விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (92)
------------------------------
பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்
பெட்டாங் கொழுகும் பிணையிலி – முட்டினுஞ்
சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினுங்
கொன்றான்மேல் நிற்குங் கொலை.
-----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-------------------------------------------------------
பட்டாங்கே பட்டு ஒழுகும் பண்பு உடையாள்; காப்பினும்
பெட்டு ஆங்கு ஒழுகும் பிணை இலி; – முட்டினும்
சென்றாங்கே சென்று ஒழுகும் காமம்; கரப்பினும்
கொன்றான் மேல் நிற்கும் கொலை.
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
--------------------
நல்லியல்புடைய பெண் பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் எதுவுமே
இல்லாவிடினும், (கற்பு நெறி என்னும்) மனவறுதி
தளர்ந்து பிற ஆடவனைக் காதலிக்கத் துணிய மாட்டாள் !
நற்பண்பில்லாத பெண் பெற்றோர்கள் எத்தனைக் கட்டுப்பாடுகளை
விதித்திருந்தாலும், (கற்பு நெறி என்னும்) மனவறுதி
குலைந்து பிற ஆடவனைக் காதலிக்க அஞ்சமாட்டாள் !
காமவயப்பட்ட ஒருவன், எத்தனை
இடையூறுகள் நேர்ந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், முன்பு
நிகழ்த்திய அதே காமச் செயல்களில் மீண்டும்
மீண்டும் ஈடுபடுவான் !
எத்துணை நுட்பமாகத் திட்டமிட்டுத் தடயங்கள் எதையும் விட்டுச்
செல்லாமல் செய்திருந்தாலும்
கூட, கொலையைச் செய்தவன்
மேல் அப்பழி ஒருநாள் வீழ்ந்தே தீரும் !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
--------------------------
பண்பு உடையாள் = நல்லியல்பு உடைய பெண் ; பட்டாங்கே = கற்புண்மைப்படியே ; பட்டு = ஒத்து ; ஒழுகும் = ஒழுகுவாள் ; பிணை
இலி = மனம் பொருந்துதல் இல்லாதவள் ; காப்பினும் = கணவன்
காவல் செய்யினும் ; பெட்டாங்கு = தான் விரும்பியபடியே ; ஒழுகும் = பிறரோடு
மருவி ஒழுகுவாள் ; காமம் = காமவியல்பு ; முட்டினும் = இடையூறு
உண்டாயினும் ; சென்றாங்கே = முன்பு சென்றபடியே ; சென்று
ஒழுகும் = பின்பும் சென்று நிகழும் ; கொலை = கொலைப்பழி ; கரப்பினும் = எவ்வளவு
மறைத்தாலும் ; கொன்றான்மேல் = கொலை செய்தவன் மேலேயே ; நிற்கும் = நிலைபெறும்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-------------------------------
நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டு
ஒழுகுவாள் ; நற்பண்பில்லாதவள் எத்தனை காவல் செய்யினும் தான் விரும்பிய
வாறே பிறரைக் காதலித்தொழுகுவாள் ; காமவியல்பு எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் முன் நிகாழ்ந்தபடியே
நிகழும் ; கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயே வெளிப்படும்.
-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக் கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
-----------------------------------------------------------------------------------------------