விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 29 நவம்பர், 2021

சிறந்தார்க்கு அரிய செறுதல் - பாடல்.51 - வை.வேதரெத்தினம் உரை !

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  நாகனார் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (51)

------------------------------

சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும்

பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல்

வரைந்தார்க் கரிய வகுத்தூண்  இரந்தார்க்கொன்

றில்லென்றல் யார்க்கும் அரிது.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------

சிறந்தார்க்கு அரிய செறுதல், எஞ்ஞான்றும்

பிறந்தார்க்கு அரிய துணை துறந்து வாழ்தல்,

வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண், இரந்தார்க்கு ஒன்று

இல் என்றல் யார்க்கும் அரிது.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

மிகச்சிறந்த நண்பர்கள் என்று கருதப்படுவோர் எவரும் சினம் கொள்வதில்லை; அவர்கள் எக்காலத்திலும் ஒருவரையொருவர் சினந்து கொள்வதில்லை !

உயர்குடியில் பிறந்த மேன்மக்கள், சுற்றத்தாரை அரவணைத்தே வாழ்வர் ; அவர்கள் தம் சுற்றத்தாரை விட்டு எக்காலத்திலும் விலகி வாழ்வதில்லை !

செல்வத்தைத் தமக்காக மட்டுமே செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள் ; அவர்கள்  பிறருடன் பகிர்ந்து உண்பதை எக்காலத்திலும் விரும்புவது இல்லை !

அதுபோல், ஈர நெஞ்சுடைய மாந்தர்களும்  இவ்வுலகில்  இருக்கிறார்கள் ; அவர்கள்  இரந்து வருவோரிடம் இல்லை என்று எக்காலத்திலும் சொல்வது இல்லை !

------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------------

சிறந்தார்க்கு = நட்பிற் சிறந்தவர்களுக்கு ;  செறுதல் = தம் நண்பர்களின் செயல்களில்   பிழை கண்டவிடத்து   அவர்களைச் சினந்து விலக்கி வைத்தல்  ;  அரிய = இலவாம் ; பிறந்தார்க்கு = உயர் குடியில் பிறந்த மேலோர்க்கு ; எஞ்ஞான்றும் = எக்காலத்திலும் ; துணை துறந்து வாழ்தல் = தமக்குத் துணையான சுற்றங்களை துரந்து வாழுதல் என்பது  ;  அரிய = இல ; வரைந்தார்க்கு = உணவின் பொருட் செலவைத் தமக்கென்றே அளவு செய்து வாழ்கின்றவர்களுக்கு ; வகுத்து ஊண் = பிறர்க்குப் பகுத்து அளித்து உண்ணும் நிகழ்ச்சிகள் ; அரிய = இல ; யார்க்கும் = ஈர நெஞ்சுடைய எவருக்கும் ;  இரந்தார்க்கு = தம்பால் வந்து இரந்து கேட்பவர்கட்கு ; ஒன்று = ஒரு பொருள் ; இல் என்றல் = இல்லை என்று மறுத்துக் கூறுதல் ; அரிது = இல்லை.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

சிறந்த நண்பர்கள் தம்முள் ஒருவரையொருவர் சினந்துகொள்ளார் ;  உயர் குடிப்பிறப்பினர் தன் இனத்தாரை  நீங்கி வாழார் ; தமக்காகவே செலவு செய்கின்றவர்கள் பிறர்க்குப் பகுத்துண்டல் செய்வாரல்லர் ; அருள் உடையவர் எல்லோரும் இரந்தார்க்கு இல்லை என்று சொல்லார் !

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),13]

{29-11-2021}

----------------------------------------------------------------------------------------------

போதினான் நந்தும் புனை தண்டார் - பாடல்.50 - வை.வேதரெத்தினம் உரை!

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை நாகனார்  வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (50)

---------------------------

போதினான் நந்தும் புணைதண்டார் மற்றதன்

தாதினான் நந்தும் சுரும்பெல்லாந்தீதில்

வினையினான் நந்துவர் மக்களுந் தத்தம்

நனையினான் நந்தும் நறா.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------

போதினால் நந்தும் புனை தண் தார் மற்று அதன்

தாதினால் நந்தும் சுரும்பு எல்லாம்தீது இல்

வினையினால் நந்துவர் மக்களும் தம் தம்

நனையினால் நந்தும் நறா .

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

மாலையில் தொடுக்கப் பெறும் பூக்களின் தன்மைக்கும் மணத்திற்கும்   ஏற்பவே, அம் மாலையின் மதிப்பும்,  உயர்நிலையை  அடைகிறது !

தீதற்ற பூக்களில் சுரக்கும்  இனிமை நிறைந்த  தேனை உண்பதால் தான்,  வண்டு இனமும்  நலமுடன் செழிப்படைந்து  வாழ்கிறது !

கெடுநோக்கம் துளியேனும் கலவாத நற்செய்கைகளால் தான் நன்மக்கள் மிகுந்த புகழையும்   உயர்வையும் தம்வாழ்வில்  அடைகின்றனர் !

அதுபோல், துளித் துளியாய்ச்  சுரந்து நிற்கும் மலர்களின்  வகைக்கும்  தன்மைக்கும்  ஏற்பவே தேனின்  நற்குணமும்   உயர்ந்தநிலை அடைகிறது !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

புனை தண் தார் = தொடுக்கப்படும் குளிர்ந்த மாலை ; போதினால் = பூக்களால் ; நந்தும் = மிக்கு விளங்கும் ; சுரும்பு எல்லாம் = வண்டுகள் எல்லாம் ; அதன் தாதினால் = அப் பூக்களின் தேனால் ; நந்தும் = மிக்குப் பொலியும் ; மக்களும் = உலகத்து மக்களும் ; தீது இல் வினையினால் = குற்றமில்லாத நற்செய்கைகளால் ; நந்துவர் = உயர்வு அடைவர் ; நறா = தேன் வகைகள் ; தம் தம் (தத்தம்) = தாம் தாம் இருக்கும் ; நனையினால் = பூவரும்பின் வகையினால் ; நந்தும் = பெருகி நல்லனவாகும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

மலர் மாலை பூவினால் பொலிவடையும்;  வண்டுகள் அப் பூவிலுள்ள தேனால் நன்மை பெறும் ; மக்கள் தம் நற்செய்கைகளால் உயர்வடைவர் ; அதுபோல், தாமிருக்கும் மலர் வகைகளுக்கேற்பத் தேனும் பெருகி வளம் பெருக்கும் !

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),13]

{29-11-2021}

-----------------------------------------------------------------------------------------------

மழையின்றி மாநிலத்தார்க்கில்லை - பாடல்.49 - வை.வேதரெத்தினம் உரை !

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  நாகனார்  வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (49)

--------------------------

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை, மழையும்

தவமிலார் இல்வழி இல்லை, தவமும்

அரச னிலாவழி இல்லை, அரசனும்

இல்வாழ்வார் இல்வழி யில்.

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------

மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்

தவம் இலார் இல்வழி இல்லை, தவமும்

அரசன் இலாவழி இல்லை அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்.

-----------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

இப்பூவுலகத்தில் உயிர்கள் செழித்து வளர உதவுகின்ற   மழை இல்லாவிட்டால் மக்களுக்கு நல்வாழ்வு என்பது  ஒருநாளும்  இல்லை  !

அம்மழையும், தன்னலம் துறந்து பிறர் நலம் நாடும் நல்லவர்கள் இல்லாத ஊர்களில் (தவம் இலார்) பெய்வதே இல்லை !

அத்தகைய நல்லவர்களும்  நெறி தவறாது இருத்தல்  என்பது முறை தவறாத ஆட்சியாளர்கள் இல்லாத நாட்டில் இயல்வதும் இல்லை !

அதுபோல், நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டில் முறை தவறா ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு  வர   முடிவதும் இல்லை !

-----------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

மழையின்றி = மழையில்லாமல் ; மாநிலத்தார்க்கு = இப்பேருலகத்தின் மக்கட்கு ; இல்லை = நலமில்லை ; மழையும் = அம்மழை தானும் ; தவம் இலார் = தவம் செய்தல் இல்லாதவர்கள் ;  இல் வழி = இருப்பிடங்களில் ; இல்லை = பெய்தலில்லை ; தவமும் = அவ்வியல்பினதான தவம் செய்தலும் ; அரசன் இலாவழி = செங்கோலரசன் இல்லாதவிடத்து ; இல்லை = நிகழ்தலில்லை ; அரசனும் = அச்செங்கோலரசனும் ; இல்வாழ்வார் = குடிமக்கள் ; இல்வழி = இல்லாதவிடத்து ; இல் = இலன் ஆவான்.

-----------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

மழை இல்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலமில்லை; அம்மழையும் தவமுடையார் இல்லாதவிடத்துப் பெய்தல் இல்லை; அத் தவம் செய்தலும் முறையான அரசன் இல்லாத நாட்டில் நிகழ்தல் இல்லை; அவ்வரசனும் குடிகள் இல்லாதவிடத்தில் இருப்பதில்லை !

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),13]

{29-11-2021}

--------------------------------------------------------------------------------------------