விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 27 நவம்பர், 2021

நாற்றமுரைக்கும் மலருண்மை - பாடல்.48 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துக்களை எடுத்துரைக்கும் நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர்  இயற்றிய   இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (48)

--------------------------

நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய

மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்

அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்

முகம்போல முன்னுரைப்ப தில்

-------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-------------------------------------------------------------------------------------------------

நாற்றம் உரைக்கும் மலர் உண்மை கூறிய

மாற்றம் உரைக்கும் வினை நலம், தூக்கின்

அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும் முன்னம்

முகம் போல முன் உரைப்பது இல்.

-------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

ஒரு இடத்தில் பூ இருக்கிறது  என்பதை, அதன் நறுமணமே அனைவருக்கும்  காட்டிக் கொடுத்துவிடும் !

கேள்விகளுக்கு ஒருவன் இறுக்கும் விடைகளே, அவன் செயல்திறனை நமக்குக்  காட்டிக் கொடுத்துவிடும் !

ஒருவன் நெஞ்சில் நிறைந்திருக்கும் தீய எண்ணங்களை அவன் மனமே அவனுக்குக் காட்டிக் கொடுத்துவிடும் !

அதுபோல, ஒருவனது உள்ளத்தில் ஒளிந்திருக்கும்  உணர்வுகளை அவனது முகமே  வெளிப்படுத்திக்   காட்டிவிடும் !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

மலர் உண்மை = மலரின் இருப்பை ;  நாற்றம் உரைக்கும் = அதன் மணமே அறிவிக்கும் ; வினை நலம்  = ஒருவனது செய்கைத் திறத்தை ; கூறிய மாற்றம் உரைக்கும் = அவன் சொன்ன சொல்லே அறிவிக்கும் ; தூக்கின் = ஆராய்ந்தால் ; அகம் பொதிந்த தீமை = நெஞ்சிற் செறிந்த தீமைகளை ; மனம் உரைக்கும் = அவனது நெஞ்சமே அவனுக்கு அறிவிக்கும் ; முன்னம் = ஒருவன் உள்ளக் குறிப்பை ; முகம் போல = அவன் முகத்தைப் போல ; முன் உரைப்பது இல் = முற்படத் தெரிவிப்பது வேறில்லை !

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

மலரின் இருப்பினை அதன் மணமும், ஒருவன் செயல் திறனை அவன் சொல்லும், நெஞ்சிற் செறிந்த தீமையை அவன் நெஞ்சமும், உள்ளக்  குறிப்பை முகமும் அறிவித்து விடும் !

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),11]

{27-11-2021}

-------------------------------------------------------------------------------------------

நன்றிசாம் நன்றறியாதார் முன்னர் -பாடல்.47 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (47)

---------------------------

நன்றிசாம்  நன்றறியா  தார்முன்னர்ச்சென்ற

விருந்தும்  விருப்பிலார்  முன்சாம்அரும்புணர்ப்பின்

பாடல்சாம்  பண்ணறியா  தார்முன்னர்ஊடல்சாம்

ஊடல்  உணரா  ரகத்து.

-------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்.

-------------------------------------------------

நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்ச்சென்ற

விருந்தும் விருப்பு இலார் முன் சாம்அரும் புணர்ப்பின்

பாடல் சாம் பண் அறியாதார் முன்னர்ஊடல் சாம்

ஊடல் உணரார் அகத்து.

-------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

பிறர்  செய்யும் நன்மைகளின் பயன்களைப் பற்றிச் சிறிதும் அறியாதவரிடத்தில்    செய்ந்நன்றி உணர்வு என்பது  முற்றிலுமாக  அற்றுப்போகும் !

நெஞ்சில் அன்பு என்னும் உணர்வு  அறவே வற்றிப்போனவர் இல்லத்திற்குச்  செல்லும் விருந்தினரின் முகமலர்ச்சி  அக்கணமே  மடிந்துபோகும் !

பண்ணிசை பற்றிய அறிவு இல்லாத மாந்தரிடம், அரிய இசை நிரவல்களை உடைய  எந்தப் பாடலும் சுவைக்கும் வேட்கையின்றி  வீணாகவேபோகும் !

ஊடலைத் தொடர்ந்து வரும் கூடலில்தான் இன்பம் இருக்கிறது என்பதைச் சற்றும் அறியாத கணவரிடத்தில் ஊடலின் இனிமையே கெட்டுப்போகும் !

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

நன்று அறியாதார் முன்னர் = பிறர் செய்யும் நன்மைகளை நன்மை எனத் தெரிந்துகொள்ளாதவர்பால்; நன்றி சாம் = செய்ந்நன்றி கெடும்; விருப்பு இலார் முன் = அன்பு இல்லாதவரிடத்தில்; சென்ற விருந்தும் = போன விருந்தினரும்; சாம் = வாடுவர்; பண் அறியாதார் முன்னர் = பண் இசையை அறியாதவரிடத்தில்; அரும் புணர்ப்பின் = அரிய இசை நிரல்களையுடைய; பாடல் சாம் = பாட்டுக்கள் கெடும்; ஊடல் உணரார் அகத்து = ஊடுதலின் இனிமையைத் தெரியாத கணவரிடத்தில்;  ஊடல் சாம் = ஊடுதல் கெடும்.

 ----------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

நன்மைகளைப் பற்றிய   அறிவு இல்லாதவரிடத்தில் செய்ந்நன்றியுணர்வு  அற்றுப்போகும். அன்பில்லாதவார் இல்லத்திற்குச் செல்லும் விருந்தினரின் முகம் வாடிப்போகும். பண்ணிசை அறியாதவரிடத்தில் பாடல்கள் பயனற்றுப் போகும்.  ஊடலைப் பற்றி அறியாதவரிடத்தில் ஊடலின் இனிமை கெட்டுப்போகும்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),11]

{27-11-2021}

-----------------------------------------------------------------------------------------------

பொறிகெடும் நாணற்ற போழ்தே - பாடல்.46 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் எடுத்துச் சொல்கிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (46)

------------------------

பொறிகெடும்  நாணற்ற  போழ்தேநெறிபட்ட

ஐவரால் தானே வினைகெடும்பொய்யா

நலம்கெடும்  நீரற்ற  பைங்கூழ்நலமாறின்

நண்பினார் நண்பு கெடும்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------

பொறி கெடும் நாண் அற்ற போழ்தேநெறி பட்ட

ஐவரால் தானே வினை கெடும்பொய்யா

நலம் கெடும்  நீர் அற்ற பைங்கூழ்நலம் மாறின்

நண்பினார் நண்பு கெடும்.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

தீய செயல்களைச் செய்வதற்கு நாணப்படாத குணம் ஒருவனிடம் தோன்றுமாயின், அப்பொழுதே அவனிடமுள்ள செல்வம் அனைத்தும் அழிந்துபோகும் !

கண், காது, மெய், வாய், மூக்கு என்னும் ஐம்பொறிகளையும் எவனொருவான் அடக்கி  ஆள்கிறானோ, அவனிடம் தீய செயல்கள் எதுவும் நெருங்காது அழிந்து போகும் !

நீர் பாய்ச்சி முறையாகப் பயிரிட்டால்  நல்ல விளைச்சலைத் தவறாது தரும் பசும் பயிர்கள் கூட போதுமான நீரைப் பெறாவிட்டால் விளைச்சல் வீழ்ந்து போகும் !

அதுபோல், உற்றுழி உதவுவதே நட்புக்கு இலக்கணம் என்னும் நிலையை மறந்து ஒருவன் ஒழுகத் தொடங்கினால் , அந்த நொடியிலேயே நண்பர்களின் இயல்புமாறி நட்புணர்வு அழிந்து போகும் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

நாண் அற்ற போழ்தே = ஒருவனுக்கு நாணம் என்பது நீங்கின போதே; பொறி கெடும் = செல்வம் அழியும்; நெறி பட்ட = தன் வழிப்பட்ட; ஐவரால் = ஐம்பொறிகளால்; வினை தானே கெடும் = தீவினைகள் தாமாகவே ஒழியும்; நீர் அற்ற = நீரைப் பெறாத; பைங்கூழ் = பசும் பயிர்கள்; பொய்யா = பொய்க்காத; நலம் கெடும் = விளைவின் நன்மை கெட்டு ஒழியும்; நலம் மாறி = நட்பின் நலம் மாறுபட்டால்; நண்பினார் நண்பு = நண்பர்களின் நட்பியல்பு; கெடும் = கெட்டுப்போகும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

தீயவை கண்டு நாணுகின்ற நற்குணம் மாறினால், செல்வம் அழிந்து போகும். ஐம்பொறிகளை அடக்கி ஆள்பவனிடம், தீய செயல்கள் நெருங்காது அழிந்து போகும். போதுமான நீர் கிடைக்காவிட்டால் பயிர்களின் விளைச்சல்  வீழ்ந்து அழிந்து போகும். நட்பின் இலக்கணத்தை உணராவிட்டால் நண்பர்கள் விலகிச்செல்ல, நட்பும் அழிந்து போகும்.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

---------------------------------------------------------------------------------------------