விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 27 நவம்பர், 2021

நன்றிசாம் நன்றறியாதார் முன்னர் -பாடல்.47 - வை.வேதரெத்தினம் உரை !

உலகியல்நெறி சார்  கருத்துகளை எடுத்துரைக்கும் நூல் நான்மணிக்கடிகை ! விளம்பி நாகனார் என்னும் பெரும்  புலவர் இயற்றிய   இந்நூல் சங்ககால இலக்கியங்களுள்  ஒன்று. பாடல் தோறும் நான்கு  கருத்துகளைப் புலவர் வலியுறுத்துகிறார். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (47)

---------------------------

நன்றிசாம்  நன்றறியா  தார்முன்னர்ச்சென்ற

விருந்தும்  விருப்பிலார்  முன்சாம்அரும்புணர்ப்பின்

பாடல்சாம்  பண்ணறியா  தார்முன்னர்ஊடல்சாம்

ஊடல்  உணரா  ரகத்து.

 

-------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்.

-------------------------------------------------

நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்ச்சென்ற

விருந்தும் விருப்பு இலார் முன் சாம்அரும் புணர்ப்பின்

பாடல் சாம் பண் அறியாதார் முன்னர்ஊடல் சாம்

ஊடல் உணரார் அகத்து.

 

-------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

---------------------

பிறர்  செய்யும் நன்மைகளின் பயன்களைப் பற்றிச் சிறிதும் அறியாதவரிடத்தில்    செய்ந்நன்றி உணர்வு என்பது  முற்றிலுமாக  அற்றுப்போகும் !

 

நெஞ்சில் அன்பு என்னும் உணர்வு  அறவே வற்றிப்போனவர் இல்லத்திற்குச்  செல்லும் விருந்தினரின் முகமலர்ச்சி  அக்கணமே  மடிந்துபோகும் !

 

பண்ணிசை பற்றிய அறிவு இல்லாத மாந்தரிடம், அரிய இசை நிரவல்களை உடைய  எந்தப் பாடலும் சுவைக்கும் வேட்கையின்றி  வீணாகவேபோகும் !

 

ஊடலைத் தொடர்ந்து வரும் கூடலில்தான் இன்பம் இருக்கிறது என்பதைச் சற்றும் அறியாத கணவரிடத்தில் ஊடலின் இனிமையே கெட்டுப்போகும் !

 

-------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

நன்று அறியாதார் முன்னர் = பிறர் செய்யும் நன்மைகளை நன்மை எனத் தெரிந்துகொள்ளாதவர்பால்; நன்றி சாம் = செய்ந்நன்றி கெடும்; விருப்பு இலார் முன் = அன்பு இல்லாதவரிடத்தில்; சென்ற விருந்தும் = போன விருந்தினரும்; சாம் = வாடுவர்; பண் அறியாதார் முன்னர் = பண் இசையை அறியாதவரிடத்தில்; அரும் புணர்ப்பின் = அரிய இசை நிரல்களையுடைய; பாடல் சாம் = பாட்டுக்கள் கெடும்; ஊடல் உணரார் அகத்து = ஊடுதலின் இனிமையைத் தெரியாத கணவரிடத்தில்;  ஊடல் சாம் = ஊடுதல் கெடும்.

 

 ----------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------

நன்மைகளைப் பற்றிய   அறிவு இல்லாதவரிடத்தில் செய்ந்நன்றியுணர்வு  அற்றுப்போகும். அன்பில்லாதவார் இல்லத்திற்குச் செல்லும் விருந்தினரின் முகம் வாடிப்போகும். பண்ணிசை அறியாதவரிடத்தில் பாடல்கள் பயனற்றுப் போகும்.  ஊடலைப் பற்றி அறியாதவரிடத்தில் ஊடலின் இனிமை கெட்டுப்போகும்.

 

------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),11]

{27-11-2021}

-----------------------------------------------------------------------------------------------