விரும்பும் பதிவைத் தேடுக !

இளமைப் பருவத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளமைப் பருவத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2021

இளமைப் பருவத்துக் கல்லாமை - பாடல்.94 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (94)

------------------------------

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்

வளமிலா போழ்தத்து வள்ளன்மை குற்றம்

கிளைஞரில் போழ்திற் சினங்குற்றம் குற்றந்

தமரல்லார் கையகத் தூண்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;

வளமிலா போழ்தத்து வள்ளன்மை குற்றம்;

கிளைஞர் இல் போழ்தில் சினம் குற்றம்; குற்றம்

தமர் அல்லார் கையகத்து ஊண்.

-------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

இளம் பருவத்திலேயே கல்வி கற்க வேண்டும்; அப்படிக் கல்லாமல் தவிர்ப்பது தீய விளைவுகளைத் தரும் பிழையாக முடியும் !

பொருள் வரவு இல்லாத காலத்தில் ஈகை தவிர்க்க வேண்டும்; அப்படித் தவிர்க்காமல் ஈதல், இழப்புகளைத் தரும் பிழையாக முடியும் !

உறவினர்களின் துணை இல்லாத காலத்தில் பிறரைச் சினக்கலாகாது; அப்படிச் சினப்பது, கேடு விளைவிக்கும் பிழையாக முடியும் !

உள்ளத்தில் அன்பில்லாதவர் இல்லத்தில் உணவருந்தக் கூடாது; அருந்துதல் மானத்திற்கு ஊறு விளையும் பிழையாக முடியும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------

இளமைப் பருவத்து = இளம் பருவத்தில் ; கல்லாமை குற்றம் = கல்லாதொழிதல் பிழையாம் ; வளம் இலா = பொருள் வருவாய் இல்லாத போழ்தத்து = காலத்தில் ; வள்ளன்மை = ஈகை இயல்பு ; குற்றம் = பிழையாம் ; கிளைஞர் இல் போழ்தில் = உறவினர்கள் துணையில்லாத காலத்தில் ; சினம் குற்றம் = பிறரோடு சினத்தல் குற்றமாம் ; தமர் அல்லார் = தமக்கு உள்ளன்பு இல்லாதாரது ; கையகத்து = இடத்தில் ; ஊண் = உண்ணுதல் ; குற்றம் = பிழையாம்.

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

இளம் பருவத்தில் கல்லாமை குற்றம்; பொருளில்லாத காலத்தில் ஈதல் குற்றம் ; உறவினர் துணையில்லாத காலத்தில் பிறரைச் சினத்தல் குற்றம் ; உள்ளன்பு இல்லாதவர் மாட்டு உண்ணுதல் குற்றம்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

------------------------------------------------------------------------------------------------