விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (71)
---------------------------------
மகனுரைக்குந் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கு முண்நின்ற வேட்கை – அகல்நீர்ப்
புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு
வானம் உரைத்து விடும்.
--------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
--------------------------------------------------------------------------------------------
மகன் உரைக்கும் தந்தை நலத்தை; ஒருவன்
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை; – அகல்
நீர்ப்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து
இயல்பு
வானம் உரைத்துவிடும்.
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
ஊரார் பழிக்கும் வகையில் வாழாமல் ஒழுக்கத்துடன் வாழும் புதல்வனின்
வாழ்க்கை முறையே, அவனது தந்தையின் வளர்ப்பு நலத்தைக் காட்டிவிடும் !
ஒரு மனிதனின் நெஞ்சுக்குள் மறைந்து கிடக்கும் அவாவினை அவனது முகத்தில் வெளிப்படும் குறிப்புகளே
பிறருக்குக் காட்டிக்கொடுத்து
விடும் !
கழனியில் விளைச்சல் எப்படியிருக்கும் என்பதை அன்றாடம் வயலுக்குச்
சென்று கண்காணித்து வரும் உழவனே பிறருக்குச் சொல்ல முடியும் !
ஊரில் வாழும் மக்களின் நல்லியல்பு, தீயவியல்புகளை, அவ்வூரில்
பெய்யும் மழையின் அளவே உலகுக்கு உரைத்துவிடும் !
---------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
மகன் = புதல்வன் ; தந்தை நலத்தை = தன் தந்தையின் நன்மையை ; உரைக்கும் = தனது
நல்லியல்பினால் பிறருக்கு அறிவிப்பான் ; ஒருவன் முகம் = ஒரு மனிதனுடைய
முகம் ; உள் நின்ற வேட்கை = நெஞ்சினுள்
உள்ள விருப்பத்தை ; உரைக்கும் = பிறருக்குத் தனது குறிப்பினால்
அறிவிக்கும் ; அகல் = அகன்ற ; நீர்ப்புலத்து இயல்பு = நீரால்
விளையும் வயலின் இயல்பை ; புக்கான் உரைக்கும் = அந்த
நிலத்துக்கு உரியவன் அறிவிப்பான் ; நிலத்து இயல்பு = உலகத்தார்
இயல்பை ; வானம் உரைத்துவிடும் = மழையின்
நிலை அறிவித்துவிடும்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பினால் அறிவிப்பான் ; ஒருவன்
நெஞ்சிலுள்ள விருப்பத்தை அவன் முகக் குறிப்பே அறிவித்துவிடும் ; வயலின்
தன்மையை நில உரிமையாளன் அறிவித்துவிடுவான் ; நிலத்து
மக்கள் இயல்பை அந் நிலத்தில் பெய்யும் மழையின் நிலை அறிவித்துவிடும்.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),26]
{12-12-2021}
--------------------------------------------------------------------------------------------