விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
--------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (69)
---------------------------------
பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை – என் பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட் – கென்னும்
அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் – தவாவாம்
அவாவிலார் செய்யும் வினை.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
பின்ன ஆம் பின் அதிர்க்கும் செய்வினை – என் பெறினும்
முன்ன ஆம் முன்னம் அறிந்தார்கட்கு – என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம் – தவா ஆம்
அவா இலார் செய்யும் வினை.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------------
முன்னதாகவே ஆராய்ந்து கணிக்காத மனிதர்களுக்கு, ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்முன், அதனால்
ஏற்படக்கூடிய துன்பங்கள்
பற்றி அவை தொடங்கிய பின்பே
தெரியவரும் !
முன்னதாகவே ஆராய்ந்து, கணித்து
அச்செயலைத் தொடங்குபவர்களுக்கு, அதனால் ஏற்படக் கூடிய துன்பங்கள் பற்றி அவை உண்மையில் தொடங்குவதற்கு
முன்னதாகவே தெரிந்திருக்கும் !
ஒரு பொருளின் மேல் அவாவுற்று அதை விரும்பி அடைந்தவர்கட்கு, அவர்கள்
அறிவு எத்தனைத் தடுத்தாலும் சரி, அப்பொருள் மீது மேலும் மேலும் பற்று (அவா) உண்டாகவே
செய்யும் !
ஆனால், எந்தப் பொருள்கள் மீதும் பற்று வைக்காத அறிவார்ந்த பெரியோர்கள்
செய்கின்ற அறச்
செயல்கள் ஒருபோதும் கெட்டுப்போகாமல் எப்பொழுதும் நிலைபெற்று நிற்கவே செய்யும் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
பின் = தொடங்கிய பின்பு ; அதிர்க்கும் = நடுங்கச்
செய்யும் ; செய்வினை = செய்தொழில்கள் ; பின்ன ஆம் = முன்
ஆராயாதார்க்கு பின் தோன்றுவனவாம் ; என் பெறினும் = எப் பயனைப் பெறுவதானாலும் ; முன்னம் = தொடங்குவதற்கு
முன்னமேயே ; அறிந்தார்கட்கு = பின்
வருவனவற்றை ஆராய்வார்க்கு ; முன்ன ஆம் = அவை முன் தோன்றுவனவாம் ; அடைந்தார்க்கு = ஒரு பொருளை
விரும்பி அடைந்தவர்கட்கு ; உள்ளம் = அவர்கள் உள்ளம் ; என்னும் = எப்படியாயினும் ; அவா ஆம் = மேலும்
மேலும் அவா உடையதாகும் ; அவா இலார் = எப்பொருளினும் பற்றில்லாத
பெரியோர்கள் ; செய்யும் வினை = செய்யும் அறச் செயல்கள் ; தவா ஆம் = கெடாவாம்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் ஆராயாதவர்களுக்கு, அதன்
துன்பங்கள் தொடங்கிய பின் தெரியும் ; ஆராய்கின்றவர்களுக்கு அவை தொடங்கும் முன்னமேயே தெரியும் ;ஒரு பொருளை
விரும்பி அடைந்தவர்களுக்கு அதன்கண் எப்படியாயினும் பற்று உண்டாகும்; எப்பொருளினும்
பற்றில்லாதவர்கள் செய்யும் செயல்கள் ஒருபோதும் கெடமாட்டா.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
"நான்மணிக்கடிகை” வலைப்பூ,.
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),20]
{06-12-2021}
---------------------------------------------------------------------------------------------