விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 19 நவம்பர், 2021

மனைக்குப் பாழ் வாணுதலின்மை - பாடல்.22 - வை.வேதரெத்தினம் உரை !

கி.பி. 2 –ஆம் நூற்றாண்டில் தோன்றிய நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்து உள்பட 106 செய்யுள்களை உள்ளடக்கியது. விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர் இதைப் படைத்துள்ளார். ஒவ்வொரு பாடலிலும்  நந்நான்கு மணி மணியான கருத்துளைச் சொல்வதால் இது நான்மணிக்கடிகை எனப் பெயர்பெற்றது. இதிலிருந்து ஒரு செய்யுள் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (22)

----------------------------

மனைக்குப் பாழ்  வாள்நுதல்  இன்மை; தான்  செல்லும்

திசைக்குப் பாழ்நட்டோரை இன்மை;  இருந்த

அவைக்குப் பாழ்  மூத்தோரை இன்மை;  தனக்குப்பாழ்

கற்றறி  வில்லா உடம்பு.

-------------------------------------------------------------------------------------------------

பொருள்:

-----------------

மனைவி இல்லாத வீட்டில் அழகும் மகிழ்ச்சியும் துளியளவும்  இருக்காது  என்பதால் அவ்வீடு விரைவாக நலிவடைந்து போகும் !

செல்கின்ற ஊர்களில் நமக்கு நண்பர்கள் இல்லாதிருந்தால், இளைப்பாற இடமின்றி நமது செலவு (பயணம்)  நலிவடைந்து போகும் !

கல்வி, கேள்விகளிற் சிறந்த மூத்தோர்கள் இல்லாத அவை, நெறிப்படுத்துவார் இன்றி விரைந்து நலிவடைந்து போகும் !

அதுபோல், கல்வி அறிவு இல்லாத,  மனிதனின்  வெறும் உடம்பினால் பயனேதுமில்லை; அவன் வாழ்வே நலிவடைந்து போகும் !

-------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------

மனைக்குப் பாழ் = மனைக்குப் பாழாவது ; வாள் நுதல் இன்மை = மனைவி இல்லாமை ; தான் செல்லும் = தான் போகும் ; திசைக்குப் பாழ் = ஊர்ப்புறங்களுக்குப் பாழாவது ; நட்டோரை இன்மை = அவ்விடங்களில் நண்பர்கள் இல்லாமை ; இருந்த அவைக்குப் பாழ் = பலரும் கூடியிருந்த அவைக்குப் பாழாவது ; மூத்தோரை இன்மை = கல்வி கேள்வி முதலியவற்றால்  சிறந்த சான்றோரை இல்லாமை ; தனக்குப் பாழ் = பிறவியெடுத்த தனக்குப் பாழாவது ; கற்றறிவு இல்லா உடம்பு = கல்வியறிவு பெறாத வெறும் புலாலுடம்பு உள்ளமையாம்..

-------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------------

மனைவி இல்லா மனை பாழ்; நண்பரில்லாப் பக்கம் பாழ்; ஆன்றோரில்லா அவை பாழ்; கற்றறிவில்லா உடம்பு பாழ் !

-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),03]

{19-11-2021}

-------------------------------------------------------------------------------------------------