விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (78)
--------------------------------
நாக்கி னறிப இனியதை – மூக்கினான்
மோந்தறிப வெல்லா மலர்களும் நோக்குள்ளும்
கண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து
எண்னினான் எண்ணப் படும்.
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------------
நாக்கின் அறிப இனியதை; – மூக்கினால்
மோந்து அறிப எல்லா மலர்களும்; நோக்கு
உள்ளும்
கண்ணினால் காண்ப அணியவற்றை; தொக்கு
இருந்து
எண்ணினால் எண்ணப்படும்.
.----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
உண்பதற்கினிய உணவுப் பண்டங்களின் அரிய சுவையை மக்கள் நாவினாற்
சுவைத்து அறிவார்கள் !
மனங்கவரும் வண்ண வண்ண மலர்களின் நறுமணத்தை மக்கள் மூக்கினால் மோந்து அறிவார்கள் !
காட்சிக்கு இனியதான நேர்த்தி மிக்க பொருள்களின் கவினழகை மக்கள் கண்களால் கண்டு அறிவார்கள் !
உணர்வதற்கு அரிய கருத்துக்களை அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி
இருந்து அறிவினால் ஆராய்ந்து அறிவார்கள் !
----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------------
இனியதை = சுவைக்கு இனியதை ; நாக்கின்
அறிப = நாவாற் சுவைத்து அறிவார்கள் ; எல்லா
மலர்களும் = எல்லா மலர்களையும் ; மூக்கினான் = மூக்கினால் ; மோந்து
அறிப = யாவரும் மோந்து அறிவார்கள் ; அணியவற்றை = காட்சிக்கு
அழகான பொருள்களை ; நோக்கு உள்ளும் = பார்வை
உண்டென்று கருதப்படும் ; கண்ணினால் காண்ப = கண்ணாற்
பார்ப்பார்கள் ; தொக்கு இருந்து = அறிஞர்கள்
கூடியிருந்து ; எண்ணினான் = அறிவினால் ; எண்ணப்படும் = உணர்ச்சிகள்
ஆராயப்படும்.
---------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
--------------------------------
சுவைக்கு இனியதை யாவரும் நாவினாற் சுவைத்து அறிவர் ; மலர்
மணங்களை மூக்கினால் மோந்து அறிவர் ; அழகிய பொருள்களைக் கண்ணினால் கண்டு அறிவர் ; உணர்வருங்
கருத்துக்களை அறிஞர் ஒன்று கூடியிருந்து அறிவால் ஆராய்ந்து அறிவர்.
---------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
---------------------------------------------------------------------------------------------