விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர்
படைத்த இலக்கியம் நான்மணிக்கடிகை ! ஒவ்வொரு
பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளை எடுத்துச் சொல்கிறார். அவை
ஒவ்வொன்றும் முத்து முத்தான கருத்துகள். உயர்நிலைப்
பள்ளி அளவிலேயே இந்தக் கருத்துகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்
! இதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்:
(32)
---------------------------
திருவின் திறலுடைய தில்லை - ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிறவில்லை - எற்றுள்ளும்
இன்மையின் இன்னாத தில்லையில் லென்னாத
வன்மையின் வன்பாட்ட தில்.
------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------
திருவின் திறலுடையது இல்லை - ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத
வன்மையின் வன்பாட்டது இல்.
------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்குச்
செல்வத்தைப் போல் வலிமை
உடையது வேறொன்றும்
இல்லை !
துளக்கமறக் கற்ற கல்வி அறிவைப்
போல உற்ற நேரத்தில் அவனுக்குப் பயன் தருவதும் வேறில்லை !
வறுமையைப் போல் மனிதனுக்குத் துன்பம்
தருவதும்
இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை !
அதைப்போல,
எந்தச் சூழ்நிலையிலும் இரவலர்களுக்கு ‘இல்லை’
என்று சொல்லாத மனவுறுதியைப் போல் திட்பமானதும் வேறு இல்லை
!
------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
--------------------------------------
ஒருவற்கு
= ஒருவனுக்கு ; திருவின் = செல்வத்தைப்
போல ; திறல் உடையது = வலிமை உடையது
; இல்லை = பிறிதில்லை; கற்றலின்
= கல்வியறிவைப்போல் ; வாய்த்த = உற்ற நேரத்தில்
பயன் தருவது ; பிற இல்லை = வேறு இல்லை;
எற்றுள்ளும் = எதனுள்ளும் ; இன்மையின்
= வறுமையைப் போல் ; இன்னாதது = துன்பமுடையது
; இல்லை
= வேறு யாதுமில்லை ; இல் என்னாத = இரப்பார்க்கு
இல்லை என்னாத ; வன்மையின் = மனவுறுதியைப்
போல் ; வன்பாட்டது = திட்பமானது
; இல் = வேறு இல்லை.
------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
--------------------------------
செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது
வேறில்லை ; கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை
; வறுமையைப் போல் துன்பமானது வேறில்லை ; இல்லையென்னாது ஈவதைப் போல் திட்பமானது (உறுதியானது)
வேறில்லை !
------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“நான்மணிக்கடிகை” வலைப்பூ.
[தி.ஆ:2052,நளி(கார்த்திகை),03]
{19-11-2021}
-----------------------------------------------------------------------------------------------