விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
--------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (83)
---------------------------------
நலனும் இளமையு நல்குரவின் கீழ்ச்சாம்
குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம்
வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்
பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு.
----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
நலனும் இளமையும் நல்குரவின் கீழ் சாம்;
குலமும் குடிமையும் கல்லாமைக் கீழ் சாம்;
வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம்; பரம்
அல்லாப்
பண்டத்தின் கீழ் சாம் பகடு. .
---------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
------------------------
அழகும் இளமையும் வாழ்வில் சுவைத்து மகிழவேண்டியவை. ஆனால்
நல்குரவு என்னும் வறுமையில் பிடியில் மனிதன் அகப்பட்டுப் போனால், இவை இரண்டுமே
மங்கிப் போகும் !
குலத்துக்கான உயர்வும், ஒழுக்கமும்
அந்தக் குலத்தில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பெருமை தரக்கூடியவை. ஆனால்
கல்லாமை என்னும் புதைசேறு இவை இரண்டையும் அழித்துவிடும் !
நீர்வளம்தான் நெற்பயிருக்கு ஊட்டம் தருவது. ஆனால்
நீர் வரத்து இல்லாத குளத்தை (ஏரியை) நம்பிச் செய்யப்பட்டிருக்கும் வேளாண்மை பொய்த்துப் போகும்; நெற்பயிர்
சாவியாகும் !
வண்டிச் சுமைகளை இழுத்துச் செல்லும் எருதுகளின்
திறனுக்கும் ஒரு வரம்புண்டு. அளவு
கடந்து ஏற்றினால், சுமை தாங்க முடியாமல் அந்த எருதுகள் மூச்சுத் திணறி இறந்துபோகும் !
------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
------------------------------
நலனும் = அழகும் ; இளமையும் = இளமை இயல்பும் ; நல்குரவின் கீழ் = வறுமைக்கண் ; சாம் = மங்கும் ; குலனும் = குலத்துயர்வும் ; குடிமையும் = குலத்து
ஒழுக்கமும் ; கல்லாமைக் கீழ் = கல்லாமைக்கண் ; சாம் = கெடும் ; வளம்
இல் = நீர் வருவாய் இல்லாத ; குளத்தின்
கீழ் = ஏரியின் கீழ் விளையும் ; நெல்
சாம் = நெற்பயிர் சாவியாம் ; பரமல்லா = சுமத்தல்
ஆற்றாத ; பண்டத்தின் கீழ் = சுமைப்பொருளின்
கீழ் தாங்கும் ; பகடு சாம் = எருதுகள் சாகும்.
-----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
----------------------------------
அழகும் இளமையும் வறுமையிற் கெடும் ; குலத்துயர்வும்
குலத்தொழுக்கமும் கல்லாமையிற் கெடும் ; வருவாயற்ற ஏரியின் கீழ்
விளையும் நெற்பயிர் சாவியாம் ; சுமக்கமுடியாத சுமையைத் தாங்கும் எருதுகள் சாகும்.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
----------------------------------------------------------------------------------------------