விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ! இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு கருத்துகளை எடுத்துரைக்கிறார் இந்தத் தமிழறிஞர். இதோ உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------------
பாடல் எண்: (85)
--------------------------------
கல்லா ஒருவர்க்குத் தம் வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்.
-----------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------
கல்லா ஒருவர்க்குத் தம் வாயின் சொல் கூற்றம்;
மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே
இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள்..
----------------------------------------------------------------------------------------------
கருத்துரை:
-----------------------
கல்வியறிவு இல்லாத மூடனின் வாயிலிருந்து வெளிப்படும் பொய், குறளை
போன்ற தீய சொற்களே அவனது வாழ்வுக்கு அழிவைத் தரும் கூற்றமாக அமையும் !
எத்துணை வளமான மண்ணில் வளர்ந்தாலும், மெல்லிய
இலைகொண்ட வாழைக்கு அது ஈனும் குலையே அதற்கு அழிவைத் தரும் கூற்றமாக அமையும் !
தீயவை செய்வதற்கு அஞ்சாது தீயவை செய்துவரும் ஒருவனுக்கு அவன்
செய்த தீயவையே அவன்
வாழ்வை அழிக்கும் கூற்றமாக அமையும் !
அதுபோல், இல்லற வாழ்வில் கணவனுக்கு நேர்மை இல்லாத மனைவி அமைந்தால்
அம்மனைவியே அவனது
வாழ்வை அழிக்கும் கூற்றமாக அமைவாள் !
-----------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
------------------------------
கல்லா ஒருவர்க்கு = கல்வியறிவு
இல்லாத ஒருவருக்கு ; தம் வாயின் சொல் = தமது
வாயிலிருந்து வரும் சொல்லே ; கூற்றம் = கூற்றுவனாகும் ; மெல் இலை = மெல்லிய
இலைகளை உடைய ; வாழைக்கு = வாழை மரத்துக்கு ; தான்
ஈன்ற காய் = தான் வெளிவிட்ட குலையே ; கூற்றம் = கூற்றுவனாகும் ; அல்லவை
செய்வார்க்கு = தீயவை செய்யும் மக்கட்கு ; அறம்
கூற்றம் = அறக் கடவுளே கூற்றுவனாம் ; இல்லத்து = வீட்டில்
இருந்து கொண்டு ; தீங்கு ஒழுகுவாள் = கற்புக்
கேடாக மறைவாய் ஒழுகும் மனைவி ; கூற்றமே = தன்னைக் கொண்ட கணவனுக்குக் கூற்றுவனேயாவாள்.
----------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
---------------------------------
கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர் வாயிற் பிறக்கும் சொல்லே
அவர்களுக்குக் கூற்றுவனாம் ; வாழை மரத்துக்கு அஃது ஈனும் குலையே கூற்றுவனாம் ; தீயவை
செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம் ; இல்லத்திலிருந்து கொண்டு
மறைவாய்க் கற்புக் கெடுபவள் கொண்டானுக்குக் கூற்றுவனேயவாள்.
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
”நான்மணிக்கடிகை” வலைப்பூ,
[தி.ஆ:2052,நளி (கார்த்திகை),27]
{13-12-2021}
----------------------------------------------------------------------------------------------