விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
--------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (81)
-----------------------------
நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் பேதை
விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்
படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ
மாறுள் நிறுக்குந் துணிபு.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
நா அன்றோ நட்பு அறுக்கும்; தேற்றம்
இல் பேதை
விடும் அன்றோ வீங்கிப் பிணிப்பின்; அவா
படும் அன்றோ பல் நூல் வலையில்; கெடும்
அன்றோ
மாறுள் நிறுக்கும் துணிபு.
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
----------------------
சிந்திக்காமல் பதற்றத்தில் பேசுகின்ற பேச்சு, இறுக்கமான நண்பர்களின் நட்பையே கெடுத்துவிடும் !
கட்டாயம் ஏற்பட்டால், தெளிவில்லாத
அறிவிலிகள், தமது நற்செய்கைகளைக்கூடக்
கைவிட்டு விடுவர் !
அறிவு நூல்கள் பலவற்றையும் படிப்பதால், மாணாக்கர்களிடம்
குடிகொண்டிருக்கும் தீய அவா மடிந்துபோகும் !
பகைமையை அறிவற்ற துணிவுடன் எதிர்கொள்ள முனைபவன், இறுதியில்
அழிந்தே போவான் !
---------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
நா = பதறிப் பேசும் நாக்கு ; நட்பு
அறுக்குமன்றோ = நேசத்தைக் கெடுக்குமன்றோ ; வீங்கிப்
பிணிப்பின் = வற்புறுத்துக் கட்டாயப்படுத்தினால் ; தேற்றம்
இல் பேதை = தெளிவில்லாத அறிவிலி ; விடுமன்றோ = நற்செய்கைகளையும்
கைவிடுமன்றோ ; பல நூல் வலையின் = பல அறிவு
நூல்கள் என்னும் வலையால் ; அவா = அதன்கண் அகப்பட்ட நன்மாணாக்கரது தீய அவா ; படுமன்றோ = கெட்டு
ஒழியுமன்றோ ; மாறுள் = பகைமைக்கண் ; நிறுக்கும் துணிபு = ஒருவன்
வைக்கும் துணிவு எண்ணத்தால் ; கெடுமன்றோ = அவன் விரைவில் கெட்டுவிடுவான்
அல்லனோ ?
--------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
----------------------------
பதறிய நாக்கினால் நட்புக் கெடும் ; கட்டாயப்படுத்தினால்
தெளிவில்லாத பேதை மக்கள் நற்செய்கைகளைக் கைவிடுவர் ; நூல்களைப்
பயில்வதால் மாணாக்கர்க்கு அவாக் கெடும் ; பகைமைக்கண் துணிவு நிறுத்துதல், அங்ஙனம்
நிறுத்துவானுக்கே கேடாம்.
--------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
---------------------------------------------------------------------------------------------