விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 16 நவம்பர், 2021

எள்ளற்க என்றும் எளியரென்று - பாடல்.03 - வை.வேதரெத்தினம் உரை !

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ! கி.பிஇரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியம்இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். 101 பாடல்களைக் கொண்ட இந் நூலிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் (03)

------------------

எள்ளற்க  என்றும்  எளியரென்று ! என்பெறினும்

கொள்ளற்க  கொள்ளார்கை  மேற்பட – உள்சுடினும்

சீறற்க சிற்றில் பிறந்தாரை ! கூறற்க !

கூறல்ல  வற்றை விரைந்து !

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

எளிமையான தோற்றத்தை அளவுகோலாக வைத்து எந்தவொரு மனிதரையும்  நாம்  ஏளனமாக  எண்ணலாகாது !

பண்பில்லாத மனிதன்  தருகின்ற பொருள், மதிப்பில் எத்துணை உயர்வுடையதாக இருந்தாலும்  அதை வாங்கலாகாது !

ஏழை எளிய மக்கள் எத்துணைத் தவறு செய்தாலும், அவர்கள் மீது இரக்கமின்றிச் சினம் கொள்ளலாகாது !

அதுபோல்,  எதற்காகவும்  உள்ளம் பதை பதைப்பு அடைந்து, யாரிடத்தும் சொல்லக் கூடாத  சுடுசொற்களைச் சொல்லலாகாது !

-----------------------------------------------------------------------------------------------

சொற் பொருள்:

-----------------------------

எள்ளற்க = இகழ்ந்து பேசாதே ; என் பெறினும் = மிகச் சிறந்த ஒன்றைப் பெறுவதானாலும் கூட ; கொள்ளற்க = வாங்காதே ; கொள்ளார் கை = கொள்ளத் தகாதவருடைய கைகள் ; மேல ஆ = அவர் கை மேலேயும் உன் கை  கை கீழேயும் ; உள் சுடினும் = ஏழையின் செய்கை உன் மனத்தை வருத்தினாலும் ; சீறற்க = சினந்து பேசாதே ; சிற்றில் பிறந்தாரை = ஏழைகளை ; கூறல்லவற்றை = சொல்லத் தகாத சொற்களை ; விரைந்து = பதை பதைப்பு அடைந்து ; கூறற்க = சொல்லிவிடாதே !

------------------------------------------------------------------------------------------------

 கருத்துச் சுருக்கம்:

--------------------------------

எவரையும்  எளியவர் என்று இகழாதே ! சிறந்த பொருளாயினும் தகாதவர் தந்தால் வாங்காதே !  ஏழை எளியோரை எதற்காகவும் சினந்துகொள்ளாதே ! அதுபோல் தகாத சொற்களைப் பதை பதைத்துச் சொல்லிவிடாதே !

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,துலை(ஐப்பசி),30]

{16-11-2021}

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

படியை மடியகத்து இட்டான் - பாடல்.02 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. 106 பாடல்களைக் கொண்ட இந்நூலில் இரண்டாவது பாடலும் கடவுள் வாழ்த்தே ! இதோ அந்தப் பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (02)

--------------------------

படியை மடியகத் திட்டான் அடியினால்

முக்காற் கடந்தான் முழுநிலம்அக்காலத்து

ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்

அருமை யழித்த மகன்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------

படியை மடியகத்து இட்டான், அடியினால்

முக்கால் கடந்தான் முழுநிலம்அக்காலத்து

ஆ பனி தாங்கிய குன்று எடுத்தான், சோவின்

அருமை அழித்த மகன்.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

எல்லா உலகங்களையும்  யசோதைக்குத் தன் வயிற்றினுள் வைத்துக் காட்டியவன் மணிவண்ணன் என்னும் கண்ணன் !

ஒரு அடியால் இந்த உலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும், மூன்றாவது அடியால் கீழுலகத்தையும் அளந்தவன் !

இந்திரன் பொழிந்த கல்மழையினின்று ஆனிரைகளைக் காக்க, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவன் !

அதுபோல்,அநிருத்தனை  மீட்கச் சென்றபோது எதிர்த்த பாணாசுரனை அவனது நெருப்பு மதிற் கோட்டையோடு அழித்தவன் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

படியைஉலகத்தை; மடியகத்து இட்டான் = தன் வயிற்றினுள் வைத்தான்;  அடியினால் = தன் திருவடிகளால்; முழு நிலம் = உலகங்கள் முழுமையும்; முக்கால் நடந்தான் = மூன்று முறைகளில் தாவியளந்தான் (ஒரு அடியால் நிலவுலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் கடந்து , மூன்றாவது அடியை மாபலியின் தலைமேல் வைத்துக் கீழுலகத்தையும் அளந்தனன்) ; அக்காலத்து = இந்திரன் கல்மழையைப் பெய்வித்த போது; ஆ பனி = ஆனிரைகளின் நடுக்கத்தை; தாங்கிய = தடுக்கும் பொருட்டு; குன்று எடுத்தான் = ‘கோவர்த்தனம்என்னும் மலையைக் குடையாகத் தூக்கினான்; சோவின்  அருமை = பாணாசுரனது அழித்தற்கு அரிய  நெருப்பு மதிலை; அழித்த மகன் = அழித்த பெருமானான திருமால்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

உலகத்தையே தன் வயிற்றினுள் அடக்கியவன்;  மூன்று உலகங்களையும்  மூன்றே அடிகளால் அளந்தவன்;  ஆனிரைகளைக் காக்க கோவர்த்தன மலையைப் பெயர்த்துக் குடையாகப் பிடித்தவன்;  பாணாசுரனை அழித்தவன், அழிவே இல்லாத இந்த மணிவண்ணன் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,துலை (ஐப்பசி),30]

{16-11-2021}

------------------------------------------------------------------------------------------------

மதி மன்னும் மாயவன் - பாடல்.01- வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. 106 பாடல்களைக் கொண்ட இந்நூலில் முதலாவது பாடல் கடவுள் வாழ்த்து ! இதோ அந்தப் பாடல் !

----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (01)

---------------------------

மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்

கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்

முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப்

புதுமலர் ஒக்கும் நிறம்.

----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-------------------------------------------------

மதி, மன்னும் மாயவன் வாள்முகம் ஒக்கும்

கதிர் சேர்ந்த ஞாயிறு, சக்கரம் ஒக்கும்

முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர், மற்று அவன் கண் ஒக்கும், பூவைப்

புது மலர் ஒக்கும் நிறம்.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

விண்ணில் வலம் வருகின்ற முழுமதியானது, திருமாலின் ஒளி பொருந்திய திருமுகத்தை ஒத்திருக்கும் !

உலகத்தை உய்விக்க உலாவருகின்ற  கதிர்மிகுந்த சூரியனானது, திருமாலின் சக்கரப் படையை ஒத்திருக்கும் !

நீர் நிறைந்த கழனிகளில் மலர்ந்திருக்கும் செந்தாமரைப் பூ, திருமாலின் கண்களை ஒத்திருக்கும் !

அதுபோல், காயா மரத்தில் பூத்திருக்கும் பூவின் நீல வண்ணமானது, திருமாலின் மேனியின் நிறத்தை ஒத்திருக்கும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------------

மதி = திங்கள்;  மன்னும் மாயவன் = அழிதல் இல்லாத திருமாலினது; வாள் முகம் ஒக்கும் = ஒளியையுடைய  திருமுகத்தை ஒத்திருக்கும்; கதிர் சேர்ந்த ஞாயிறு = ஒளி மிகுந்த  சூரியன்; சக்கரம் ஒக்கும் = அவனது சக்கரப் படையை ஒத்திருக்கும்; முது நீர்ப் பழனத்து = வற்றாத நீரையுடைய கழனிகளில் முளைத்த; தாமரைத் தாளின் = செந்தாமரைத் தண்டினின்றும்;  எதிர்மலர் = தோன்றும் செந்தாமரைப்பூ;  அவன் கண் ஒக்கும் = அவனது கண்களை ஒத்திருக்கும்; பூவைப் புதுமலர் = காயாமரத்தின் புதுப்பூ; நிறம் ஒக்கும் = அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------

திருமாலின் முகம் போன்றது முழுநிலவு;  அவன் சக்கரப் படையைப் போன்றது சூரியன்;  கண்களைப் போன்றது செந்தாமரைப் பூ;  நீல நிற உடலைப்  போன்றது காயாமலர்; இந்த உலகமே அவனை எதிரொலிக்கும் இயற்கைப் படைப்பு ! அவன் அழிவற்றவன் !