விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று ! இந்நூல்
சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
-----------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (55)
-------------------------------
எருதுடையான் வேளாளன், ஏலாதான்
பார்ப்பான்,
ஒருதொடையான் வெல்வது கோழி – உருவோடு
அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்
செறிவுடையான் சேனா பதி.
-----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------------
எருது உடையான் வேளாளன்; ஏலாதான்
பார்ப்பான்;
ஒரு தொடையால் வெல்வது கோழி – உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்
செறிவு உடையான் சேனாபதி.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
---------------------
காடுகழனியை உழுதுப் பண்படுத்திப் பயிர் செய்வதற்கு, சொந்தமாகத் தனக்கு உழவு மாடுகளை வைத்திருப்பவனே வேளாளன் எனப்படுவான் !
ஒருகாலால் பெடையை வயப்படுத்தும் சேவலைப் போல, அனைவரையும்
வயப்படுத்தி ஒற்றுமையுடன் வாழ்பவனே பார்ப்பான் எனப்படுவான் !
அழகுத் திருவுருவம் மட்டுமன்றி, குடும்பத்தில்
அனைவரையும் அரவணைத்து வாழ்வை நடத்திச் செல்லும் வல்லமை படைத்தவளே வாழ்க்கைத் துணைவி
எனப்படுவாள் !
அதுபோல், தனது படைவீரர்களுடன் இரண்டறக் கலந்து, உண்டு
உறைந்து, அவர்களது இன்ப துன்பங்களில் பங்கு கொள்பவனே மிகச்சிறந்த தளபதி எனப்படுவான் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
எருது உடையான் = உழவு மாடுகளை உடையவன் ; வேளாளன் = வேளாண்மை
செய்யும் உழவன் ஆவான் ; ஒரு தொடையால் = ஒரு காலால் ; வெல்வது = பெட்டை
கோழியைத் தன்வயப்படுத்துகின்ற ; கோழி = சேவற் கோழியைப் போல ; ஏலாதான் = எவர்
பகையையும் ஏற்றுக் கொள்ளலின்றி யாவரையும் வயப்படுத்தி ஒற்றுமையுடன் வாழ்பவன் ; பார்ப்பான் = பார்ப்பான்
எனப்படுவான் ; உருவோடு = நல்ல உருவ அழகோடு ; அறிவுடையாள் = வாழ்க்கையை
நடத்தும் நல்லறிவு உடையவள் ; இல்வாழ்க்கைப் பெண் = இல்வாழ்க்கைக்கு
உரிய துணைவி ; சேனை = தனது சேனையோடு ; செறிவு உடையான் = எஞ்ஞான்றும்
ஒன்றுபட்டு உடன் உறைதல் உடைவன் ; சேனாபதி = சேனைத் தலைவன் ஆவான் ; என்ப = என்று
பெரியோர் கூறுவர்.
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
உழவு மாடு உடையவன் வேளாளன்; ஒரு காலால்
பெட்டைக் கோழியைத் தன்வயப்படுத்தும் சேவலைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன்
பார்ப்பான்; அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணைவி ; சேனையோடு
ஒன்றுபட்டு உடன் உறைபவன் சேனாபதி !
-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),14]
{30-11-2021}
---------------------------------------------------------------------------------------------