விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

தேவர் அனையர் புலவரும் - பாடல்.76 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (76)

--------------------------------

தேவ ரனையர் புலவருந் தேவர்

தமரனையர் ஓரூர் உறைவார்தமருள்ளும்

பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்

கற்றாரைக் காத லவர்

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

தேவர் அனையர் புலவரும்; தேவர்

தமர் அனையர் ஓரூர் உறைவார்தமருள்ளும்

பெற்றன்னர் பேணி வழிபடுவார்; கற்றன்னர்

கற்றாரைக் காதல் அவர்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

தாய்மொழியில் பற்றும் ஆளுமையும் அறிவுத் திறனும்  மிக்க  ஆன்றோர்கள், “புலவர்எனப்படுவர்; இவர்கள் வானுலக மாந்தர்களுக்கு இணையான உயர்ந்த மனிதர்கள் !

இத்தகைய உயர்ந்த மனிதர்கள் உறைகின்ற ஊரில் வாழ்கின்ற  நற்பேறு பெற்ற மக்கள் அனைவரும், வானவர்களின் உறவினர்களுக்கு இணையான சீரிய  மனிதர்கள் !

இத்தகைய சீரிய மனிதர்களுள்ளும், “புலவர்பெருமக்களை விரும்பி அவர்களின் வழிநடந்து, பின்பற்றி  வழிபடுபவர்கள், அவர்களின் அருள்பெற்ற ஆளுமைகள் ஆவார்கள் !

இத்தகைய மேன்மை பெற்றபுலவர்கள் பால் அன்பு செலுத்தி, அவர்களின் அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கொள்பவர்கள், அப்புலவர்களுக்கே இணையானவர்கள் !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

புலவரும் = கல்வியறிவு உடைய புலவர்களும் ; தேவர் அனையர் = தேவருக்கு ஒப்பாவார்கள் ; ஓர் ஊர் உறைவார் = அப்புலவர்கள் உள்ள ஊரில் வாழ்பவர்கள் ; தேவர் தமர் அனையர் = அத் தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவார்கள் ; தமருள்ளும் = அவ்வாறு உறைந்து உறவானவருள்ளும் ; பேணி வழிபடுவார் = அப்புலவரை விரும்பி வழிபட்டவர்கள் ; பெற்றன்னர் = அவர்தம் அருள் பெற்றாரை ஒப்பர் ; கற்றாரைக் காதலவர் = புலவரைக் காதலித்து ஒழுகுவார் ; கற்றன்னர் = அப்புலவரை ஒப்பக் கற்றவரே ஆவர்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

புலவர்கள் தேவரை ஒப்பர் ; அவர் ஊரில் உறைவார் அவர் உறவினரை ஒப்பர் ; அவருள்ளும் பேணி வழிபடுவார் அவர் அருள் பெற்றாரை ஒப்பர் ; காதலித்து ஒழுகுவார் அக் கற்றாரையே ஒப்பர்.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{12-12-2021}

---------------------------------------------------------------------------------------------

கற்றான் தளரின் எழுந்திருக்கும் - பாடல்.75 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (75)

-------------------------------

கற்றான் தளரின் எழுந்திருக்குங் கல்லாத

பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்

ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்

பொய்யாவித் தாகி விடும்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

கற்றான் தளரின் எழுந்திருக்கும்; கல்லாத

பேதையான் வீழ்வானேல் கால் முரியும்; எல்லாம்

ஒருமை தான் செய்த கருவி தெரிவு எண்ணின்

பொய்யா வித்து ஆகிவிடும்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

கல்வியறிவு பெற்றுத் தேர்ந்த ஒருவன் தன் முயற்சியில் தோல்வியடைந்து மனம் தளர்ச்சியுற்றால், அதிலிருந்து மீட்சி பெற அவனால் உறுதியாக முடியும் !

அறிவில்லாத முட்டாள் தன் முயற்சியில் தோல்வியடைந்து மனம் நொறுங்கி விட்டால், அதிலிருந்து மீட்சி பெற அவனால் முடியவே முடியாது !

ஒரு பிறவியில் மனிதன் செய்கின்ற நல்வினை தீவினை எல்லாம், மறுபிறவியில் அவனது இன்ப துன்பங்களுக்குக் காரணங்களாக அமையும் !

ஆராய்ந்து பார்த்தால், மனிதனாகப்  பிறந்திருப்பதன்  பயனை உணர்ந்து அறவழியில் வாழ்க்கையைச் செலுத்தினால், அதுவே வீடுபேற்றுக்குக்  காரணமாக அமையும் !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

கற்றான் தளரின் = கல்வியறிவு உடையவன் ஒன்றில் இழுக்கல் உறுவானாயின் ; எழுந்திருக்கும் = அவன் எப்படியாயினும் உய்தி பெறுவான் ; கல்லாத பேதையான் = படிக்காத அறிவிலான் ; வீழ்வானேல் = இடையில் தளருவானாயின் ; கால் முரியும் = முயற்சி கெட்டு அழிவான் ; ஒருமை = ஒரு பிறப்பில் ; தான் செய்த எல்லாம் = தான் செய்தனவெல்லாம் ; கருவி = மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாம் ; எண்ணின் = ஆராயுமிடத்து ; தெரிவு = மெய்யுணர்வு ; பொய்யா வித்து ஆகிவிடும் = வீடு பேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

கல்வியறிவு உடையவன் தளர்வானேல் எப்படியாயினும் உய்வான் ; கல்லாத பேதை தளர்வானேல் மீள உய்வறியாது வீழ்வான் ; எவர்க்கும் ஒரு பிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாம் ; மெய் உணர்வு வீடுபேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{13-12-2021}

----------------------------------------------------------------------------------------------

ஊழியும் யாண்டெண்ணி யாத்தன - பாடல்.74 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (74)

---------------------------------

ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்

நாழிகை யானே நடந்தனதாழியாத்

தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்

வெஞ்சொலா லின்புறு வார்.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன ; யாமமும்

நாழிகை யானே நடந்தனதாழியாத்

தெற்று என்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கு என்றார்

வெஞ் சொலால் இன்புறுவார்.

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------------

ஊழி என்று சொல்லப்படும் காலமுறைமை, நம் முன்னோர்களால்,  இத்தனை ஆண்டுகள் என்று எண்ணி,  வரையறுக்கப் பட்டிருக்கிறது !

யாமம் என்று சொல்லப்படும் வேளைமுறைமையும்   இத்தனை நாழிகைகள் என்று எண்ணி நம் முன்னோர்களால்  வரையறுக்கப் பட்டிருக்கிறது !

ஊழிகளாகவும் நாழிகையாகவும் காலம் விரைவாகக் கழிந்து போவதை உணரும் அறிவுடையோர்,  அறிஞர்களை அணுகிக்கற்று அறிவுத்தெளிவு அடைகின்றனர் !

ஆனால், அறிவில்லாதோர், காலம் விரைவாகக் கழிகிறது என்பதைக் கருதாமல் பிறர்  மீது  கடுஞ்சொற்களைச் சொல்லிச் சொல்லி  மகிழ்ந்து காலத்தைக் கழிக்கின்றனர் !

---------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

ஊழியும் = ஊழிக்காலமும் ; யாண்டு எண்ணி = ஆண்டுகளால் எண்ணி ; யாத்தன = அளவு செய்யப்பட்டன ; யாமமும் = யாமக் காலமும் ; நாழிகையானே = நாழிகைகளால் ; நடந்தன = அளவு செய்யப்பட்டுக் கழிந்தன ; தாழியா = காலந் தாழாமல் ; தெற்றென்றார் கண்ணே =  தெளிந்தவர் இடத்தில் ; தெளிந்தனர் = அறிவுடையார் எல்லாம் ஐயம் தெளிந்தனர் ; வெட்கென்றார் = அறிவிலாதார் ; வெம் சொலால் = பிறரைக் கொடுமை கூறும் வெவ்விய சொற்களாலேயே ; இன்புறுவர் = சொல்லிச் சொல்லி இன்புறுவார்கள்.

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

ஊழிகள் யாண்டுகளாற் கணக்கெண்ணி அளவு செய்யப்பட்டுக் கழிந்தன ; யாமமும் நாழிகையால் வரையறுக்கப்பட்டுக் கழிந்தன ; அறிஞர் தெளிந்தார் மாட்டுக் காலந் தாழாமல் ஐயந் தெளிந்தனர் ; அறியாதார் பிறரை வெஞ்சொற் கூறி மகிழ்ந்தனர்.

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),26]

{12-12-2021}

---------------------------------------------------------------------------------------------

ஊர்ந்தான் வகைய கலினமா- பாடல்.73 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (73)

--------------------------------

ஊர்ந்தான் வகைய கலினமாநேர்ந்தொருவன்

ஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட

குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்

வளத்தனைய வாழ்வார் வழக்கு.

---------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------------

பதி நன்று பல்லார் உறையின்; ஒருவன்

மதி நன்று மாசு அறக் கற்பின்; – நுதி மருப்பின்.

ஏற்றான் வீறு எய்தும் இன நிரை; தான் கொடுக்கும்

சோற்றான் வீறு எய்தும் குடி.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

கடிவாளம் பூட்டிய குதிரைகள் அவற்றில் ஏறிச் செலுத்துபவரது திறமையைப் பொறுத்து இயங்கும் !

ஒரு மனிதன் செய்யும் அறச் செயல்கள், அவனது செல்வ வளத்தின்  திறத்துக்கு ஏற்பச் செழுமை பெறும் !

குளத்தின் ஆழ அகலத்தின் திறத்துக்கு ஏற்பவே, அதிலிருந்து வெளியேறும் நீர்க்காலின் மதகும் அமையும் !

இல்வாழ்வாருடைய வாழ்க்கைச் செயல்கள் அவரவரது வருவாய்ச் செழுமைக்கு ஏற்பவே அமையும் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

கலினமா = கடிவாளம் பூட்டிய குதிரைகள் ; ஊர்ந்தான் வகைய = அவற்றை ஏறிச் செலுத்துவானது திறத்துக்கு ஒத்தன ; அறம் செய்கை = அறச் செயல்கள் ; நேர்ந்த ஒருவன் = இசைந்த ஒருவனது ; ஆற்றல் வகைய = ஆற்றலைப் பொறுத்தன ; தூம்பின் அகலங்கள் = நீர்க்காலின் பரப்புகள் ; தொட்ட = தோண்டப்பட்ட ; குளத்து அனைய = குளங்களின் அளவின ; வாழ்வார் வழக்கு = இல்வாழ்வாருடைய வாழ்க்கைச் செய்கைகள் ; தத்தம் வளத்து அனைய = அவரவரது வருவாய்ச் செழுமையை ஒத்தன.

---------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------

குதிரைகள் சவாரி செய்வானது திறத்துக்கு ஒத்தன ; ஒருவனது அறச் செயல்கள் அவன்றன் ஆற்றலைப் பொறுத்தன ; நீர்க்காலின் அகலங்கள் குளத்தின் அளவின ; இல்வாழ்வார் வாழ்க்கைகள் அவரவர் வருவாய்ச் செழுமையை ஒத்தன.