விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 13 டிசம்பர், 2021

வன்கண் பெருகின் வலிபெருகும் - பாடல்.93 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (93)

------------------------------

வன்கண் பெருகின் வலிபெருகும் பான்பொழியார்

இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற

மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கட்

கயம்பெருகிற் பாவம் பெரிது.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------

வன் கண் பெருகின் வலி பெருகும்; பால் மொழியார்

இன் கண் பெருகின் இனம் பெருகும்; சீர் சான்ற

மென் கண் பெருகின் அறம் பெருகும்; வன் கண்

கயம் பெருகின் பாவம் பெரிது.

------------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

----------------------

அச்சம் குடிகொண்டால் ஒரு மனிதன் தன் வலிமையை இழப்பான்; அவனிடம் அஞ்சாமைக் குணம் உயிர்ப்புற்றால் அஃது அவனது வலிமையைப் பன்மடங்கு பெருக்கிவிடும் !

இல்லறவாழ்வில் மனைவியின் பங்கு மிகப் பெரியது. மனைவியிடம் கனிவான உள்ளமும் இனிமையான மொழியும் எப்போதும் நிறைந்து விளங்கினால், சுற்றத்தார் எண்ணிக்கை பெருகும் !

உலக மக்களிடையே சிறப்புமிக்க செவ்விய  வாழ்வை உறுதிப்படுத்தும் அருளுணர்வு நித்தமும் பெருகுமானால், உலகில் அறச் செயல்களும் நித்த நித்தம் பெருகித் தழைக்கும் !

நாட்டில் கொடுங்கோல் ஆட்சியும், ஆணவமும் கீழ்மைத்தனமும் வரம்புகடந்து  நிலவுமானால், தீயவினைகள் கட்டுக்கடங்காது பெருகி மக்களை அடிமைப்படுத்தித்  துன்புறுத்தும் !

------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

வன்கண் பெருகின் = அஞ்சாமை மிகுந்தால் ; வலி பெருகும் = வலிமையும் ஒருவனுக்கு மிகும் ; பால் மொழியார் = பால் போலும் இனிய சொல்லையுடைய மனைவியர்பால் ; இன்கண் = இனிய கண்ணோட்டம் ; பெருகின் = பெருகுமானால் ; இனம் பெருகும் = சுற்றத்தார் பெருகுவர் ; சீர் சான்ற = சிறப்பு மிக்க ; மென் கண் = அருள் தன்மை ; பெருகின் = மிகுமானால் ; அறம் பெருகும் = அறவினைகள் மிகும் ; வன்கண் = கொடுமையை உடைய ; கயம் பெருகின் = கீழ்மைத் தனம் மிகுமானால் ; பாவம் பெரிது = தீவினைச் செயல்கள் மிகும்.

------------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------

அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும் ; மனையாள்மாட்டு கண்ணோட்டம் (கனிவுள்ளம்) மிகுந்தால் இனம் பெருகும் ; அருளிரக்கம் மிகுந்தால் அறம் மிகும் ; கீழ்மைக் குணம் மிகுந்தால் தீவினை மிகும்.

-----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

-----------------------------------------------------------------------------------------------