கி.பி,2-ஆம்
நூற்றாண்டு வாக்கில் தோன்றிய நான்மணிக் கடிகை என்னும் நூல் விளம்பி நாகனார் என்பவரால்
படைக்கப் பெற்றது. கடவுள் வாழ்த்து உள்பட 106 பாடல்களைக்
கொண்ட இந்நூல் அறத்தை வலியுறுத்துகிறது !. இதிலிருந்து
ஒரு பாடல் !
-------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்;
(25)
--------------------------
மலைப்பினும் வாரணம் தாங்கும் அலைப்பினும்
அன்னேயென் றோடும் குழவி, சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினை செய்யார், ஒட்டார்
உடனுறையும் காலமும் இல்.
------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
பாகன் தன்னைக் கவை முள் கருவி கொண்டு குத்தி ஒறுத்தாலும் , அவனை வெறுக்காமல்,
யானையானது அவனைச்
சுமந்தே செல்கிறது !
தன்னை அடித்து வருத்தினாலும், அதை மனதில் கொள்ளாது , குழந்தையானது
“அம்மா” என்று அழுது கொண்டே தாயின் பின்னால் தான் ஓடுகிறது !
தவறு கண்டு சினந்து உரைத்தாலும்
, உண்மையான நண்பர்கள் நமக்கு எந்நாளும் தீமை செய்யத் துணிவது இல்லை !
ஆனால்,
பகைவர்களோ தமக்குள் வேற்றுமைகளை மறந்து ஒன்றாகக்
கூடி வாழ்தல் என்பது இவ்வுலகில்
ஒருபோதும் இருந்ததில்லை !
------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------
மலைப்பினும்
= பாகன் தன்னை ஒறுத்தாலும் ; வாரணம் தாங்கும்
= யானை அவனைச் சுமந்து செல்லும் ; அலைப்பினும் = தன்னை அடித்து
வருத்தினாலும் ; குழவி = குழந்தை ; அன்னே என்று
ஓடும் = “அம்மா” என்று அழுது கொண்டே அவளருகில் ஓடும்
; சிலைப்பினும் = தவறு கண்டு சினந்து கொண்டாலும் ; நட்டார்
= நண்பர் ; நடுங்கும் வினை செய்யார் = நாம்
நடுங்கும்படித் தீயவை செய்ய மாட்டார் ; ஒட்டார்
= பகைவர்கள் ; உடன் உறையும் காலமும் = தம்முள்
ஒன்று கூடி நீங்காமல் வாழும் காலமும் ; இல்
= ஒருபோதும் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------
யானையைப் பாகனும்,
குழந்தையைத் தாயும், நண்பர்களை
நண்பர்களும், வருத்தினாலும்
ஒருவரையொருவர் தழுவியே நிற்பர்; ஆனால் பகைவர்களோ எக்காலத்தும் தமக்குள் ஒன்றுபட்டு நிற்பதில்லை !
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),03]
{19-11-2021}
-------------------------------------------------------------------------------------------------