விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 19 நவம்பர், 2021

நகை நலம் நட்டார்கண் நந்தும் - பாடல்.26 - வை.வேதரெத்தினம் உரை !

 

பதினெண் கீழ்க் கணக்கு என்னும் இலக்கிய வகைப்பாட்டின் கீழ்  வரும் நூல் நான்மணிக்கடிகை .  ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைக்கும் அறநெறி இலக்கியம். இதைப் படைத்தவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் :(26)

-------------------------

 

நகைநலம்   நட்டார்கண்   நந்தும்;  சிறந்த

அவைநலம்  அன்பின்  விளங்கும்;  விசைமாண்ட

தேர்நலம் பாகனாற்  பாடெய்தும்;  ஊர்நலம்

உள்ளானால்  உள்ளப் படும்.

------------------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

 

முகமலர்ச்சியும், குளிர்ந்த பார்வையும் தான் நண்பர்களிடையே நட்புணர்வைச் செழித்துவளரச் செய்யும் !

 

பலதரப்பட்ட  மக்கள் குழுமியுள்ள அவையில் நாம் வெளிப்படுத்தும் அன்பு ஒன்றே நமக்கு நன்மதிப்பை ஈட்டித் தரும் !

 

தேர்ப்படையால் ஒரு மன்னன் பெறுகின்ற நன்மை, அதை இயக்கும் தேரோட்டியின்  மதிநலத்தைப்  பொறுத்து உயர்ந்து விளங்கும் !

 

அதுபோல், ஊர் மக்கள் பெறும் நன்மை அந்த ஊரை ஆள்கின்ற அரசனின் திட்டங்களால் தான் செழித்துச் சிறக்கும் !

-----------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நகை நலம் = முகமலர்ச்சியின் நன்மை ; நட்டார்கண் = நண்பர்களிடத்தில் ; நந்தும் = சிறக்கும் ; சிறந்த = மேலான ; அவை நலம் = அவையினால் பெறும் நன்மை ; அன்பின் விளங்கும் = நமது அன்பினால் சிறக்கும் ; விசை மாண்ட = விரைவு மிகுந்த ; தேர் நலம் = தேர்ப் படையால் கிடைக்கும் நன்மை ; பாகனால் = தேரோட்டியின் மதி நலத்தால் ; பாடு எய்தும் = சிறப்படையும் ; ஊர் நலம் = குடி மக்கள் பெறும் நன்மைகள் ; உள்ளானால் = அவ்வூரை ஆளும் அரசனால் ; உள்ளப்படும் = மதிக்கப்படும்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------

 

முகமலர்ச்சியும் குளிர்ந்த பார்வையும்  நட்பை வளர்க்கும் !  அவையில்  நாம் பெறும் மதிப்பு  நமது அன்பினால்  உயர்வடையும்  !  தேர்ப்படையின் நன்மை பாகனின் மதி நலத்தால்  சிறக்கும்  ! குடிமக்கள் பெரும் நன்மை  மன்னனின்  திட்டங்களால் மேம்பாடு அடையும் !

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}