விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 20 நவம்பர், 2021

போரின்றி வாடும் பொருநர் சீர் - பாடல்.44 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (44)

-------------------------

போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த

வேரின்றி வாடும் மரமெல்லாம் -  நீர்பாய்

மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி

மன்னர்சீர் வாடிவிடும்.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------

போர் இன்றி வாடும் பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த

வேர் இன்றி வாடும் மரம் எல்லாம்நீர் பாய்

மடை இன்றி நீள் நெய்தல் வாடும்; படையின்றி

மன்னர் சீர் வாடிவிடும்.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

போர் இல்லாமல் படை வீரர்கள்  நீண்ட நாள் வாளாவிருந்தால், அப்படைவீரர்களின் வீரமும் தீரமும்  முற்றிலுமாகக்  குறைந்து  போகும் !

நிலத்தினுள் இறங்கி மரத்திற்கு வலிவையும் உயிரையும் ஊட்டும்  வேர்கள் அறுந்து போனால், மரம் விரைவாகப் பட்டுப்போகும் !

நெய்தல் மலருக்கு நீரூட்டிச் செழிக்கச்  செய்யும் மடை தூர்ந்து போய், நீர் அற்றுவிட்டால்,  நெய்தல் மலர்கள் கொடியோடு உலர்ந்து போகும் !

அதுபோல், நாட்டைக்   காக்கும் மன்னனின்  படைகள்  வெகுவாக வலுவிழந்து போனால்,  அம்மன்னனின்  நாடும் விரைவாக அழிந்து போகும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

பொருநர் சீர் = போர் வீரரின் சிறப்பு;  போரின்றி = போர் இல்லாவிடின்; வாடும் = குன்றிவிடும்; மரம் எல்லாம் = எல்லா மரங்களும்; கீழ் வீழ்ந்த = நிலத்துள் இறங்கிய; வேர் இன்றி = வேர் அறுந்துவிடின்; வாடும் = பட்டுப் போய்விடும்; நீள் நெய்தல் = நீண்ட நெய்தல் மலர்கள்; நீர் பாய் மடை = நீர் பாயும் மடையில்; இன்றி = நீர் அற்றுவிட்டால்; வாடும் = உலர்ந்து போய்விடும்;  மன்னர் சீர் = அரசனின் செல்வம் ; படையின்றி = நாட்டைக் காக்கும் படை இல்லாவிடின்; வாடிவிடும் = அழிந்து போய்விடும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------

போர் இல்லாவிடின்  படைவீரர்களின் சிறப்புக் கெடும்;  வேர் அற்றுவிடின் மரங்கள் பட்டுப் போய்விடும்;  நீர் அற்றுவிடின்  நெய்தல் உலர்ந்துவிடும்; படை இல்லாவிடின் வேந்தனது சீர்மை அழிந்து போய்விடும்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------