விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (68)
-------------------------------
ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்
புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின்
அரிசியான் இன்புறூஉங் கீழெல்லாந் த்த்தம்
வரிசையான் இன்புறூம் மேல்.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர்
நிலத்துப்
புல்லினால் இன்புறூஉம் காலேயம் – நெல்லின்
அரிசியால் இன்புறூம் கீழ் எல்லாம்; த்த்தம்
வரிசையால் இன்புறூஉம் மேல்.
--------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
ஊன் உணவைச் சுவைத்து உண்பதில் கானகம்
வாழ் புலிகள் இன்பம்
காணும் !
ஈரநிலத்துப் பசும் புல்லைச் சுவைத்து உண்பதில் கால்நடைகள் இன்பம் காணும் !
வயிறு நிறையச் சுவையான சோற்றை உண்பதில் கீழ் மக்கள் இன்பம் காண்பர் !
மேன்மக்களோ, தம் தகுதிக்கேற்ற மதிப்புறு செயல்களைச் செய்வதில் இன்பம் காண்பர் !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
ஊன் உண்டு = ஊன் உணவை உட்கொண்டு ; உழுவை = புலி ; நிறம்
பெறூஉம் = மேனியமையும் ; நீர் நிலத்து = ஈரம்
பொருந்திய நிலத்திலுள்ள ; புல்லினான் = புல்லினை மேய்ந்து ; காலேயம் = ஆனிரைகள் ; இன்புறூஉம் = இன்பமடையும் ; நெல்லின்
அரிசியான் = நெல்லரிசிச் சோற்றினால் ; கீழ்
எல்லாம் = கீழ் மக்கள் எல்லாரும் ; இன்புறூஉம் = இன்பம்
காணுவர் ; மேல் = மேன்ம்மக்கள் ; தத்தம் = தங்கள்
தங்கள் தகுதிக்கு ஏற்ற ; வரிசையான் = மதிப்புச் செயல்களால் ; இன்புறூஉம் = இன்பமடைவர்.
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
புலி ஊன் உண்டு இன்பமுறும் ; ஆன் புல்லுண்டு
இன்பமுறும் ; கீழோர் சோறுண்டு இன்புறுவர் ; மேலோர்
மதிப்புணர்ந்து இன்புறுவர்.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),20]
{06-12-2021}
--------------------------------------------------------------------------------------------