விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 13 டிசம்பர், 2021

நீரான் வீறெய்தும் விளைநிலம் - பாடல்.86 - வை.வேதரெத்தினம் உரை !

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று !  இந்நூல் சங்ககாலத்தைச் சேர்ந்தது ! பாடல் தோறும் நான்கு  கருத்துகளை  எடுத்துரைக்கிறார் இந்தத்  தமிழறிஞர்இதோ உங்களுக்காக ஒரு பாடல் !

---------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (86)

-------------------------------

நீரான் வீறெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்

பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம்கொண்டாளும்

நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்

ஆடலாற் பாடு பெறும்.

-----------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------------

நீரால் வீறு எய்தும் விளை நிலம்; நீர் வழங்கும்

பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; – கொண்டு ஆளும்

நாட்டால் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன்

ஆடலால் பாடு பெறும்.

-----------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

தண்ணீர்ப் பாய்ச்சலால் (பாசனத்தால்) பயிர் விளையும் நிலம் செழிப்படையும் !

கடல் கொடுக்கும் முத்து முதலிய பண்டங்களால் நகரங்கள் பெருமை பெறும் !

தான் கைப்பற்றி ஆளும் நாட்டு மக்களின் நற்செயல்களால் மன்னர் சிறப்படைவர் !

வல்லவன் ஒருவனின் நடிப்புத் திறனால் நாடகத்தின் காட்சிகள்  மேம்படும் !

-----------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------

நீரான் = தண்ணீர் பாய்ச்சுவதால் ; விளைநிலம் = பயிர் விளையும் நிலம் ; வீறு எய்தும் = செழிப்படையும் ; நீர் வழங்கும் = கடல் கொடுக்கும் ; பண்டத்தால் = முத்து முதலிய பொருள்களால் ; பட்டினம் = நகரம் ; பாடு எய்தும் = பெருமை பெறும் ; கொண்டு = தங்கீழ்க் கைப்பற்றி ; ஆளும் = அரசாளும் ; நாட்டான் = நாட்டினால் ; மன்னவர் = அரசர் ; வீறு எய்துவர் = சிறப்படைவர் ; ஒருவன் = வல்லவன் ஒருவன் ; ஆடலால் = ஆடுதலால் ; கூத்து = நாடகம் ; பாடு பெறும் = மேன்மை அடையும்.

-----------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

--------------------------------

விளைநிலம் நீர் பாய்ச்சலால் செழிப்படையும் ; பட்டினங்கள் கடல் வளத்தால் பெருமையுறும் ; மன்னர் தம் ஆளும் நாட்டினால் சிறப்படைவர்வல்லான் ஒருவன் நடிப்பால் கூத்து மேம்படும்.

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை;

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”நான்மணிக்கடிகை” வலைப்பூ,

[தி.:2052,நளி (கார்த்திகை),27]

{13-12-2021}

----------------------------------------------------------------------------------------------