விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 20 நவம்பர், 2021

திருவும் திணைவகையான் நில்லா - பாடல்.42 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பிநாகனார் என்னும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட நூல் நான்மணிக்கடிகை. உலகியல்நெறி சார் கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கும் நாகனார், பாடல் தோறும் நான்கு  கருத்துகளை வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (42)

-------------------------

திருவுந் திணைவகையான் நில்லாப்பெருவலிக்

கூற்றமுங் கூறுவ செய்துண்ணாதாற்ற

மறைக்க மறையாதாங் காமம்முறையும்

இறைவகையான் நின்று விடும்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------------------

திருவும் திணைவகையால் நில்லா; - பெருவலிக்

கூற்றமும் கூறுவது செய்து உண்ணாதுஆற்ற

மறைக்க மறையாதாம் காமம்முறையும்

இறைவகையால் நின்று விடும்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-------------------

ஒருவன் பிறந்த குடியின் உயர்வு தாழ்வுக்கு ஏற்ப,  செல்வமானது  அவனிடம் வந்து சேர்வதும்  குறைந்து போவதும் ஒருபோதும் நிகழ்வதில்லை !

இறப்பு என்பது ஒருவனை அணுகும் போது, அவன் விருப்பத்தைக் கேட்டு, அவன்  விரும்பியபடியும்  ஒருபோதும் நிகழ்வதில்லை !

ஒருவனிடம் இயல்பாக எழும் காம உணரவை   அவன் எத்துணை முயன்றாலும் ஒருபோதும் அவனால் மறைக்கவும் முடிவதில்லை !

அதுபோல், ஆட்சி என்பது அரசனது போக்குக்கு ஏற்ப அமையக் கூடியது; அதை மாற்ற எவர் முயன்றாலும் ஒருபோதும் முடிவதுமில்லை !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

திருவும் = செல்வமும்; திணை வகையால் = குடிப்பிறப்பு வகையால்; நில்லா = பொருந்தி நில்லாவாம்;  பெருவலி = மிக்க வலிமையுடைய; கூற்றமும் = இறப்பும்; கூறுவ = தன்னால் கவரப்படுகின்றவர் சொல்வனவற்றை; செய்து உண்ணாது = கேட்டு நடவாது; ஆற்ற =  மிகவும்; மறைக்க = மறைக்க முயன்றாலும் ; காமம் = காமவுணர்வு ; மறையாது = மறைந்துபோகாது; முறையும் = ஆட்சி முறைமையும்; இறைவகையான் = அரசனது போக்குக்கு ஏற்றபடி ; நின்றுவிடும் = அமைந்துவிடும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-------------------------

குடிப்பிறப்புக்கு  ஏற்பச் செல்வம் நிலைப்பதும் உலைப்பதும் நிகழ்வதில்லை; இறப்பு என்பது மனிதன் விருப்பப்படி நிகழ்வதில்லை;  மறைத்தாலும் காமவுணர்வு மறைந்துபோவதில்லை; அரசனது போக்குக்கு ஏற்றபடி ஆட்சிமுறை அமைகிறது; அதை எவராலும் மாற்ற முடிவதில்லை !

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

-------------------------------------------------------------------------------------------------