விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 17 நவம்பர், 2021

கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம் - பாடல்.10 - வை.வேதரெத்தினம் உரை !


ஒவ்வொரு பாடலிலும் நான்கு  நான்கு கருத்துகளைச் சொல்லி இருப்பதால் நான்மணிக் கடிகை என்று பெயர் பெற்றுள்ள  இலக்கிய நூலை விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் படைத்துள்ளார் ! பதினெண் கீழ்க் கணக்கு நூல் வகையுள் இதுவும் ஒன்று ! இதிலிருந்து ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல்: எண் (10).

-------------------------------

 

கற்றார்முன்  தோன்றா  கழிவிரக்கங் காதலித்தொன்(று)

உற்றார்முன்  தோன்றா உறாமுதல்  தெற்றென

அல்ல  புரிந்தார்க்கு  அறந்தோன்றா;  எல்லாம்

வெகுண்டார்முன்  தோன்றாக்  கெடும்.

----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

 

ஒரு பொருளை அல்லது உயிருக்குயிரான உற்றாரை இழந்துவிட்டால், அதற்காகத் துன்பம் கொள்ளுதல் கற்றுத் தெளிந்தாரிடம் தோன்றுவதில்லை !

 

ஊக்கமுடன் ஒரு நன்முயற்சியில் ஈடுபட்டு உழைப்பவரிடம், உரிய பலன் விரைந்து  கிட்டவில்லையே  என்னும்  மனத்துன்பம், தோன்றுவதில்லை !

 

தெளிந்த  முடிவுடன் தீய செயல்களைச் செய்பவர்களிடம், அறம் செய்தலால் ஏற்படும் நற்பயன்களைப் பற்றிய நல்லறிவும் நல்லுணர்வும்  தோன்றுவதில்லை !

 

அதுபோல்,  சினத்திற்கு ஆட்பட்டு அறிவை இழப்பவர்களிடம் அவர்களுக்குக் கிட்டக் கூடிய அனைத்து நன்மைகளும் கிடைக்காமலேயே கெட்டு ஒழிந்து போகும் !

----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------------

 

கழிவிரக்கம் = இழந்த பொருள்களுக்கு இரங்குதல் ;  கற்றார் முன் தோன்றா = கற்றுணர்ந்த பெரியோர்பால் தோன்றாது ; காதலித்து  =  ஊக்கம் கொண்டு ;  ஒன்று உற்றார் முன் = ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவர் பால்  ;  உறா முதல் = விரைவில் பலன்  கிட்டவில்லையே என்னும் மனத் துன்பம் ; தெற்றென  =  தெளிவாய் ; அல்ல புரிந்தார்க்கு  = தீயவை செய்தார்க்கு  ;  அறம் தோன்றா  =  நல்லவை தோன்றமாட்டா ;  எல்லாம்  =  எல்லா நன்மைகளு ;  வெகுண்டார் முன்  =  சினம் கொள்வாரிடத்து ; தோன்றாக்  கெடும் = தோன்றாது கெட்டொழியும்.

----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------------

கழிந்துவிட்ட பொருள்களைப் பற்றிய துன்பம்  கற்றுத் தெளிந்தாரிடத்தும், முயற்சித் துன்பம் ஊக்கம் உடையாரிடத்தும், அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்தும், எல்லா நன்மைகளும் சினம் கொள்வாரிடத்தும் தோன்றாது !

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),01]

{17-11-2021}

-----------------------------------------------------------------------------------------------