல் உடையது = வலிமை உடையது ; இல்லை = பிறிதில்லை; கற்றலின் = கல்வியறிவைப்போல் ; வாய்த்த = உற்ற நேரத்தில் பயன் தருவது ; பிற இல்லை = வேறு இல்லை; எற்றுள்ளும் = எதனுள்ளும் ; இன்மையின் = வறுமையைப் போல் ; இன்னாதது = துன்பமுடையது ;  இல்லை = வேறு யாதுமில்லை ; இல் என்னாத = இரப்பார்க்கு இல்லை என்னாத ; வன்மையின் = மனவுறுதியைப் போல் ; வன்பாட்டது = திட்பமானது ; இல் = வேறு இல்லை.

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

--------------------------------

செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை ;  கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை ; வறுமையைப் போல் துன்பமானது வேறில்லை ; இல்லையென்னாது ஈவதைப் போல் திட்பமானது (உறுதியானது) வேறில்லை !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}

-----------------------------------------------------------------------------------------------

குழித்துழி நிற்பது நீர் தன்னைப் - பாடல்.31 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை, பெரும்புலவர் விளம்பி நாகனார் என்பவர் படைத்தது.  சங்க கால இலக்கியமான இந்நூல் அறநெறிக் கருத்துகளை எடுத்துரைக்கிறது ! கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106 பாடல்கள் உள்ளன ! இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (31)

--------------------------

குழித்துழி   நிற்பது   நீர்;தன்னைப்   பல்லோர்

பழித்துழி   நிற்பது   பாவம்;    அழித்துச்

செறிவழி   நிற்பது   காமம்;   தனக்கொன்று

உறுவுழி   நிற்பது  அறிவு.

------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-----------------

பள்ளம் எங்கிருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று  தேங்கி நிற்பது தான் தண்ணீரின்  இயல்பு !

சான்றோர்  பழிக்கும்   செயல்களைப் புரிகின்ற  கீழ்மக்களிடத்தில் தீவினைகள் குடிகொண்டிருப்பதும்  இயல்பு !

தவநெறியில் ஒழுகும் தூய  வாழ்வு  இல்லாத மக்களிடத்தில் காம உணர்வு  மேலோங்கி நிற்பதும் இயல்பு !

அதுபோல், ஒருவனுக்கு இடர் வரும்போது  அவனுக்குத் துணையாக  அவனது அறிவு நிற்பதும் இயல்பு !

------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நீர் குழித்துழி நிற்பது = தண்ணீர் குழிக்கப்பட்ட இடத்தில் நிற்கும் இயல்பு உடையது ; பல்லோர் = சான்றோர் பலரும் ; தன்னைப் பழித்துழி = பழிக்கும்   செயல்களைப் புரிகின்ற  கீழ்மக்களிடத்தில் ; பாவம் = தீவினை என்பது ; நிற்பது = சூழ்ந்து நிற்கும் இயல்புடையது ; அழித்து = தவ நெறியைக் கெடுத்து ; செறிவுழி = தீய நெறியில் வயப்பட்டால்  ;  காமம் =  காம உணர்வு ; நிற்பது = மேலோங்கி நிற்பது இயல்பு ; தனக்கு  = அறிஞன் ஒருவனுக்கு ;  ஒன்று உறுவுழி = ஓர் இடர் உண்டான காலத்தில் ; அறிவு = அவனது கல்வியறிவு ; நிற்பது = துணையாய் நிற்கும் இயல்பு உடையது.

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-------------------------------

பள்ளம் உள்ள இடத்தில் நீர் நிற்கும்;  பலரும் பழிக்கும் தீயோரிடத்தில்  பாவம் நிற்கும் ; தவ ஒழுக்கம் இல்லாதவன் பால், காமம் நிற்கும் ; இடர்வந்த போழ்து கற்ற அறிவு துணை நிற்கும்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}

------------------------------------------------------------------------------------------------

கற்பக் கழிமடம் அஃகும் - பாடல்.30 - வை.வேதரெத்தினம் உரை !

சங்க கால இலக்கியமான நான்மணிக்கடிகை  முழுவதும் வெண்பாக்களால் ஆனது. ஒன்னொரு பாடலிலும்  நந்நான்கு  கருத்துகள் சொல்லப்படுகின்றன !  மதி மன்னு மாயவன்  வாள்முகம் ஒக்கும்என்னும்  கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் இந்நூலாசிரியர் திருமால் வழிபாட்டினர் என்பது புலனாகிறது! இதிலிருந்து ஒருபாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (30)

---------------------

கற்பக்    கழிமடம்    அஃகும்  மடம்அஃகப்

புற்கந்தீர்ந்  திவ்வுலகின்  கோளுணருங்  கோளுணர்ந்தால்

தத்துவ  மான  நெறிபடரும்  அந்நெறி

இப்பா  லுலகின்  இசைநிறீஇ  -  உப்பால்

உயர்ந்த உலகம் புகும்.

(ஐந்து அடிகள் கொண்ட வெண்பாவாதலால், இதைப்   பஃறொடை  வெண்பா என்பர்)

------------------------------------------------------------------------------------------------

பொருள்:

------------

அறிவார்ந்த  நூல்களைக்  கற்கக்  கற்க, மனிதனிடம் குடிகொண்டுள்ள  அறியாமை  மெல்லெ மெல்லக் குறைகிறது !

அறியாமை  குறையக்  குறைய  அவனிடம்  நிறைந்திருக்கும் புல்லறிவு (முட்டாள்தனம்) நீங்கி  , இவ்வுலகத்தைப்  புரிந்து  கொள்கிறான் !

உலக இயல்பைப் புரிந்து கொண்ட பின் , உண்மையான அருள் நெறியில்  நடைபயிலத்  தொடங்குகிறான் !

அருள்நெறியில் ஒழுகத் தொடங்குவதால் , இம்மையில் புகழை ஈட்டுவதுடன்,  மறுமையில் வீடுபேறும் எய்துகிறான் !

----------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

கற்ப = ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால் ; கழிமடம் = மிக்க அறியாமை ; அஃகும் = குறையப் பெறுவான் ; மடம் அஃக = அறியாமை குறைய ; புற்கம் தீர்ந்து = புல்லறிவு நீங்கி ; இவ்வுலகின் = இவ்வுலகத்தின் ; கோள் உணரும் = இயற்கையைப்  புரிந்து கொள்வான் ;  (கோள் = இயல்பு, இயற்கை) கோள் உணர்ந்தால் = அவ்வியற்கையை அறிந்து கொண்டால் ; தத்துவமான = உண்மையான ; நெறி படரும் = அருள் நெறியில் செல்வான் ; அந் நெறி = அந் நெறியினால் ; இப்பால் உலகின் = இவ்வுலகின்கண் ; இசைநிறீஇ = புகழ் நிறுத்தி ; உப்பால் = மறுமையில் ; உயர்ந்த உலகம் புகும் = உயர்ந்த வீடு பேறு அடைவான்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

ஒருவன் அறிவு நூல்களைக் கற்றால் அறியாமை  குறையப் பெறுவான் ;  அறியாமை குறையப் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான் ; அறிய ,மெய்ந்நெறியாகிய நன்னெறியில் செல்வான் ; செல்ல, இவ்வுலகத்திற் புகழை நிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான் !

------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:-

 ------------------

இப்பாடல் நான்மணிக் கடிகைக்கு உரிய  பாடலாகத் தெரியவில்லை; இடைச்செருகல் போல் தோன்றுகிறது.  தத்துவம்என்ற தமிழல்லாச் சொல் இடம்பெற்றிருப்பதும்,  இம்மை, மறுமை போன்ற கருத்துகள் புகுத்தப் பெற்றிருப்பதும் இடைச்செருகல் என்பதை  உணர்த்துகிறது !