பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்து உள்பட 106 வெண்பாக்களால்
ஆன் இந்நூலைப் படைத்தவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர். சமண மதம் சார்ந்த இவர் தன் நூல் வழியாக அரும்பெரும் கருத்துகளை
எடுத்துரைக்கிறார். இந்நூலிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (23)
--------------------------
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியை – பெய்த
கலம் சிதைக்கும் பாலின் சுவையை; குலம்சிதைக்கும்
கூடார்கண் கூடி விடின்.
-------------------------------------------------------------------------------------------------
பொருள்:
------------------
தகுதியுள்ள மனிதர்களுடன் ஒற்றுமை பேணாமல் முரண்பட்டு வாழ்தல்,
ஒருவனது வலிமையைச் சிதைத்துவிடும் !
பொய்ம்மைக்கு இடம் கொடுத்துப் போற்றி ஒழுகுதல், அரசனின்
ஒறுப்புக்கு (தண்டனைக்கு) ஆளாகிப் பொன் போன்ற உடலைப் புண்படச் செய்துவிடும் !
பொருந்தாத பாண்டம், தன்னில்
நிரப்பி வைக்கப் பெற்ற பாலின்
இனிய சுவையைச் சிதைத்துக் கெடுத்துவிடும் !
அதுபோல்,
சேரக் கூடாத மனிதர்களுடன் சேர்ந்து ஒழுகினால், அச்செய்கை
அவர் குலத்தையே அழித்துவிடும்
!
-------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------
ஒற்றுமை இன்மை = தக்காரோடு ஒற்றுமை இல்லாமை; ஒருவனை
மொய் சிதைக்கும் = ஒருவனது வலிமையை ஒழிக்கும் ; பொய் = பொய்ம்மையான
ஒழுக்கம் ; பொன்
போலும் மேனியை = அழகிய உடம்பை; சிதைக்கும் = புண்படுத்தும்; பெய்த
கலம் = நிரப்பி வைக்கப் பெற்ற பாண்டம் ; பாலின்
சுவையை = பாலின் இனிய சுவையை; சிதைக்கும் = கெடுக்கும்; கூடார்
கண் = நட்புக் கொள்ளத் தகாதவரிடத்தில் ; கூடிவிடின் = சேர்ந்து
ஒழுகினால் ; குலம் சிதைக்கும் = அச்செய்கை
குலத்தையே அழித்துவிடும்.
-------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
----------------------------------
ஒற்றுமையின்மை வலிமையையும், பொய்ம்மை உடம்பையும், பால் பெய்த
பொருந்தாப் பாண்டம் பாலின் இன்சுவையையும், தீ நட்பு குலத்தையும் கெடுத்துவிடும் !
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),03]
{19-11-2021}
-------------------------------------------------------------------------------------------------