விரும்பும் பதிவைத் தேடுக !

நகையினிது நட்டார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகையினிது நட்டார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

நகை இனிது நட்டார் நடுவண் - பாடல்.39 - வை.வேதரெத்தினம் உரை !

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை  கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக் கொண்டது..இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர். சங்க கால இலக்கியமான இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (39)

-------------------------

நகையினிது  நட்டார்  நடுவண்  பொருளின்

தொகையினிது  தொட்டு  வழங்கின்  -  வகையுடைப்

பெண்ணினிது  பேணி  வழிபடின்  -  பண்ணினிது

பாடல்  உணர்வா  ரகத்து.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------------------

நகை இனிது நட்டார் நடுவண், பொருளின்

தொகை இனிது தொட்டு வழங்கின், – வகையுடைப்

பெண் இனிது பேணி வழிபடின், – பண் இனிது

பாடல் உணர்வார் அகத்து.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

நண்பர்களை  அணுகும் போது  இறுக்கமான முகக்குறிப்புகள்  மன மகிழ்ச்சியைத் தராது; முகமலர்ச்சியுடன்   அணுகினால் தான்   நட்பினால்  இன்பம்    விளையும் !

சேர்த்து வைத்திருக்கும்   செல்வக் குவியல், மனத்திற்கு இன்பம் தந்துவிடாது; ; அதை வறிவர்களுக்கு  வழங்கும் போது தான்  செல்வத்தினால் மிகுந்த  இன்பம் விளையும் !

கணவனுடன்  முரண்பட்டால்    இல்லறவாழ்வு  இனிமை தராது;  கணவனுக்கு ஊக்கமளித்துத்  தாங்கிப் பிடிக்கும் மனைவியின் துணையே இல்லறத்தில் இனிமையைப் பெருக்கும் !

அதுபோல் பாடலின் பொருளை உணராதவர்களுக்கு இசை இனிக்காது; பாடலின் பொருளை முழுமையாக உணர்ந்து  சுவைப்பார்க்கு  மட்டுமே அப்பாடலின் இசை இனிமையைத் தரும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

நகை = மகிழ்ச்சி; நட்டார் நடுவண் = நண்பர்களிடையே; இனிது = இன்பம் தரும்; பொருளின் தொகை = செல்வக் குவியல்; தொட்டு வழங்கின் = எடுத்து ஏழைகளுக்கு வழங்கப்பெற்றால்; இனிது = இன்பம் தருவதாகும்; வகையுடைப் பெண் = நற்குடிப் பிறந்த பெண் ; பேணி வழிபடின் = கணவனைப் போற்றி அவன் வழி நின்றால்;  இனிது = இன்பம் பெருகும்;  பண் = இசை; பாடல் உணர்வார் அகத்து = பாட்டின் பொருளை உணர வல்லவரிடத்து; இனிது = இனிதாம்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

முகமலர்ச்சியுடன் பழகுதல் நட்பில் இனிமை தரும்;  வறிவர்க்கு வழங்கும் போது செல்வத்தினால் இன்பம் விளையும்; முரண்படா மனைவியினால் இல்லறத்தில் இன்பம் விளையும்; பாடலின் பொருளை உணர்ந்தார்க்கே, பண் இனிமை தடும் !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------