விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 30 நவம்பர், 2021

யானையுடையார் கதனுவப்பர் - பாடல்.56 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (56)

--------------------------------

யானை யுடையார் கதனுவப்பர், மன்னர்

கடும்பரிமாக் காதலித் தூர்வர்கொடுங்குழை

நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை

அல்லார் உவப்பது கேடு.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-------------------------------------------------------

யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்

கடும் பரிமாக் காதலித்து ஊர்வர்கொடும் குழை

நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை

அல்லார் உவப்பது கேடு.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

போர்க்களத்தில் சினமுற்றுத் தாக்கும் சிறந்த யானையே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதால், செங்களத்தில், யானைப்  படை வீரர்கள், அதனிடம் சீறும் சினத்தையே விரும்புவார்கள் !

மிகவிரைந்து ஓடுகின்ற மேன்மையான குதிரையில் ஏறிச்செல்வது வீரத்துக்கு அடையாளம் என்பதால் அரசர்கள், விரைந்தோடும் புரவியில்தான்  விரும்பி ஏறுவார்கள் !

மகரக் குழையணிந்த மங்கை என்றாலும்கூட, மங்கையரின்  மேனி அழகுக்கு மேலும் அழகூட்டும்  நாணம், அவளிடம் தவழ்வதையே நல்லியல்புடைய ஆடவர்கள் விரும்புவார்கள் !

ஆனால், நாணத்தைத்  துறந்துவிட்டு நடைபயிலும், நல்லியல்பு இல்லாப் பெண்டிரிடம்  நற்குணமில்லாத ஆடவர்கள் நல்லன  அல்லாதவற்றையே நயந்து விரும்புவார்கள் ! 

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

யானை உடையார் = யானையை உடைய போர்த் தலைவர் ; கதன் உவப்பர் = அதன் சினத்தை விரும்புவர் ; மன்னர் = அரசர் ; கடும் பரிமா = மிக விரைவாக  ஓடக்கூடிய  குதிரையை ; காதலித்து = விரும்பி ; ஊர்வர் = அதன் மேல் ஏறிச் செல்வர் ; கொடுங்குழை = வளைவான காதணியை அணிந்த ; நல்லாரை = மங்கையர்பால் ; நாண் = நாணத்தை ; நல்லவர் = நல்லியல்பு உடையவர்கள் ; உவப்பர் = விரும்புவார்கள் ; அல்லாரை = நாணுடையர் அல்லாத மகளிர்பால் ; அல்லார் = தீயோர் ; உவப்பது = விரும்புவது ; கேடு = தீய ஒழுக்கமேயாம்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

யானையை உடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள்; அரசர்கள் மிகவிரைவாக ஓடக் கூடிய குதிரையை விரும்புவார்கள். நல்லியல்பு உடைய ஆடவர்கள் நன் மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள்; தீய ஆடவர்கள் தீய பெண்டில்பால் தீதையே விரும்புவர்.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி (கார்த்திகை),14]

{30-11-2021}

----------------------------------------------------------------------------------------------

எருதுடையான் வேளாளன் - பாடல்.55 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (55)

-------------------------------

எருதுடையான் வேளாளன், ஏலாதான் பார்ப்பான்,

ஒருதொடையான் வெல்வது கோழிஉருவோடு

அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்

செறிவுடையான் சேனா பதி.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்;

ஒரு தொடையால் வெல்வது கோழிஉருவோடு

அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்

செறிவு உடையான் சேனாபதி.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

காடுகழனியை உழுதுப் பண்படுத்திப் பயிர் செய்வதற்கு,  சொந்தமாகத்  தனக்கு உழவு மாடுகளை  வைத்திருப்பவனே  வேளாளன் எனப்படுவான் !

ஒருகாலால் பெடையை வயப்படுத்தும் சேவலைப் போல, அனைவரையும் வயப்படுத்தி ஒற்றுமையுடன் வாழ்பனே பார்ப்பான் எனப்படுவான் !

அழகுத் திருவுருவம் மட்டுமன்றி, குடும்பத்தில் அனைவரையும் அரவணைத்து வாழ்வை நடத்திச் செல்லும் வல்லமை படைத்தவளே வாழ்க்கைத் துணைவி எனப்படுவாள் !

அதுபோல், தனது படைவீரர்களுடன் இரண்டறக் கலந்து, உண்டு உறைந்து, அவர்களது இன்ப  துன்பங்களில்  பங்கு கொள்பவனே மிகச்சிறந்த தளபதி எனப்படுவான் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

எருது உடையான் = உழவு மாடுகளை உடையவன் ; வேளாளன் = வேளாண்மை செய்யும் உழவன் ஆவான் ; ஒரு தொடையால் = ஒரு காலால் ; வெல்வது = பெட்டை கோழியைத் தன்வயப்படுத்துகின்ற ; கோழி = சேவற் கோழியைப் போல ; ஏலாதான் = எவர் பகையையும் ஏற்றுக் கொள்ளலின்றி யாவரையும் வயப்படுத்தி ஒற்றுமையுடன் வாழ்பவன் ; பார்ப்பான் = பார்ப்பான் எனப்படுவான் ; உருவோடு = நல்ல உருவ அழகோடு ; அறிவுடையாள் = வாழ்க்கையை நடத்தும் நல்லறிவு உடையவள் ; இல்வாழ்க்கைப் பெண் = இல்வாழ்க்கைக்கு உரிய துணைவி ; சேனை = தனது சேனையோடு ; செறிவு உடையான் = எஞ்ஞான்றும் ஒன்றுபட்டு உடன் உறைதல் உடைவன் ; சேனாபதி = சேனைத் தலைவன் ஆவான் ; என்ப = என்று பெரியோர் கூறுவர்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

உழவு மாடு உடையவன் வேளாளன்; ஒரு காலால் பெட்டைக் கோழியைத் தன்வயப்படுத்தும் சேவலைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பான்; அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணைவி ; சேனையோடு ஒன்றுபட்டு உடன் உறைபவன் சேனாபதி !

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),14]

{30-11-2021}

---------------------------------------------------------------------------------------------

யாறுள் அடங்கும் குளமுள - பாடல்.54 - வை.வேதரெத்தினம் உரை !

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை   வலியுறுத்துகிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (54)

--------------------------------

யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்

மன்னர் விழையுங் குடியுளதொன்மரபின்

வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை

வேள்வியோ டொப்ப உள.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

யாறுள் அடங்கும் குளம் உள, வீறு சால்

மன்னர் விழையும் குடி உளதொல் மரபின்

வேதம் உறுவன பாட்டு உள, வேளாண்மை

வேள்வியோடு ஒப்ப உள.

-----------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

ஆற்று வெள்ளம் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ள அளவுக்குப் பெரிய குளங்களும் இவ்வுலகில் உள்ளன !

நாடாளும் மன்னர் விரும்பக் கூடிய அளவுக்குக் கற்றறிந்து துறைபோகிய குடிமக்களும் இவ்வுலகில் உள்ளனர் !

மறை நூல்கள் எடுத்தோதும் சிறந்த வாழ்வியல் கருத்துகளை உள்வாங்கி உருவான பாடல்களும் இவ்வுலகில் உள்ளன !

அதுபோல்,  உயிரினங்களின் நல்வாழ்வுக்காக நடத்தப்பெறும் வேள்விகளுக்கு நிகரான ஈகைகளும் இவ்வுலகில் உள்ளன !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

---------------------------

யாறு = ஆற்று வெள்ளம் ; உள் அடங்கும் = தம்முட் புகுந்து அடங்கத் தக்க ;  குளம் உள = குளங்களும் நாட்டில் உள்ளன ; வீறு சால் = சிறப்பு அமைந்த ; மன்னர் விழையும் = அரசர்களால் விரும்பப்படும் ; குடி உள = குடி மக்களும் உள்ளனர் ;  தொல் மரபின் = பழைய முறைமையினை உடைய ; வேதம் உறுவன =  வேதக் கருத்துகளை பொருந்துவவாகி ; பாட்டு உள = சில தனிப்பாட்டுகளும் உள்ளன ; வேள்வியோடு ஒப்ப = வேள்விகளுக்கு நிகரானவாகிய ; வேளாண்மை உள = ஈகைகளும் உள்ளன.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க அளவுக்குப் பெரிய குளங்களும் உள்ளன; அரசரால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன ; வேதக் கருத்துகளையுடைய தனிப்பாடல்களும் உள்ளன. அதுபோல் வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி (கார்த்திகை),14]

{30-11-2021}

------------------------------------------------------------------------------------------------

எள்ளற் பொருளது இகழ்தல் - பாடல்.53 - வை.வேதரெத்தினம் உரை !

நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை   வலியுறுத்துகிறார் இந்தத்  தமிழறிஞர்.  இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (53)

-------------------------------

எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை

உள்ளற் பொருள துறுதிச்சொல்உள்ளறிந்து

சேர்தற் பொருள தறநெறி பன்னூலுந்

தேர்தற் பொருள பொருள்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

எள்ளல் பொருளது இகழ்தல், ஒருவனை

உள்ளல் பொருளது உறுதிச் சொல்உள் அறிந்து

சேர்தல் பொருளது அறநெறி, பல் நூலும்

தேர்தல் பொருள பொருள்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

ஒவ்வொரு மனிதனும் தன்னிடமிருந்து நீக்கவேண்டியது, பிறரை இகழ்வாகப் பேசுகின்ற  தீயசெயலை  !

ஒவ்வொரு மனிதனும் தயக்கமின்றி ஏற்க வேண்டியது, கற்றறிந்த சான்றோர்களின் நல்லுரையை !

ஒவ்வொரு மனிதனும்  உய்த்துணர்ந்து  கடைப்பிடித்து ஒழுக  வேண்டியது,  நலந்தரும் நல்வழியாம் அறவழியை !

அதுபோல், எத்தனை நூல்களைப் படித்தாலும் நாம் அறியவேண்டியது, அந்நூல்கள் நமக்குரைக்கும் மெய்ப்பொருளை !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

ஒருவனை = பிறனொருவனை ; இகழ்தல் = இகழும் செயல் ; எள்ளற் பொருளது = யாவராலும் நீக்குதற்குரியது ; உறுதிச் சொல் = ஒருவன் கூறும் உறுதிச் சொல்  ; உள்ளற் பொருளது = ஏற்றுக் கொள்ளற்குரியது ; அறநெறி = அறவழி ; உள் அறிந்து = ஒருவன் உள்ளத்தில் தெளிந்து ; சேர்தற் பொருளது = அடைதற்குரியது ; பொருள் = மெய்ப்பொருள்கள் ; பல் நூலும் = அமைவுடைய பல நூல்களையும் ; தேர்தற் பொருள் = ஆராய்ந்து தெளிதற்குரியன.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

ஒருவனால் நீக்கப்பட வேண்டியது  பிறரை இகழும் செயல்; ஏற்கப் பட வேண்டியது பெரியோர்கள் கூறும் நல்லுரை; தெளிவாகக் கடைப்பிடிக்க வேண்டியது அறவழி ; அதுபோல், நூல்களைப் படித்து அறியப்பட வேண்டியது அந்நூல்கள் உரைக்கும் மெய்ப்பொருள்.