விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (77)
-------------------------------
தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்
சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் – நல்லார்
விடுகென்ற போழ்தே விடுக உரியான்
தருகெனின் தாயம் வகுத்து.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்
சொல்க என்ற போழ்தே பிணி உரைக்கும் – நல்லார்
விடுக என்ற போழ்தே விடுக; உரியான்
தருக எனின் தாயம் வகுத்து.
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
நண்பர்களுக்கு இடையே பொய்மை என்னும் பொல்லாங்கு புகுந்துவிட்டால், அவர்களைப்
பிணைத்து வைத்திருக்கும் நட்புணர்வு அக்கணமே அகன்றுவிடும் ! பொய்மை அழிவுக்கே வழிவகுக்கும் !
உனக்கு என்ன
செய்கிறது சொல் என்று மருத்துவன் கேட்கும் போது, தனது
பிணியைப் பற்றிய எல்லா உண்மைகளையும் பிணியாளன் அவரிடம் சொல்லிவிட வேண்டும் ! இல்லையேல்
தவறான கணிப்புக்கு இட்டுச் செல்லும் !
இந்தத் தீயபழக்கம், வேண்டாம், விட்டுவிடு
என்று நம் நலம்நாடும் நல்லவர்கள் நம்மிடம் சொன்னால், அப்பழக்கத்தைக்
அக்கணமே விட்டுவிட வேண்டும் ! இல்லையேல் உடல்நலம் உருக்குலைந்து போய்விடும் !
தன் பங்கைத் தனக்குக் தந்திடுமாறு பங்காளி கேட்டால், அக்கணமே
அவன் பாகத்தைப் பிரித்து அவனிடம் கொடுத்துவிட
வேண்டும் ! இல்லையேல் வழக்குக்கு வழிவகுத்து உறவைச் சீர்குலைத்துவிடும் !
---------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
--------------------------
பொய் பிறந்த போழ்தே = நண்பர்களுக்குள்
பொய் உண்டான போதே ; தூர்ந்து ஒழியும் = நட்புக்
கெட்டுப் போகும் ; மருத்துவன் = மருந்து கொடுப்போன் ; சொல்க
என்ற போழ்தே = சொல் என்று சொன்ன போதே ; பிணி
உரைக்கும் = நோயாளன் பிணியை உரைப்பான் ; பெரியார் = நல்லார் ; விடுக என்ற போழ்தே = ஒரு செயலை
விட்டிடுக என்று சொன்ன போதே ; விடுக = அச்செயலை விட்டிடுக ; உரியான் = ஒரு பொருளுக்கு
உரியவன் ; தருக என்றல் = கொடு என்றால் ; தாயம் = அவன்
பாகத்தை ; வகுத்து (விடுக) பங்கிட்டுக் கொடுத்து விடுக.
---------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
---------------------------
பொய் பிறந்த போதே நட்புக் கெடும் ; மருத்துவன் “சொல்” என்ற
போதே பிணியாளன் நோய் பற்றிச் சொல்வான் ; பெரியார் ஒரு செயலை விடுக
என்ற போதே அற விட்டொழிக ; உரியான் தருக என்ற போதே அவன் பங்கை வகுத்துத் தந்து விடுக.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
---------------------------------------------------------------------------------------------