நான்மணிக் கடிகை என்பது சங்க கால இலக்கியம். பதினெண்
கீழ்க் கணக்கு வகையைச் சார்ந்த்து.
கடவுள் வாழ்த்து உள்பட 106 செய்யுள்களை
உடைய இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் ! இந்நூலிலிருந்து
ஒரு செய்யுள் !
------------------------------------------------------------------------------------------------
பாடல். எண்.(21)
------------------------
பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய
மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து
விடும்.
-----------------------------------------------------------------------------------------------
பொருள்:
---------------
கணவன் தன் ஒழுகலாற்றில் கலக்கம் அடைவானாகில். அவன் மனைவியும் தன்
கடமைகளைச் செய்வதில் கலக்கம் அடைவாள் !
கற்றறிந்த புலவன் தன் அறிவில் தெளிவுன்றிக், கருத்தில்
கலக்கமுற்றால், அவன் கற்ற கல்வியும் கலக்கமுறும் !
குடிமக்கள் தம் நன்னெறி நீங்கி நிலை கலங்குவார்களானால் அரசனது ஆட்சியும் ஆட்டம்
காணும் !
அதுபோல், யாழின் நரம்புக் கட்டுகள் தம் நிலை குலைந்தால், யாழிலிருந்து பிறக்கும் இசையும் தெளிவின்றிக் கலக்கமுறும் !
-------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
---------------------------------
பெற்றான் = கணவன்;
அதிர்ப்பின் = ஒழுக்கத்திற் கலங்குவானாயின்; பிணை
அன்னாள் = பெண் மான் போலும் மருண்ட பார்வையுடைய அவன் மனைவியும்; அதிர்க்கும் = தன்
கடமையில் கலங்குவாள்; கற்றான் அதிர்ப்பின் = புலவன்
அறிவு கலங்கினால்; பொருள்
அதிர்க்கும் = அவர் கற்ற கருத்துகளும் நிலை கலங்கும்; பற்றிய
= தான் கைப்பற்றிய ; மண் = நாட்டிலுள்ள
குடிமக்கள் ; அதிர்ப்பின் = நிலை கலங்குவாரானால்; மன்னவன்
= அரசனது; கோல்
அதிர்க்கும் = ஆட்சியும் கலங்கும்; பண்
அதிர்ப்பின் = யாழின் நரம்புக் கட்டுகள் குலைந்துவிட்டால்; பாடல்
அதிர்ந்துவிடும் = பிறக்கும் இசைப்பாடல்களும் கலங்கிப் போகும்.
-------------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------
கணவன் அறிவு கலங்கினால்,
மனைவியும் கலங்குவாள்; கற்றான்
கலங்கினல் அருத்துகள் கலங்கும்;
குடி நடுங்கினால், கோன்
நடுங்குவன்; பண் அதிர்ந்தால், பாடல்
அதிர்ந்துவிடும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),03]
{19-11-2021}
-------------------------------------------------------------------------------------------------