விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 20 நவம்பர், 2021

ஏதிலார் என்பார் இயல்பில்லார் - பாடல்.45 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (45)

------------------------

ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்

காதலா ரென்பார் தகவுடையார்மேதக்க

தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்

முந்துதான் செய்த வினை.

------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------------------

ஏதிலார் என்பார் இயல்பு இல்லார் யார்யார்க்கும்

காதலார் என்பார் தகவு உடையார்மேதக்க

தந்தை எனப்படுவான் தன் உவாத்தி  தாயென்பாள்

முந்து தான் செய்த வினை.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

------------------

நல்லியல்பு (நற்குணமும் நல்லொழுக்கமும்இல்லாத எந்த மனிதரும்  நமக்கு ஒருபோதும் உறவினர் ஆகார்அயலாரே !

நம்மீது  உண்மையான அன்பு வைத்திருக்கும் யாரும் நல்லியல்பு (நற்குணமும் நல்லொழுக்கமும்)    உடையவராகவே இருப்பார் !

மேன்மையான தந்தை எனப்படுபவர் நமக்கு நல்வழி காட்டி நடத்திச் செல்லும்  உயரிய  ஆசானாகவும் உறுதியாக இருப்பார் !

நம்மீது அளவற்ற அன்பும் நீங்காத பற்றும் வைத்திருப்பவள், நமது தாயாக அமைவது நாம் முன்பு செய்த நல்வினையாகும்

(குறிப்பு: இப்பாடலில் மூன்றாம் அடியில் வரும் உவாத்தி என்பது தமிழ்ச்சொல் அன்று ! இடைசெருகல் நிகழ்ந்துள்ளது ! “தன்னுவாத்திஎன்பதற்கு மாற்றாகதன்னாசான்என்று இருந்தாலும் தளைதட்டவில்லை. )

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------

ஏதிலார் என்பார் = அயலார் என்று  கருதப்படுபவர்கள்; இயல்பு இல்லார் = நல்லியல்பு இல்லாதவர்கள்; யார் யார்க்கும் = யாவர்க்கும்; காதலார் என்பார் = அன்பர் எனப்படுவார்; தகவு உடையார் = நல்லியல்பு உடையவர்கள்; மேதக்க = மேன்மையான; தந்தை எனப்படுவான் = தந்தை என்று சொல்லப்படுபவன்; தன் உவாத்தி = தன் ஆசிரியனாவான்தாய் என்பாள் = மேன்மையான தாய் என்று சொல்லப்படுபவள்; முந்து = முற்பிறப்பில்; தான் செய்த வினை = தான் செய்த நல்வினையாகும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------

ஒருவனுக்குநல்லியல்பு  (நற்குணம்) இல்லாதாவர் எல்லோரும் அயலார்; யார்க்கும் நல்லியல்பு உடையவரே அன்புடையார்மேலான தந்தை எனப்படுபவன் ஆசிரியனுக்குச் சமம்மேன்மையுடைய தாயென்பாள், முன்பு செய்த நல்வினைப் பயனாகும்.

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நான்மணிக்கடிகை” வலைப்பூ.

[தி.:2052,நளி(கார்த்திகை),04]

{20-11-2021}

------------------------------------------------------------------------------------------------